திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட தொலைபேசி ஊடாக ஒருவருக்கு அழைப்பு எடுத்து பிணை பெற 300 இலட்சம் பணம் கேட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (19) கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் அறிவித்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு இன்று (19) நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த உண்மைகளை அறிவித்தனர்.
சந்தேகநபர் சிறைச்சாலையில் அனுமதியின்றி வைத்திருந்த தொலைபேசி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பணம் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது உதவியாளர் இசுரு பண்டார ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றம் கலைக்கப்படும் நேரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது.
குறித்த நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இரண்டரை வருடங்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இருபத்தி இரண்டாவது திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை எதிர்ப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனவே இருபத்தி இரண்டாவது திருத்தத்தை நிறைவேற்றினால் பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரின் ஆதரவையும் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருபத்தி இரண்டாவது திருத்தம் காலத்தின் தேவை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அதனை ஏற்றுக் கொள்வதற்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவியும் , இளைஞனும் காதல் தொடர்பினை கொண்டிருந்துள்ளனர். இளைஞன் போதைக்கு அடிமையானதால் , மாணவி காதல் தொடர்பினை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவியும் , அவரது சகோதரியும் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களை முடித்துக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, குறித்த இளைஞன் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் மாணவியை வழிமறித்து அருகில் இருந்த கட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளார்.
அதன் போது அங்கிருந்து தப்பித்த மாணவியின் சகோதரி உறவினர்கள் , அயலவர்களை குறித்த பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
அதனை அவதானித்த குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை: காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
அரசாங்க அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க.) இணைவதற்கான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேச்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதற்கு மத்தியஸ்தம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகிக்கும் பொதுஜன பெரமுன பெரமுனவின் பலமான உறுப்பினர்கள் சிலரையும் அண்மையில் உறுப்பினர் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.
கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பொதுஜன பெரமுன அமைச்சர்கள் பலரையும் அவர் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உறுப்பினர் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயேச்சை உறுப்பினராக செயற்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்வாறானதொரு பிரச்சினை இருப்பதாக பரீட்சை திணைக்களம் அமைச்சுக்கு தெரிவிக்கவில்லை எனவும் தற்போது பெறுபேறுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"மாணவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. தேர்வு மிகவும் நெருக்கடியான நேரத்தில் நடைபெற்றது. எரிபொருள் பற்றாக்குறை, ஆசிரியர்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை. தேர்வு மையங்களுக்கு ஆசிரியர்களை முறையாக நியமிக்க முடியாததாலும், அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாலும், அந்த பாடசாலையில் விண்ணப்பித்தவரின் புகைப்படத்தை அதிபர் சான்றிதழ் அளித்திருந்தால் பிரச்னை இல்லை. தற்போது அடையாள அட்டைகள் எதுவும் இல்லை. உரிய நேரத்தில் முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.
செப்டம்பர் 17ஆம் திகதி முதல் காணாமல் போன கடற்படைக் கப்பலுடன் ஆறு கடற்படை வீரர்களுடன் தொடர்பாடல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
ஐந்து மாலுமிகள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொண்ட கடற்படைக் குழுவுடனான கப்பல் செப்டம்பர் 17 முதல் தொடர்பை இழந்ததை அடுத்து கடற்படை தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
செப்டம்பர் 16 அன்று தங்காலை கடற்கரையில் வழக்கமான ரோந்து பணிக்காக கப்பல் அனுப்பப்பட்டது.
காணாமல் போன கப்பல் தொடர்பில் அண்டை நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி மீண்டும் மறுத்துள்ளார்.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலைமையால் ஏனைய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் மேலும் தாமதமாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.