web log free
December 24, 2024
kumar

kumar

கோட்டா கோ ஹோம் போராட்டத்தின் பின்னணியில் நிரந்தரமாக மூன்று வகையான குழுக்கள் இருந்ததாகவும், மூன்றாம் தரப்பு யார் என்பதை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஏசியன் மிரருக்கு தெரிவித்தார்.

மூன்றாவது தரப்பினர் தொடர்பில் தன்னிடம் ஆதாரம் இல்லை என்றும், இரண்டு தரப்பினர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உறுதியாக இருந்ததாகவும், அதில் ஒன்று  ரணில் விக்கிரமசிங்க என்றும், அந்தப் போராட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியதாகவும் எம்.பி. கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்சி சார்பற்ற பொது மகன்கள், தெரியாமலும் சிலர் அறிந்தும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததா அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாமல் கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த ஓரிருவர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தனிப்பட்ட முறையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அடுத்த நாட்டின் தலைமைத்துவத்தை பெறும் நோக்கில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மொட்டு கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீட்டைப் பெறுவதே இந்த சந்திப்பின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடல் 22வது திருத்தம் தொடர்பில் மாத்திரம் பேசப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதுகாப்புத் தலைவர்களின் ஓய்வு மற்றும் புதிய நியமனங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதாக அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

புதிய அரசியல் மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று, ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த புதிய கூட்டணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா, காலி, பொலன்னறுவை, பதுளை, கேகாலை போன்ற மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டு முக்கியஸ்தர்கள் குழுவொன்று புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொகுதிகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏசியன் மிரர் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ஏசியன் மிரர் ஆசிரியர் பீடம் மகிழ்வடைகிறது. 

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உனவட்டுன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த 45 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரும் ஹபராதுவ பொலிஸாரும் இணைந்து இன்று(23) காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர்.

நிதி மோசடி தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் பின்னணியில் செயற்பட்டவர் வர்த்தகர் ஜானகி சிறிவர்தன என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிகப் பெரிய அரசியல் குடும்பம் ஒன்று ஜானகி சிறிவர்தனவை சிறைக்குச் செல்லாமல் பாதுகாத்து வருவதாகவும் அவர் சுதந்திரமாக இருக்கும் வரை இந்த விசாரணைகளை முறையாக மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாம் நீதியமைச்சராக இருந்திருந்தால் விஜயதாச ராஜபக்ஷவைப் போன்று திலினியின் வழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தனது மகனை அனுப்பியிருக்க மாட்டேன் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவ்வாறான அனைத்து மோசடிகளும் இடம்பெறும் போது மத்திய வங்கி கண்களை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்த அவர், பணம் இழக்கப்படவில்லை என்றும், மறைத்து வைக்கப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட ராஜபக்ச ஒருவர் இருப்பாரா என்பதை கூற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அந்தளவுக்கு ராஜபக்சக்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளதாக எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நேரத்தில் தமக்கு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி கிடைக்காது எனவும், களத்தில் இறங்கி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தற்போது சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பட வேண்டும் எனவும் அதன் பின்னர் ராஜபக்சவுடன் ஏற்பட்ட கோபம் முடிவுக்கு வரும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கஞ்சா செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் எதிர்வரும் கூட்டங்களில் இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், நாட்டின் வருமான மட்டத்தை உயர்த்தும் வகையில் இரவுப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 178 மேலதிக வாக்குகளால் நேற்று (21) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரே ஒரு வாக்கும் பதிவாகின.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை விசேட அம்சமாகும்.

வாக்கெடுப்பின் போது சபையில் இருந்த ஆளுங்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் (சமகி ஜன பலவேகய, ஜாதிய ஜன பலவேகய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நேரத்தில், அரசு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாற்பத்தாறு பேர் சபையில் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோககே, ரோஹித அபேகுணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், சஞ்சீவ எதிரிமான்ன, பவித்ரா வன்னியாராச்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், த.தே.கூ. எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்துகொள்ளவில்லை.

உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அரசாங்கத்தின் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

விவாதத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர்.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களின் பதவி உரிமையை நீக்குதல், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்குதல், இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குதல் போன்ற பல விதிகள் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் இடம்பெற்றுள்ளன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd