web log free
September 20, 2024
kumar

kumar

அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்மொழியப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு தூதுவர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்க பதவியை ஏற்றுக்கொண்டால் அது ஒப்பந்தம் போடுவது போல் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.

ரஞ்சன் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியின் நிபந்தனை மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (28 ஆம் திகதி) யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27) ஆரம்பமாக உள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இதுவரை ஒரு ரி20 போட்டி நடைபெற்றுள்ள நிலையில், அந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை விளையாட வாய்ப்பு உள்ளதாக அணித்தலைவர் தசுன் ஷானக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்

அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பெட்ஷீட் ஒன்றை திருடிய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை 2022 செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மன்னிப்பின் பிரகாரம் அவருக்கு அரசியல் உரிமைகள் கிடையாது.

"ரஞ்சன் ராமநாயக்க 34 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிக்கப்பட்டுள்ளார், இது நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு, அரசியல் உரிமைகளுடன் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைப் பெறுவதற்கு அரசியலமைப்பின் 34 (2) வது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்" என்று நீதி அமைச்சின் அதிகாரி ரகித ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் உரிமைகளுடன் கூடிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் நபர், ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு வழங்கப்படாவிட்டால், 7 ஆண்டுகளுக்கு அரசியல் மற்றும் குடிமை உரிமைகளை இழக்க நேரிடும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறையில் இருந்தபோது எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு முழு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்தார், இது அவர்கள் விடுதலையானவுடன் தேர்தலில் போட்டியிட அனுமதித்தது.

2019ஆம் ஆண்டு ரஞ்சன் ராமநாயக்கவை அவமதித்த குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது அவருக்கு ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பை வழங்கினார்.

இதேவேளை, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து அவரது முன்னாள் கட்சி உறுப்பினர்களுக்கான குறிப்புடன் ட்வீட் செய்திருந்தார்.

“எனது அரசியல் முடிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உங்கள் பங்கைச் செய்யும்போது, ​​அவற்றைப் படங்களிலும் ஊடகங்களிலும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, எனது நண்பர் ரஞ்சன் @ ராமநாயக்கர் சுதந்திரமாக இருப்பதில் மகிழ்ச்சி. அதுதான் எனக்கு முக்கியம்.” ஹரின் பெர்னாண்டோ #betrue #fakeconcern என்ற ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீட்டை எரித்து நாசம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி நேற்று (26) நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவர் தனது இரண்டு குழந்தைகளான சஞ்சய் ஜெயக்கொடி மற்றும் அமாயா ஜெயக்கொடி ஆகியோருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 505 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீயில் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை துலாஞ்சலி ஜெயக்கொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு ஜூலை 9ஆம் திகதி வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல பெறுமதியான புத்தகங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

சம்பவத்துடன் துலாஞ்சலி ஜயகொடிக்கு தொடர்பு இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

போதுமான எரிபொருள் இருப்பு இல்லாத  காரணத்தினால் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அதன்படி சுமார் 3 நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும்  வரிசைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோக சங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாட்டுக்கு வந்துள்ள சுப்பர் டீசல் கப்பலின் டீசல் சரக்குகளை இறக்கும் பணியும் நடைபெற்று வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மொட்டுக் கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும், மொட்டு கட்சி வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதமரும் இன்றும் நாட்டை நிர்வகிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெறும் என்றும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு நெல் கொள்வனவு செய்தால் அரிசியின் விலை இரட்டிப்பாகும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் அமைச்சரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நெல் விலையை குறைக்காவிட்டால், அரிசி விலையை பராமரிப்பது கடினம் என்றும்,  அரிசி விலை இருமடங்காக உயரும் எனவும் பெரும்பான்மையான அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபையை விட குறைந்த விலைக்கு தனியார் நெல் கொள்முதல் செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளதை அடுத்து வெலிக்கடை சிறையில் இருந்து ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டார். 

எதிர்வரும் காலங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வௌியிடவோ அல்லது அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் தெரிவித்த கருத்துகளுக்காக கடந்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.