நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு 65 வருடங்கள் கடந்துள்ள போதிலும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சாசனம் மற்றும் அது தொடர்பான சட்டதிட்டங்களுக்கு அமைவாக தேசியக் கொள்கையொன்றைத் தயாரிக்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பராமரிப்புக் கொள்கைக்காக 2019 மார்ச் 6 ஆம் திகதி அமைச்சர்கள் குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட போதிலும், இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி வரை கொள்கை அளவில் செயல்படுத்தப்படவில்லை.
தேசிய விதிமுறைகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்க, அனாதைகள், கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து குழந்தைகளின் உரிமைகளையும் அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்குவதே திணைக்களத்தின் நோக்கமாகும்.
இங்கு மாற்று பராமரிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த 08 மாகாண செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் கணக்காய்வுக்கு தெரிவித்துள்ளது.
ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன், புகையிலை போதைப்பாக்குடன், வந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
குறித்த மாணவன் புகையிலை போதைப்பாக்குடன் வந்திருந்ததை ஆசிரியர் ஒருவர் கண்டுள்ளார். இது தொடர்பில் பாடசாலை அதிபர் ஆசிரியர் தெரியப்படுத்தியிருந்தார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சிறுவனின் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற ஊர்காவல்துறை சிறுவர் பெண்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவரை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, அவரை அச்சு வேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தன்னை சந்தேகநபராகக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட நோட்டீசை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியை சந்தேக நபராக பெயரிட்ட கோட்டை நீதவான் நீதிமன்றம், 2022 ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மைத்திரிபால சிறிசேனவை உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களில் சிறீசேனாவை குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடுமாறு கோரிய தனிப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான தேசிய கத்தோலிக்க கமிட்டியின் உறுப்பினர் ஒருவரால் இந்த தனியார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு – அவிசாவளை வீதியில் வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையிலான வீதி வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படும்.
சனிக்கிழமை (01) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை 05.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் தமது தேவைகளுக்காக வீதியைப் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும்.
கடுவெலயிலிருந்து ஒருகொடவத்தை வரையிலான நீர் குழாய்களின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவோருக்கு பின்வரும் மாற்று வழிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வெல்லம்பிட்டி சந்தி ஊடாக கொலனாவ ஊடாக கொதட்டுவ நகருக்கு சென்று அங்கிருந்து கொட்டிகாவத்தை சந்தியை அடைந்து அவிசாவளை வீதியில் பிரவேசிக்க முடியும்.
அவிசாவளையில் இருந்து வரும் வாகனங்கள் கொத்தடுவ நகரை கொட்டிகாவத்தை சந்தி வழியாக சென்று கொலன்னாவை வழியாக வெல்லம்பிட்டி சந்திக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
172 மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் நான்கு பயணிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் 160 மில்லியன் ரூபா பெறுமதியான 7.5 கிலோ தங்கத்துடன் மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இன்று அதிகாலை ஓமானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தங்கத் தகடுகளை தங்களுடைய பயணப் பொதிக்குள் மறைத்து வைக்க முற்பட்டதையடுத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அதே விமானத்தில் வந்த மற்றுமொரு பயணி ஒரு கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 இல் வெற்றி பெறும் அணி $1.6 மில்லியன் பரிசுத் தொகையைப் பெறும் என்று ஐசிசி அறிவித்தது
மேலும், இறுதிப் போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதேபோல், அரையிறுதியில் வௌியேறும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளன.
சுமார் ஒரு மாதக் காலமாக இடம்பெறவுள்ள இப்போட்டியில் மொத்தமாக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நெருக்கடி நிலைமையில், இலங்கை மக்களை கருத்தில் கொண்டு சீனாவின் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார். இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு நட்புறவை வெளிப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையின் போது சீனாவினால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளுக்கு நன்றிகளை தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர், எதிர்காலத்திலும் அவ்வாறான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கடன் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ள நிலையில், இந்த நகர்வுகளில் மிக முக்கியமான இருதரப்பு கடன் வழங்குநர்களின் ஒத்துழைப்புகள் அவசியம் என்பது குறித்தும், இந்த விடயத்தில் இலங்கை மக்களை கருத்தில் கொண்டு சீனாவின் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், சீனாவின் வாழ்வாதார உதவிகள் மற்றும் பொதுவான நலன்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். இலங்கையின் நெருக்கடி நிலைமைகளில் சீனா எப்போதுமே இலங்கைக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கும் எனவும், சீனா எப்போதுமே இலங்கைக்கு நல்ல நண்பன் எனவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளாராம்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பனவே இந்த உப குழுக்கள் அமைக்கப்படுவதற்கான நோக்கங்களாகும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களின் தலைமையில் இன்று (29) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் டிரான் அலஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், சிசிர ஜயகொடி, நாமல் ராஜபக்ஷ, ஜோன்டன் பெர்னாந்து, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, சிவநேசதுரை சந்திரகாந்தன், சம்பிக ரணவக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டிருந்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன 20.09.2022 ஆம் திகதி தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்ததுடன், இப்பிரேரணை எதிர்ப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இதுவரை பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
தேசிய பேரவையின் முதலாவது கூட்டத்தின் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
தேசிய ரீதியில், பாராளுமன்றத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், பொது மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் காணப்படும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் திறக்கப்பட்ட புதியதொரு கதவாக இது அமையும் என்றும் குறிப்பிட்டார்.
சகல பாராளுமன்ற அமர்வு வாரத்திலும் வியாழக்கிழமை தேசிய பேரவையைக் கூட்டுவதற்கும் இன்று (29) தீர்மானிக்கப்பட்டது.
தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் உணவு முறை ஆபத்தான நிலையில் இருப்பதாவும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படா விடின் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலை உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
நாடு முழுவதும் உணவு விலைகள் அதிகமாக இருப்பதால், பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவை உண்பதில்லை என்றும் மாறுபட்ட உணவுகளை உட்கொள்வதும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நிவாரணத்துக்கு 63 மில்லியன் டொலர்களை உணவுத் திட்டம் திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதன் பாதியளவே தற்போது கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கங்களிடமிருந்தும், ஐக்கிய நாடுகளின் மத்திய அவசரகால பதில் நிதியம், தனியார் துறை பங்காளிகள் மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்தும் மொத்தமாக 29.35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.