web log free
September 20, 2024
kumar

kumar

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், குறித்து 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் இந்தியா, அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழி பாதை ஊடாக பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் மூன்று லிட்டர் தண்ணீருடன் 8 நபர்கள் படகோட்டிகளினால் இறக்கி விடப்பட்டிருந்தனர்.

மேலும் பசியும் பட்டினியுமாக கை குழந்தையுடன் தண்ணீர் மட்டும் குடித்து மூன்று நாட்களாக மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல்படை நேற்று காலை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே இலங்கையில் இருந்து வாழ வழியின்றி 134 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஒரே ஒரு மூதாட்டி மட்டும் உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரண்டரை மாத கைக்குழந்தையுடன் 8 நபர்கள் மூன்றாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் அவர்களை விசாரணை நடத்தி மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3 முதல் 5 வரை கட்டுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை தனது 193 உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

நியூயோர்க் நகரில் கோவிட் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் அரசியல் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளிப்பதற்கு ஏறத்தாழ எண்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் சரத்துகள் திருத்தப்படாவிட்டால் மேற்படி சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவும் இந்த மனுவை முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை தற்போதுள்ள அரசியலமைப்பில் இரண்டரை வருடங்களில் இருந்து நான்கரை வருடங்களாக மாற்ற வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிமல் ஜி. புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, செப்டம்பர் 20 ஆம் திகதிக்குப் பிறகு தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் முன்வைக்கப்படவுள்ள சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அனைத்து தொழிற்சங்கங்களையும் சந்தித்து, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்து, அதன் முக்கியத்துவத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், உத்தேச சீர்திருத்தங்களுக்கு எதிராக தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வளாகத்தில் நாளை நடைபெறவுள்ளது.

மதுபோதையில் நின்று பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று (20) அதிகாலை துப்பரவு பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை அவதானித்த யாழ் மாநகர சபை உறுப்பினர், குறித்த துப்புரவு பணியாளரை நாளைய தினம் வந்து கடமையில் ஈடுபடுமாறும் மதுபோதையில் இருந்து பணியில் ஈடுபடவேண்டாம் எனவும் கூறுமாறு மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் குறித்த துப்புரவு பணியாளர் மதுபோதையில் பணியில் ஈடுபட முடியாது என மேற்பார்வையாளர் கூறிய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பணியாளர் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளரை அச்சுறுத்தும் தாக்குதல் முயற்சியிலும் ஈடுபட்டார்.

இதனையடுத்து குறித்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள யாழ் மாநகர சபை குறித்த பணியாளரை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கத் தகுந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பொறுப்புக்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவையாற்றுவது கட்சியின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி
பிரசன்ன ரணதுங்க
ஜனக பண்டார தென்னகோன
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
ரோஹித அபேகுணவர்தன
சி.பி.ரத்நாயக்க
பவித்ரா வன்னியாராச்சி
எஸ்.எம்.சந்திரசேன
நாமல் ராஜபக்ஷ
ரமேஷ் பத்திரன
பந்துல குணவர்தன
சனத் நிஷாந்த
காஞ்சனா விஜேசேகர ஆகியோர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலமொன்றை வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய துலாஞ்சலி பிரேமதாச, சம்பவம் இடம்பெற்ற போது அப்போதைய பிரதமரின் வீட்டிற்கு அருகில் தான் இருந்ததாகவும், விசாரணைகளுக்கு உதவுவதற்காக வாக்குமூலமொன்றை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 5 வது பாதையில் உள்ள தனியார் இல்லம் ஜூலை 9 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உட்பட பல அரச நிறுவனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து எரிக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கொழும்பு அரசியல் மட்டங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இச் செய்தி வெளியாகியுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ranil wickremesinghe and Gotabaya Rajapaksa

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, கோட்டாபயவின் வருகை பிற்போடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள மிரிஹான பகுதியிலும், அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவுடன் தொலைபேசியில் உரையாடிய ரணில்! இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட முடிவு | Gotabaya Rajapaksa Visit To Sl Politic Crisis

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடும் போராட்டங்கள் வெடித்தது.

மக்களின் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.

கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கோட்டாபய சிங்கப்பூரில் ஒரு மாதம் அளவில் தங்கியிருந்தார். பின்னர் சிங்கப்பூர் விசா காலம் முடிவடைந்த நிலையில் அங்கிருந்து தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார். 

கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் தற்போது எதிர்வரும் 24ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அவரது நெருக்கிய தரப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் விபச்சார விடுதி ஒன்றை ​பொலிஸார் சுற்றிவளைத்ததுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த விடுதியில் இருந்து ரி56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளர் (ஓய்வுபெற்ற இராணுவ வீரர்) மேலும் ஒரு ஆண் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த விடுதியில் பொலிஸார் சோதனை செய்தால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சுட்சுமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த இயங்கு நிலையில் உள்ள ரி56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதி ஓய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.