web log free
September 19, 2024
kumar

kumar

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை வழங்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது என ஊடகங்களுக்கு திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். 

முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தோட்ட தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததயடுத்து, அதற்கு மறுப்பு தெரிவித்து, செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த பொழுது சம்பள உயர்வு வழங்க முடியாது என ஆரம்பத்தில் கம்பனிகள் தெரிவித்து வந்தன. கடும் அழுத்தத்திற்கு பிறகு ஊக்குவிப்பு தொகை மாத்திரம் வழங்க தயார் என தெரிவித்தனர்.

இந்நிலையில், அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, வேறு வழியின்றி தற்போது கம்பனிகள் 1200 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முன்வந்துள்ளனர். ஒரு வருட காலமாக ஒரு ரூபாய் சம்பள உயர்வு கூட வழங்க முடியாது என தெரிவித்த கம்பனி,தற்போது 200 ரூபாய் அதிகரிப்பு வழங்க முன்வந்தமைக்கான காரணம் அரசாங்கத்தால் அரச வர்த்தமானி வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆதலால் கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது என செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன்,அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கம்பனி அமுல்படுத்தாவிடின் கம்பனியின் முதன்மை இயக்குனர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பணமில்லை என்று கூறி உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டது போன்று ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பாஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நேற்று (10ம் திகதி)  தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலக்கெடுவிற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்குக் கூட அரசாங்கம் பலகோடி நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அதனால் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்பதற்கான காரணமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யக்கோரி டயனா கமகேயால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 28ஆம் திகதி எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (10) தீர்மானித்துள்ளது.

நீதியரசர்கள் காமினி அமரசேகர, குமுதுனீ விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்

முன்னிலையில் இந்த மனு நேற்று கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மன்றில் விடயங்களை முன்வைத்ததுடன் , இந்த மனு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானத்தை அறிவிப்பதற்கு திகதியை குறிப்பிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கமைவாக மனுவை இம்மாதம் 28ஆம் திகதி எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், அன்றையதினம் மனுவை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று மூவரடங்கிய நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அமர்வு தெரிவித்தது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது கட்சியின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டுமின்றி எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வைக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டிற்காகவும் தனித்தனியாகவும் எவருடனும் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சற்று முன்னர் சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

முஜிபர் ரஹ்மான் 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார் மேலும் 2023 இல் கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்ச நீதிமன்ற உத்தரவினால் இரத்துச் செய்யப்பட்டமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மானை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

இதன்படி, நியமனம் தொடர்பான  வர்த்தமானி அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (09) வெளியிட்டிருந்தது. 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 1200 ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

1200 ரூபா வரை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தயார் எனவும் எனினும், அதனை உற்பத்திக்கு அமைவான சம்பளமாக அமையாத, அடிப்படை சம்பளமாக வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கவில்லை எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மே மாதம் 15 ஆம் திகதி வரை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

அவர்களின் எதிர்ப்பிற்கு அமைய, 15 ஆம் திகதியின் பின்னர் மீண்டுமொரு வர்த்தமானியை வெளியிட அரசாங்கத்திற்கு நேரிடும் எனும் அமைச்சர் தெரிவித்தார். 

1200 ரூபா வரை அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கும் மேலதிகமாக பறிக்கும் கொழுந்திற்கு விலையை நிர்ணயிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கமும் அமைச்சரும் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. 

தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினர். 

இவ்வருடம் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கத் தயார் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று காட்சிகளைப் பதிவு செய்து அது தொடர்பான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

மேலும், வெசாக் போயாவை முன்னிட்டு தன்சல்களை ஏற்பாடு செய்யும் போது உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் ஆகியவை முறையான சுகாதார தரத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என சங்கம் கூறுகிறது.

நியமங்களுக்கு அமையாத தன்சல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

வெசாக் வாரத்தில் நடத்தப்படும் தன்சல் கொண்டாட்டங்களுக்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒரு நாளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க கையொப்பமிட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் படி குறிப்பிட்ட எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வேட்பு மனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்ய தேர்தல் ஆணையத்துடன், அது செப்டம்பர் 17, 2024 முதல் 6 அக்டோபர் 2024 வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி, வழக்கை எதிவரும் 29ம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் உத்தரவிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, உப தலைவர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும், அவர் அந்தப் பதவியை வகிப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மனுவினை தாக்கல் செய்திருந்ததார்.

அஹுங்கல்ல - போகஹபிட்டிய பிரசேத்தில் நேற்றிரவு (08) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

54 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாயில் இருக்கும் பாதாள உலகக் குழு முக்கியஸ்தர் ஒருவரின் தந்தையே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.