ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறையாக இருப்பதால், ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாத்திரம் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வௌ்ளிக்கிழமை வீட்டிலிருந்து கற்பதற்கான செயற்பாடுகளை வழங்கியோ அல்லது இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றினூடாக கல்வி அமைச்சு இதை வெளியிட்டுள்ளது.
எனினும், போக்குவரத்து பிரச்சினை இல்லாத பாடசாலைகளில் மாத்திரம் அதிபர், ஆசிரியர்களின் இணக்கப்பாட்டுடன், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், வௌ்ளிக்கிழமைகளிலும் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைவர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
பல தடவைகள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான 31 பேரின் வெளிநாட்டு பயணத்திற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இவ்வாறான மேலும் பல நபர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றதுடன், அவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் அழகு கலை நிலையமொன்றில் இருந்த போது அங்கு வந்த துப்பாக்கிதாரி இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காலி முகத்திடல் போராட்டப் பிரதேசத்தில் தற்போது இயங்கி வரும் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்த எந்தவொரு மாணவர் அமைப்பும் அல்லது சமூக இயக்கமும் அதிலிருந்து விலகப் போவதில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமகுமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஒரு கோழை என்றும் அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பகுதியில் சிறுத்தை ஒன்று தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் பேரிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை மல்லிகைப்பூ தோட்டத்தில் இன்று (05) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று (05) காலை சுமார் 7 மணியளவில் வீட்டில் இருந்தோர் வெளியேறு சந்தர்ப்பத்தில் சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்து கட்டிலின் அடியில் மறைந்திருந்துள்ளது.
சிறுத்தைபின் காலடிகளை இனங்கண்டுகொண்ட குடும்பத்தினர் டோர்ச் லைட் ஒன்றினை எடுத்து வீட்டினுள் தேடிய போது திடீரென சிறுத்தை பாய்ந்து தோள்பட்டை, கைகளையும் காயப்படுத்தி உள்ளது.
கடும் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தாக்குதல்களை மேற்கொண்ட அந்த சிறுத்தை வீட்டினுள் இருப்பதாகவும் இதுகுறித்து பொலிஸாருக்கும் வன இலாகா பிரிவு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுத்தையை மயக்கமடைய செய்து அதனை வெளியில் எடுக்கும் பணியினை வன இலாகா அதிகாரிகள்,மற்றும் மிருக வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (05) இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது மற்றும் அதுதொடர்பான பிரேரணைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படுவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளும் ஜனாதிபதியைச் நேற்று சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எவ்வித இடையூறுமின்றி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நாடு திரும்பியவுடன் மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு திரும்பும் கோட்டாபய, சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருவதா, இல்லையா என்பது குறித்து அவரது நெருங்கிய தரப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபயவுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் பேரூந்துகளை இயக்குவதற்கு போதிய எரிபொருளை வெளியிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (5) தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக பல பேருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போதிய எரிபொருளை வழங்காமல் பஸ் கட்டணத்தை குறைத்தமைக்கு எதிராகவும் கியூ.ஆர். விதிப்படி, ஒரு பேருந்திற்கு வாரத்திற்கு வழங்கப்படும் 40 லிட்டர் டீசல் எப்படியும் போதாது என்று தெரிவித்தே புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
எரிசக்தி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இணையதளம், நாடு முழுவதும் அமைந்துள்ள பெட்ரோல் நிலையங்களின் எரிபொருள் நிலைமைகள் மற்றும் அதன் திறன்கள் குறித்து தெரிவிக்க மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் குறைந்ததன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
ஆனால் இன்னும் பல பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது.
.
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.
தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.