நாளை (03) நாடளாவிய ரீதியில் 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 1/2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா அலுவலக உயர் அதிகாரிகளுக்கும் 5 தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இணைய வழி சந்திப்பு நேற்றிரவு (01) நடைபெற்றுள்ளது.
ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை மீதான 46/1 பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதன் மீதான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் ஐ.நா-விற்கு நேரடியாக பயணம் செய்திருந்த வேளையில், இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஐ.நா உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான C.V.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் EPRLF கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி ஆகியோர் கந்துகொண்டிருந்தனர்.
உடல்நிலை காரணமாக தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் நா. ஸ்ரீகாந்தாவால் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.
யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கான நீதி பொறிமுறை, தண்டனையின்மை நீடிப்பு, காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதிகள், மற்றும் அரசுக்கு தேவையானவர்களுடைய விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், அக்குடும்பங்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக செயற்பாடுகள், புதிய ஏற்பாட்டில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டுதல் என்பன பற்றி தமிழ் கட்சி பிரதிநிதிகளால் ஐ.நா உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய காங்கிரஸ், பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 'முழு நாடும் சரியான பாதையில்' என்ற தேசிய விஞ்ஞாபனத்தின் வெளியீடு இன்று மார்ச் 2, 2022 மாலை 3:00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
திறந்த பொருளாதார அபிவிருத்தி மாதிரியில் ஏற்பட்டுள்ள மோசமான பின்னடைவின் விளைவுகளை நாம் அனுபவித்து வருவதாகவும், குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதாரத்தின் அடித்தளத்தை நீண்ட கால அடிப்படையில் பலப்படுத்தும் பொருளாதார மாதிரியை உருவாக்க வேண்டும் எனவும் மேற்கண்ட கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொருளாதார வாய்ப்புகளை வழங்கி, பெரும்பான்மை மக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். அதை செயற்படுத்த பிரேரணை ஒன்று முன்வைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
'முழு நாடும் சரியான பாதையில் செல்கிறது' என்ற தேசிய விஞ்ஞாபனத்தின் வெளியீட்டு நிகழ்வில் மேற்கண்ட கட்சிகளின் தலைமைப் பங்குபற்றவுள்ளதுடன், சிறந்த அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் அடங்கிய குழுவொன்றும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையிலிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில், மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியை பேணுவதற்காக, உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மாஅதிபர், அனைத்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பொலிஸ் உத்தியோகத்தர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமையில் ஈடுபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், அம்பியூலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சுற்றுலாத்துறை சார் வாகனங்கள், விவசாய செய்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி, எரிபொருளை விநியோகிக்குமாறு, பொலிஸ் மாஅதிபர் அனைத்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
11 அரசாங்க பங்காளிக் கட்சிகளின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளதுடன், இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் அதனை ஆதரிக்கத் தயார் என பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே இச்சட்டம் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது என சுட்டிக்காட்டினார்.
யுத்த காலத்தில் இச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது என்றும் 12 வருடங்களின் பின்னரும் அது நடைமுறையில் இருப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு சார்பாக அமையும் என்ற காரணத்தினால் ர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அதனை இரத்து செய்ய வலியுறுத்திவருவதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.
ஆகவே இச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற மட்டத்தில் கொண்டுவரும் அனைத்து யோசனைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
‘வலிமை’ படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி வெளியானதால் ’அஜித் அரசியலுக்கு வருகிறார்’ என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பேசியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் சார்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.
உக்ரைன் ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.