web log free
December 22, 2024
kumar

kumar

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இதுவரை நீர் கட்டணத்தை செலுத்தாத 30 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து ஒதுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 பேர் உள்ளனர், அவர்களில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அமைச்சர் ஒருவரின் நிலுவைத் தொகை ரூ.20 இலட்சத்தை தாண்டியதாக சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டியல்களை விரைவாக செலுத்துவதற்கான இறுதி அறிவிப்புகளும் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டன. இதன்படி, தொடர்ந்தும் கட்டணம் செலுத்தத் தவறி வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன திடீரென அங்கொட ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு நோய் அறிகுறி அதிகரித்ததால் இவ்வாறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுவோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் சமஷ்டிக் கட்டமைப்பில், சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர் பார்க்கின்றோம்.

தெளிவாக சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 08ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி மணிவரை 2015ஆம் ஆண்டு 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளும், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 09ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 04.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 10ஆம் திகதி மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) திருத்தச் சட்டமூலம், விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரிகள், பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.

அதேநேரம், பெப்ரவரி 11ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கமைய அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி, ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.

அதற்கான காரணம் வருமாறு,

இலங்கையில் மோசடி ஒன்று தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த  வர்த்தகர் ஒருவர் இரகசியமாக வெளிநாடு  தப்பிச் சென்றுள்ளார்.

அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய பொலிஸார் தயார் நிலையில் இருந்த போது இந்த இராஜாங்க அமைச்சர் தனது பதவி சலுகையை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரபுக்கள் பிரவேச பிரிவின் ஊடாக குறித்த வர்த்தகர் நாட்டை வந்தடைய உதவி செய்துள்ளார்.

அதன்பின் குறித்த வர்த்தகர் இராஜாங்க ​அமைச்சர் ஊடாகவே நீதிமன்றில்  ஆஜராகி பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   

இதுகுறித்து புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பிரதமருடன் கலந்துரையாடி விரைவில் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மலைநாட்டு கிளர்ச்சி காலத்தில் பலன் தரக்கூடிய பல மரங்கள் அழிக்கப்பட்டதாகவும் காலிங்கன் யுகத்தில் இந்நாட்டின் வரலாற்று பாரம்பரியம் அழிக்கப்பட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசாங்கம் இந்நாட்டின் விவசாய பாரம்பரியத்தை சீரழித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான கூட்டமொன்று தம்புள்ள நகரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வெடிப்புகளை நிறுத்துவதாக கூறி ஆட்சி வந்த அரசாங்கத்தின் கீழ் கையில் எடுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கூட வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அதுமாத்திரமின்றி திரவ உர கொள்கலனும் வெடிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுபோதாமைக்கு கொண்டுவரப்பட்ட திரவ உரம் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு துர்நாற்றம் உடையது என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர், துர்நாற்றம் அலரி மாளிகை,ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்றத்தினால் உணர முடியாது என்றும் தெரிவித்தார்.

பொதுமக்களின் துயரங்களை உணரும் நாடி அரசாங்கத்திற்கு கிடையாது என கூறிய எதிர்க்கட்சி தலைவர்,சீனி மோசடி,எண்ணெய் மோசடி,கொவிட் மோசடி போன்ற பாரியளவிலான ஊழல்,மோசடிகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். தற்போது இலங்கையின் ஊழல் விவகாரத்தில் மிகவும் கீழ்தரமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய உடல்நிலை சீரின்மையை கருத்திற் கொண்டு அவர் பங்குபற்ற இருந்த அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் வேறு நபர்கள் அதிதிகளாக கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பிரதமர் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொள்ள இருந்த நிகழ்வுகளில் அவருக்கு பதிலாக அவரது மகன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவே கலந்து கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவருக்கு ஓய்வு தேவை என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

முன்னதாக பிரதமருக்கு சத்திரசிகிச்சை செய்யப்படவில்லை என நாமல் ராஜபக்ஷ கூறிய போதும் சத்திரசிகிச்சை நடந்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.

கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன. இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் செல்கிறது.

உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன.

இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும்.

இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு இன்று (28) மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் சோதனையில் அது உறுதியாகியுள்ளது.

 அதனால் அவர் தற்போது கொழும்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கையில் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்கள் எடுத்த மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கை, ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களிலும் ஆடைத்தொழிற்சாலைகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்யும் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் போன்ற சமூகத்தின் மிகவும் சுரண்டப்படும் பிரிவினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்வதற்காக அடிமைத்தளையின் நவீன வடிவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தமையாகும். இச்சிறப்பான முன்னெடுப்பினைத் தெற்காசியாவில் எடுத்த முதலாவது நாடு இலங்கையாகும். பிராந்தியத்தில் ஏனைய நாடுகள் இலங்கை உதாரணத்தினைப் பிரதிசெய்ய முடியுமா?

பிரச்சினைகளை ஸ்தலத்தில் கண்டறிவதற்காக ஐ.நா. விசேட தூதுவரான டொமொயா ஒபொகடா நவம்பர் 26 இற்கும் டிசம்பர் 3 இற்கும் இடையில் இலங்கைக்கு விஜயம் செய்தார். விஜயம் செய்த தூதுவர் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்தித்தார். தான் கண்டறிந்த விடயங்களின் பூர்வாங்க அறிக்கையினைத் தூதுவர் நவம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சமர்ப்பித்தார். இறுதி அறிக்கையானது 2022 செப்டெம்பரில் ஐநாவில் சமர்ப்பிக்கப்படும்.

தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களாவர். தனிநபர் வருமானம், வாழ்க்கை நிலைமைகள், நீண்ட ஆயுள், கல்வி அடைவுகள் மற்றும் பெண்களின் நிலை – இவற்றைக் கணிப்பிட எந்த அளவுகோலையும் பிரயோகியுங்கள் – அவர்கள் ஏணியின் அடியிலேயே இருக்கின்றனர். ஐ.நா. விசேட தூதுவர் பின்வருமாறு கோடிட்டுக்காட்டியுள்ளார்: “நவீன அடிமை முறைகள் இனத்துவப் பரிமாணங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, 200 வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்கள் அவர்களின் வம்சாவளியின் அடிப்படையில் பல்வேறு வடிவிலான பாகுபாடுகளுக்கு இன்னும் முகங்கொடுத்து வருகின்றனர்.”

2017ஆம் ஆண்டில், இலங்கை தேயிலைத் தொழிற்துறையின் 150ஆவது வருடப் பூர்த்தியினைக் கொண்டாடியது. பொருளாதாரத்தில் தேயிலைத் தொழிற்துறையின் வகிபாத்திரத்தினைக் கோடிட்டுக்காட்டுவதற்கும், துறையின் உற்பத்தியினை எவ்வாறு உயர்த்துவது என்பது பற்றியும், துறையினை எவ்வாறு நவீனமயப்படுத்துவது என்பது பற்றியும் அரசாங்கமும் தோட்ட உரிமையாளர்களும் பல கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், கண்டியிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனம் மட்டுமே, உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாலைக் களிப்பினை வழங்கும் இரண்டு இலைகளையும் ஒரு கொழுந்தினையும் (கலாநிதி முல்க் ராஜ் ஆனந்தினால் எழுதப்பட்ட நாவல்) உற்பத்திசெய்பவர்கள் பற்றிய ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. தோட்ட உரிமையாளர்களினதும் தொழிலாளர்களினதும் மாறுபடும் வாழ்க்கைகள் கட்டாயம் கோடிட்டுக்காட்டப்பட வேண்டும். கீழேயுள்ள இரண்டு மேற்கோள்கள் மாறுபாட்டினை விபரிக்கின்றன. பிரித்தானியர்கள் எவ்வாறு அடிமைமுறையினை மீளக் கண்டுபிடித்தனர் என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தொகுப்பினை பிபிசி 2005ஆம் ஆண்டு ஒலிபரப்பியது. தோட்ட உரிமையாளரின் வாழ்வினை ஆவணத்தொகுப்பு பின்வருமாறு சித்தரிக்கின்றது: “நீங்கள் உங்கள் வராந்தாவில் அமர்ந்திருக்க, வேலைக்காரன் விசிறிவீச, லெமனெடைப் பருகிக்கொண்டிருக்க, உங்கள் கால் நகங்களை யாரோ ஒரு கூலி நறுக்கிக்கொண்டிருக்க, நீங்கள் தொழிலாளர்கள் வேலை செய்வதைப் பார்க்கலாம், நீங்கள் விரும்பிய எந்தப் பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கலாம், காலையில் எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும் வரை ஏறக்குறைய அனைத்துமே உங்களுக்காகச் செய்யப்படுகின்றன. மக்கள் உங்களைக் கவனித்துக்கொண்டனர், மக்கள் உங்களுக்கு அடிபணிந்தனர், மக்கள் உங்களுக்குப் பயப்படுகின்றனர், தோட்ட உரிமையாளர் என்ற ரீதியில் உங்களின் ஒற்றை வார்த்தை வாழ்வையே மறுக்கலாம்.”

இனப் பிரச்சினைகளின் போது தனது மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை மலையகத்து இளங்கவிஞரான வண்ணச்சிறகு வெளிப்படுத்துகின்றார். விடியல் என்ற அவரின் கவிதையில் கவிஞர் பின்வருமாறு எழுதுகின்றார்: “எங்கள் இரவுகள் நிச்சயமற்றவை, அன்பே, தூங்குவதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். இதுவே எமது அர்த்தமுள்ள இறுதிக் கணமாக இருக்கலாம். கடைசியாக எம் செல்வங்களின் கன்னங்களில் உன் இதழ்களைப் பதி. ஒரு கனம் நம் உறவுகளை நினைத்துக்கொள்வோம். கடைசியில் எம் விழிநீரைத் துடைத்துக்கொள்வோம்.”

மலையகத் தமிழ் மக்களின் மிக முக்கியமான அம்சம் அவர்களின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள கணிசமான வீழ்ச்சியாகும். 1948 இல் சுதந்திரம் கிடைத்தபோது, அவர்கள் இலங்கைத் தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்தனர். கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையில் 1964ஆம் ஆண்டும் 1974ஆம் ஆண்டும் கைச்சாத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின் காரணமாகப் பெரும் எண்ணிக்கையில் இந்தியப் பிரசைகள் என்ற ரீதியில் இம்மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்ட காரணத்தினால், இவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது. இன்று, தொகைமதிப்புப் புள்ளிவிபரத்தின் படி, இவர்கள் சனத்தொகையில் வெறும் 5.5% ஆகவே இருக்கின்றனர்.

சுதந்திரத்தின் பின்னரான முதல் சில தசாப்தங்களில் இந்தியத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினை நாடற்றநிலை எனும் பிரச்சினையாகும். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் என நடாத்தப்பட்ட சாதுர்யமிக்க கலப்புப் போராட்டங்களுடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையின் கீழ் இந்தச் சமுதாயம் பிடிவாதமிக்க சிங்கள ஆதிக்க அரசாங்கத்திடம் இருந்து பிரசாவுரிமைக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 1964 ஒக்டோபர் மாதத்தின் பின்னர் இலங்கையில் பிறந்த அனைவருக்கும் பிரசாவுரிமை வழங்கப்பட்டது. இது சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கென எஞ்சியிருந்தவர்களையும் உள்ளடக்கியது. 1978ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார முறைமையினால் இச்சமுதாயம் அதிக பிரதிநிதிகளைப் நாடாளுமன்றத்திற்கு அனுப்பக்கூடியதாக இருந்தது.

இப்போது இந்தச் சமுதாயம் சமத்துவத்திற்கும் கௌரவத்திற்காகவும் போராடி வருகின்றது. வாழ்க்கை நிலைமைகள் முன்னேறியிருந்தாலும், செம்மையான சமத்துவம் எனும் அந்தஸ்தினை இம்மக்கள் அனுபவிப்பதற்கு இன்னும் அதிக விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. மிகவும் முக்கியமான முதல் விடயமாக, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடப்படவேண்டும். மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் ஒருபோதும் தனிநாடொன்றுக்கான கோரிக்கையினை முன்வைக்கவில்லை என்ற போதிலும், 1977, 1981 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இந்தச் சமுதாயத்தினர் சிங்களக் காடையர்களின் வெறித்தனமும் மிருகத்தனமும் கொண்ட தாக்குதலுக்கு உட்பட்டனர். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பிந்துனுவெவ படுகொலையின் பின்னர் நான் ஹட்டனில் இருக்க நேரிட்டது. இந்திரா எனும் ஓர் இளம் பெண் பாதுகாப்பின்மை காரணமாக தன்னால் ஹட்டன் நகரில் நடமாட முடியாதிருப்பதாக என்னிடம் நம்பிக் கூறினார். சென்னையில் பெரம்பூரில் இருக்கும் தனது சகோதரனுடன் தன்னை ஒப்பிட்டு அங்கே தன்னால் பின்னிரவுச் சினிமாக் காட்சிக்குக் கூடப் பயமின்றிச் செல்ல முடியும் எனக் கூறினார். இரண்டாவதாக, தேயிலைத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாவாகும். இது இம்மக்களின் நாளாந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கே போதாது. இதனால் பலரும் தோட்ட வேலைகளுக்குப் போகாமல் மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்யச் செல்கின்றனர். அங்கே இவர்களுக்கு காலையுணவும் மதிய உணவும் வழங்கி இதைவிட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. இறுதியாக, எல்லாச் சிறுவர் சிறுமிகளும் பாடசாலைக்குச் சென்றாலும் பலர் பாடசாலையில் இருந்து இடைவிலகுகின்றனர். மிகவும் சொற்பமானவர்களே பல்கலைக்கழக மட்டம் வரை கல்வி கற்கின்றனர். சர்வதேச உறவுகளுக்கான சார்க் பேராசிரியராக நான் 2006ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றினேன். கலைமானி இறுதியாண்டு வகுப்பில், தமிழ் மொழி மூலத்தில், 10 மாணவர்கள் இருந்தனர். இந்தப் பத்து மாணவர்களில் எட்டுப் பேர் முஸ்லிம் மாணவிகள். இவர்களுடன் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் பெருந்தோட்டப் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒரு மாணவியும் இருந்தனர். அதே வருடம், பல்கலைக்கழகத்தில் இருந்த இந்தியத் தமிழ்ச் சமுதாயத்தினைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 10 ஆகவே இருந்தது.

இலங்கை உயர் ஸ்தானிகரான மிலிந்த மொரகொட அவரின் மூன்று வருடங்களுக்கான செயற்திட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் அதிகளவு கல்விப் பரிமாற்றங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கோடிட்டுக்காட்டியுள்ளார். உதாரணமாக, உலகளாவிய கற்கைகளுக்கான சென்னை நிலையம், தமிழ் மாணவர்கள், குறிப்பாக மலையக மாணவர்கள் இரண்டாம் நிலைக் கல்விக்காகவும் பல்கலைக்கழகக் கல்விக்காகவும் இந்தியாவுக்கு வருவதற்கு உதவிசெய்து அவர்களின் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கும் ஆர்வமாக இருக்கின்றது. ஒரு சமுதாயத்திடம் சிறந்த விழுமிய அடிப்படையிலான கல்வி இருக்கையில் மாத்திரமே அச்சமுதாயத்தினால் முன்னேற முடியும். இந்த விடயத்தில் தமிழ்நாட்டினால் ஒரு நன்மையளிக்கும் வகிபாத்திரத்தினை வகிக்க முடியும்.

யாழ்ப்பாண வெள்ளாளர்களால் பயன்படுத்தப்பட்ட அவமதிப்புக்குள்ளாக்கும் தோட்டக்காட்டான் என்ற சொற்பதத்தில் இருந்து மலையகத் தமிழர் எனும் உயர்வான இடுபெயருக்கு நிலைமாற்றம் அடைந்தமை மலைநாட்டில் இடம்பெற்றுள்ள பண்புசார்ந்த மாற்றத்தின் ஓர் எடுத்துக்காட்டாகும். இருப்பினும், வாய்ப்புக்களின் சமத்துவத்தினை அனுபவிக்கும் சமமான பிரசைகளாக இவர்கள் மாறுவதற்கு முன்னர் நிறைய விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் சந்திக்கும் சிறப்புரிமை கிட்டிய முனைவர் எம்.ஏ.நுஹ்மான் அவர்கள் எழுதிய கவிதையுடன் இதனை நான் நிறைவுசெய்ய விரும்புகின்றேன்: “எங்கே சமத்துவம் இல்லையோ, அங்கே சமாதானம் இல்லை, எங்கே சமாதானம் இல்லையோ, அங்கே சுதந்திரம் இல்லை, இவைதான் எனது இறுதி வார்த்தைகள், சமத்துவம், சமாதானம் மற்றும் சுதந்திரம்.”

வி.சூர்யநாராயணன் (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர், தெற்கு மற்றும் தெற்காசியக் கற்கைகளுக்கான நிலையம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் (ஆசிரியர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நிலையத்தின் ஸ்தாபகப் பணிப்பாளராவார்)

The plight of Tamils of Indian origin in Sri Lanka என்ற தலைப்பில் ‘த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தளத்தில் 22 டிசம்பர் 2021 திகதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

நன்றி - மாற்றம்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd