தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், தேசிய அரசாங்க நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது கூறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் அளவுக்கு தமது கட்சியில் எவருக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தாம் நினைக்கவில்லை என அமைச்சர் ரோஹித அபேவர்தன குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டாலும் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை எவராலும் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாவின் அரசாங்கத்தை தோற்கடிக்க போதுமான ஆதரவு இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இன்று(28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
அவரது வருகைக்காகவும் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி இதன்போது இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நாளை 29ம் திகதி ஏழரை மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குழு A முதல் L வரை - 7 மணி 30 நிமிடங்கள், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணி நேரம்.
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி 30 நிமிடங்கள். குழு P முதல் W வரை - 7 மணி 15 நிமிடங்கள்,
காலை 8.30 முதல் மாலை 6.30 வரை ஐந்து மணி நேரம். மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி 15 நிமிடங்கள்.
எதிர்காலத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் அரசியல் மாற்றமொன்றை மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அரசியல் மாற்றமொன்றை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலேயே இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 130 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால்(INTERPOL) சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அவர்களது சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கடந்த வருடத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 95,000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது 1,630 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
வைத்தியசாலை அமைப்பிற்கு முன்னுரிமை வழங்கி தொடர்ச்சியாக வைத்தியசாலைகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மேற்கொண்ட கலந்துரையாடலில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார்.
பொதுமக்கள் எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கொழும்பு – நீர்க்கொழும்பு பிரதான வீதியை ( கபுவத்தை பிரதேசத்தில்) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
இதன் காரணமாக நீர்க்கொழும்பு நோக்கிய வீதி முழுவதுமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
ஓமானின் கடனுதவியுடன் 3500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் நேற்றிரவு (26) இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு இறக்கும் பணி நேற்று (27) பிற்பகல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படும் கெரவலப்பிட்டிய லிட்ரோ கேஸ் நிலையம் இன்று வழமை போன்று இயங்குவதாகவும், 100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.