2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மோகன் சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ஆகும்.
மேலும், 5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 1,431 ஆகும்.
மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 688 ஆகும்.
உலகச் சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
வடக்கின் 5 மாவட்டங்களிற்குமான 4 நாள் பயணமாக நாளை சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வருகை தருகின்றனர்.
வவுனியாவை நாளை காலை 10 மணிக்கு வந்தடையும் குழுவினர், வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகள் வழங்கி வைக்கும் தூதுவர் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் தூதுவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்ட அரச அதிபரிம் கையளிப்பதோடு வெலிஓயாவிற்கான 250 பொதிகளை தாமே நேரில் வழங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் வருகை தந்து மறுநாள் 6ஆம் திகதி சீனத் தூதுவர் மற்றும் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள் காலை 9 மணிக்கு யாழ் ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதோடு 10 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடி நெடுந்தீவு மக்களிற்கு 500 பொதிகள் கையளிக்க உள்ளனர்.
இதனையடுத்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் பயணிக்கின்றனர்.
இதேநேரம் 7 ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் சீனக் குழுவினர் நாகவிகாரைக்கு 250 பொதிகள் வழங்குகின்றனர். அதனையடுத்து 7 ஆம் திகதி மாலை மன்னாரிக்குப் பயணித்து 8 ஆம் திகதி மன்னார் நிகழ்வுகளில் பங்குகொண்டு 8 ஆம் திகதி மாலை கொழும்பு திரும்புகின்றனர்.
ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுஜித் யட்டவர பண்டார மரணமடைந்துள்ளார்.
இதனை இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அவரது குழந்தைகளின் டிஎன்ஏ மாதிரிகள் அடையாளம் தெரியாத சடலத்துடன் ஒப்பிடப்பட்டதை இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் பிரிவு இன்று உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நுவரெலியா நோக்கி பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக இன்று (3) பிற்பகல் வெல்லவாய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜனாதிபதி பயணித்த உலங்குவானூர்தி திடீரென வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
புத்ருவகல பாடசாலையில் சுமார் 50 நிமிடங்கள் தங்கியிருந்த ஜனாதிபதி, மீண்டும் வாகனம் புறப்படும் வரை காத்திருந்ததுடன் பாடசாலை மாணவர்களும் அங்கு வந்து சிநேகபூர்வமாக உரையாடினர்.
அதன் பின்னர் ஜனாதிபதி வெல்லவாயவில் இருந்து தரை மார்க்கமாக நுவரெலியாவிற்கு புறப்பட்டார்.
பாரியளவிலான கழிவுத் தேயிலை விற்பனை நிலையத்தை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (02) கண்டி தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடகும்புர, லிமகஹகொடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு உரிமம் இன்றி 6,652 கிலோ கழிவு தேயிலையை பதுக்கி வைத்திருந்த லிமகஹா கொடுவ பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கம்பளை தேயிலை ஆணையாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மி.மீ. 100க்கும் மேற்பட்ட கனமழை பெய்ததாக அறிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்று (2) முதல் அமுலாகும் வகையில் 25 சதமாக காணப்பட்ட இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோ ஒன்றுக்கான விசேட பண்ட வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் முழுமையான நட்டஈடு செலுத்தத் தவறியதால் அவர்களது சொத்துக்களை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 2023 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை பிரமாணப் பத்திரங்கள் மூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.