போக்குவரத்து விதியை மீறி காரை நிறுத்தியது தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய அகழ்வு திட்டத்திற்கு எதிராக 55 நாட்களுக்கு மேல் போராடிக்கொண்டிருக்கும் மக்களை நேற்றிரவு அடித்து துன்புறுத்தி புரிந்த கீழ்த்தரமான செயல் மூலம் அநுர அரசாங்கம் தங்களை நிரூபித்துள்ளார்கள் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”மன்னார் தீவு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக மன்னார் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவுக்கு வருவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர் மன்னார் தீவுக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்ட போது மக்கள் அத்திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் போராடி முழு நாட்டிற்கும் தமது கோரிக்கையை வெளிப்படுத்தி இருந்தனர். இவை அனைத்தையும் புறந்தள்ளி காற்றாலை திட்டத்திற்குரிய டர்பைன் மற்றும் விசிறிகளை நேற்று இரவு மன்னார் தீவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதனை தடுக்க முயன்ற பெண்கள், இளைஞர்கள், பாதிரிமார்கள் உட்பட மக்களை அடித்து காயப்படுத்தி கேவலமான அரச அடக்கு முறையை அநுரவின் காவல்துறை படை மேற்கொண்டதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
இச்செயல் மூலம் அரசாங்கம் உழைக்கும் மக்கள் பக்கம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கின்றனர். மின்சார துறையின் ஏகபோக அதிகாரத்தை அதானி குற்றங்கும்பல் கம்பனிக்கு வழங்கி மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்களை சுரண்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இத்திட்டத்தை தடுத்து நிறுத்த தொடர்ந்து போராடும் மன்னார் தீவு மக்களோடு இணைந்து நாட்டின் ஏனைய அனைத்து சக்திகளும் போராட முன்வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததால் அரசாங்கத்திற்கு 2.6 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுத்தியதாக கூறி, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நேற்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்தது.
இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு 2026 ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை (26) சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலத்திட்ட உதவிகள் வாரியம் அறிவித்துள்ளது.
602,852 பயனாளிகளுக்கு ரூ. 3,014,260,000 தொகை விநியோகிக்கப்படும் என்றும், அவர்களின் உதவித்தொகை அவர்களின் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் வாரியம் கூறுகிறது.
செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் பயனாளிகள் தங்கள் முதியோர் உதவித்தொகையை தொடர்புடைய பயனாளி வங்கிக் கணக்கு மூலம் பெற முடியும்.
2023 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணியாற்றிய மனுஷ நாணயக்காரவை நாளை (26) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான விவசாயத் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2023 நவம்பர் 05ஆம் திகதியன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பியது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய கடந்த 08ஆம் திகதி அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வெளிநாட்டில் இருந்ததால் வாக்குமூலம் அளிக்க அவர் ஆஜராகவில்லை.
எனவே, மேற்கூறிய விடயங்கள் தொடர்பாக நாளை காலை 09.30 மணிக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஜாவத்த வீதி, கெப்பட்டிபொல மாவத்தையில் உள்ள பழைய தேசிய அடையாள அட்டை அலுவலக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஊழல் விசாரணைப் பிரிவு IV இல் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் - மெல்சிரிபுர பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஐந்து பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் சில பிக்குகள் காயமடைந்துள்ள நிலையில், உடனடியாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு (25) 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை காவல்துறை தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பற்றிய தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.யின் மொபைல் தொலைபேசி எண்ணை நேரடியாக அழைப்பதன் மூலம் பொதுமக்கள் இன்று (24) முதல் வழங்கலாம்.
வழங்கப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், மூத்த டி.ஐ.ஜி.க்கள் தேவையான சோதனைகள் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்படவுள்ளது. பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பின்வருமாறு.
வடக்கு மாகாணம்
டி.சி.ஏ. தனபால 071-8592644
கிழக்கு மாகாணம் .
வருண ஜெயசுந்தர - 071-8592640
மேல் மாகாணம்
சஞ்சீவ தர்மரத்ன
கையடக்கத் தொலைபேசி - 071-8591991
தென் மாகாணம்
தகித்சிறி ஜெயலத் - 071-8591992
ஊவா மாகாணம்
மகேஷ் சேனநாயக்க - 071-8592642.
சப்ரகமுவ மாகாணம்
மஹிந்த குணரத்ன - 071-8592618
வடமேற்கு மாகாணம்
அஜித் ரோஹண - 071-8592600
மத்திய மாகாணம்
லலித் பத்திநாயக்க - 071-8591985
வடமத்திய மாகாணம்
புத்திக சிறிவர்தன - 071-8592645
பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சியை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தொலைபேசி மூலம் இந்த எச்சரிக்கை அவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமீப காலங்களில் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கட்சிக்குள் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இதில் கூறப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி நாளை (25) கட்சி அலுவலகத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தெரண 360 தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் கவிந்து கருணாரத்னவிடம், தான் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்பு தொடர்பாக தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறினார்.
சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தனது சொத்துக்கள் குறித்து ஊடகங்கள் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்பு தெருவில் கண்டால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர் மறுத்துவிட்டார்.
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.