முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக சிலர் முறைப்பாடு செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அநுர திசாநாயக்கவினால் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களையும், குறைந்த எண்ணிக்கையிலான மெய்ப்பாதுகாவலர்களையும் அழைத்துச் செல்ல முடியுமானால், மஹிந்த ராஜபக்ஷ ஏன் அவ்வாறு செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
வாக்குகளைப் பெறுவதற்காக மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவது எனது அரசியல் அல்ல என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடு வளர்ச்சியடைவதற்கு திறமையான பொதுச் சேவை, தனியார் துறை, குடிமக்கள் அதிகாரம் மற்றும் நம்பகமான அரசாங்கம் அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்டமானது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுடன் அவர்களின் தொழில் திறனை பேணுவதற்கான வேலைத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அதற்காக தமது கட்சி தியவன்னாவை சுத்திகரித்து பலமான பாராளுமன்ற அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும் எனவும் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 2,090 தபால் அலுவலகங்கள் நாளை(03) திறக்கப்பட்டிருக்குமென சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்தார்.
விநியோகப் பணிகளில் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க,
“வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாதொழிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் இடம்பெற்றுள்ளன.
“இவ்வாறு வாக்காளர்களை மகிழ்விப்பது தேர்தல் சட்டத்தை மீறுவதாகவும், அத்துடன், பணம் இல்லாத மற்ற வேட்பாளர்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதி எனவும் தெரிவித்தார்.
வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக தேர்தல் வேட்பாளர்களுக்கு தங்களுடைய ஹோட்டல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் சமீபத்தில் பல முக்கிய ஹோட்டல்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை கண்டியில் உள்ள ஹோட்டல்கள் என்று கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு விருந்து கொடுப்பது என்பது சம்பந்தப்பட்டவரின் கவுன்சிலர் பதவியை உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யக் கூட வழிவகுக்கும் என்று, கண்காணிப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய சுமார் 80 வைத்தியர்களும் 15 விசேட வைத்தியர்களும் கடந்த வருடம் (2023) முதல் தற்போது வரை வெளிநாடு சென்றுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.பி.யு.எம். ரங்கா கூறுகிறார்.
சம்பள பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ். பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில், வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தியிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
பதுளை – மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் 35 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, காயமடைந்தவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மஹியங்கனை பக்கமாக சுற்றுலா சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் 36 மாணவர்களும் விரிவுரையாளர்கள் இருவரும், இராணுவ அதிகாரிகள் இருவரும் சாரதி உட்பட 41பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த 39 பேர் வரை பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையான 37 ரூபாயை நிலைநிறுத்துவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக அமைச்சின் செயலாளர் எம். எம். நைமுதீனுடன் நடந்த விவாதத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் அந்த விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை என பெற்றொலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு செல்வாக்கு செலுத்திய காரணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சந்திரிகாவின் கணவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு தொடர்பிருப்பதாகவும், குண்டுத் தாக்குதலில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
“சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.
மகிந்த ராஜபக்ச தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு இழப்பு என்பது வேறு விடயம் எனினும் அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை கருதி அவரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தனது அனைத்து சிறப்புரிமைகளையும் நீக்கிவிட்டு ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை தொடர்ந்தும் இருக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் ரணில் மேலும் கோருகின்றார்.
பாராளுமன்ற முறைமையில் அரசாங்கம் தலையிட வேண்டாம் என எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்துகின்றார்.