web log free
September 15, 2025
kumar

kumar

இலங்கையின் முதற்தர தன்னியக்க நிறப்பூச்சு கம்பெனியான,ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயானது, மோட்டார் பந்தய நாட்காட்டியினை ஒகஸ்ட் மாதம் முதல் நவம்பர்  மாதம் வரையினில் பற்றி எரிய வைக்கும் நான்கு தேசிய பந்தய நிகழ்வுத் தொடரான - ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வே SLADAரேசிங் செம்பியன்ஷிப் இற்கான பிரதம அனுசரணையாளர் எனும் தன்னுடைய வகிபாகத்தினை பெருமையுடன் அறிவிக்கின்றது.

தேசிய நெருக்கடிகள், பெருந்தொற்று மற்றும் பொருளாதார சவால்கள் என்பவற்றினால் ஏற்பட்ட பல வருட இடையூறுகளிற்குப் பின்னர், இவ்வருடத்தின் செம்பியன்ஷிப் போட்டியானது விளையாட்டிற்கான முக்கிய புத்துயிர்ப்பாக அமையவுள்ளது. இலங்கை மோட்டார்பந்தய சாரதிகள் சங்கத்தினால் (SLADA) இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப் படையுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இத்;தொடரானது கிராவல் மற்றும் டார்மெக் ஓடுபாதைகளில் தேசத்தின் தலைசிறந்த சாரதிகள் போட்டியிடுவதனை காணவுள்ளது.

செம்பியன்ஷிப் நாட்காட்டியின் அம்சங்களானவை:

16-17 ஒகஸ்ட் - ரோதர்ஹம் கட்டுகுருந்த சுற்றுப்போட்டி 1

30-31 ஒகஸ்ட் கஜபா/ SLADA சுபர்க்ரோஸ் - சாலியபுர

4-5 ஒக்டோபர் - கன்னர்/ SLADA சுபர்க்ரோஸ் - மின்னேரியா

1-2 நவம்பர் - ரோதர்ஹம் கட்டுகுருந்த சுற்றுப்போட்டி 2

இலங்கையில் பெரிதும் கொண்டாடப்படும் வெற்றியாளர்களில் ஒருவரும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் தசாப்த காலத்திற்கும் மேலான வர்த்தகநாம முகவருமான, அஷான் சில்வா அவர்கள், இப்போட்டித்தொடரினை “இந்நாட்டின் மோட்;டார் பந்தயத்திற்கான புதுசக்தி” என்றும் கஜபா மற்றும் கன்னர் சுபர்க்ரோஸ் போன்ற தனித்துவமான போட்டிகளை பார்த்து வளர்ந்த போட்டியாளர்களின் கனவு நனவாகியுள்ளதுஎன்றும் கூறி, அறிமுக நிகழ்வினில் தன்னுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தார்.

பிரதம அனுசரணையாளர் சார்பில் உரையாற்றுகையில்,ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் இலங்கைக்கான தலைவர், திரு. வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள்,இந்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பந்தயப் போட்டித் தொடரை மீளக்கொணர்வதற்காக SLADA உடன் பங்காளராவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் மோட்டார் பந்தயமானது வெறுமனே ஒரு போட்டியாக மாத்திரமின்றி, புத்தாக்கம், திறன் மற்றும் சமுதாய உணர்வினை முன்னோக்கி கொண்டுசெல்லும் ஒரு மேடையாகவும் காணப்படுகின்றது. தன்னியக்க நிறப்பூச்சுக்களின் சந்தையில் முதல்வனாக காணப்படும், நாம் விளையாட்டு மற்றும் பரந்த வாகன உற்பத்தி கைத்தொழிற்றுறை என இரண்டினையும் வலுப்படுத்தும் துவக்கங்களுக்கு ஆதரவளிப்பதனை எமது பொறுப்பாக காண்கிறோம்” எனக்கூறி உள்ளுர் மோட்டார் பந்தயத்தினை தரமுயர்த்துவதிலான வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பினை மீளவலியுறுத்தினார்.

மோட்டார் பந்தயத்திலான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் ஈடுபாடானது இலங்கையின் வாகன உற்பத்தி துறையினை முன்னேற்றுவதற்கான பரந்த, நீண்ட கால மூலோபாயத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. SLADA ரேசிங் மற்றும் வளவை சுபர்க்ரோஸ் போன்ற மிகமுக்கிய நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவதற்கும் மேலாக, இத்துறைசார் அடுத்த தலைமுறை தொழில்வல்லுநர்களை வளர்த்தெடுப்பதற்காக,தொழிற்பயிற்சி அதிகாரசபையுடனான (VTA) பங்குடைமை ஊடாக திறன்களை விருத்திசெய்வதிலும் இவ்வர்த்தகநாமம் முதலிட்டுள்ளது.

பார்வையாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றின் உற்சாகமான ஆதரவுடன், 21 டார்மெக் மற்றும் 23 கிராவல் போட்டிகளுடன் திட்டமிடப்பட்டுள்ள இப்பருவத் தொடரான, SLADA ரேசிங் 2025 ஆனது வேகம், விவேகம் மற்றும் திறன்களின் உயர்வலு கொண்டாட்டமாக காணப்படுமென்பது உறுதியாகியுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார்.  உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகைஇன்று (15) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. 

மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் 11,275,973,750 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. 

அதன்படி, பயனாளிகள் தங்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை இன்று முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக சமீபத்திய நாட்களில் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை, மேலும் அவரை கைது செய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொனராகலையில் சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று, நிகழ்வை செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மொனராகலை, மகந்தன முல்ல வீதியில் உள்ள தனியார் விடுமுறை விடுதியில், சமகி ஜன பலவேகயவின் மொனராகலை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் தொடர்புடைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. எச். எம். தர்மசேன, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கட்சியின் மொனராகலை மாவட்ட அரசியல் அதிகாரசபையின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இந்தக் கூட்டம் கட்சியின் உள் விவகாரம் என்று கூறி வெளியேற்றப்பட்டனர்.

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.

இதன்படி, 2024ஆம் ஆண்டில் அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத கொலைகளை புரிந்தமை தொடர்பான பல அறிக்கைகள் வெளியானதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காயமடைந்த நபர் துன்னான பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இன்னும் வெளியாகவில்லை, மேலும் ஹங்வெல்ல பொலிஸ் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இன்று (14) சிறப்பு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதற்காக இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க 071 - 8598888 என்ற புதிய வாட்ஸ் அப் இலக்கத்தை இலங்கை பொலிஸ் மா அதிபர் வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய புதன்கிழமை (13) அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஊடாக குறுஞ்செய்திகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக ஐ.ஜி.பிக்கு அனுப்ப முடியும். 

இந்த இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.

யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதைகுழியின் மண் மாதிரிகள் தொடர்பான அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்த நிலையில், நாளைய வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மனிதப் புதைகுழி மீதான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இதுவரை 147 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 133 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாம்கட்ட அகழ்வுப்பணிகளின் இரண்டாம்கட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருந்தன. இரண்டாம்கட்ட அகழ்வுப்பணிகளின் மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளது. செம்மணிப் புதைகுழியின் மண்மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் நீதிமன்றத்தால் கோரப்பட்ட நிலையில், நாளைய வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த அகழ்வுப்பணிகளின்போது தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் ஸ்கான் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அது தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. அந்த அறிக்கையும் சிலவேளைகளில் நாளை சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd