அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தமது நம்பிக்கையை கைவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றம் மிகவும் நிச்சயமற்ற நிலையில் காணப்படுவதனால் உறுப்பினர்கள் நம்பிக்கையை கைவிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டிய 10 பொஹொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அண்மையில் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் 06 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்படி, நான்கு எம்.பி.க்கள் அமைச்சுப் பதவிகளை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக தமக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமாயின் அவற்றை ஏற்றுக் கொள்வதாகவும் இல்லை என்றால் ஏதாவது தீர்மானம் எடுக்கத் தயார் எனவும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை, தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இலங்கை வாக்களிக்காமல் பதுங்கிக் கொண்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை 143 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.
ரஷ்யா, வடகொரியா, பெலாரஸ், நிக்கரகுவா, சிரியா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிப்பில் இருந்து இருந்து விலகியிருந்தன.
உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தை மீறி, டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா பகுதிகள் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் இந்த இணைப்பை எந்தவொரு நாடும், சர்வதேச அமைப்புகளும் அங்கீகரிக்க வேண்டாம் என்றும், கோருகின்ற இந்த தீர்மானம், அதன் இணைப்புப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறும், ரஷ்யாவிடம் கோருகிறது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை, ரஷ்யா தனது வெட்டு (veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி, தோற்கடித்த நிலையில், ஐ.நா பொதுச்சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு இம்மாதம் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒருகுடாவத்தை சம்புத்தாலோக விகாரையை இடித்து அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் வழங்கிய உத்தரவை அமுல்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த விகாரையின் தலைவர் சுகத்ஞான தேரர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த போதே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுவை பரிசீலித்தபோதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் இருந்து 64 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி 10 ஹெரோயின் பொதிகள் நேற்று (22) காலை இலங்கை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலன் ஒன்றின் உறைவிப்பான் பெட்டியில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து வந்த Usa Namakazae கப்பலில் Orishamba 8424604 என்ற எண்ணைக் கொண்ட குளிர்பான கொள்கலனின் உறைவிப்பான் பெட்டியில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 64 கோடியே 77 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 கிலோ 193 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த இறக்குமதியை விடுவிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை செய்துகொண்டிருந்த வார்ஃப் கிளார்க் மற்றும் இறக்குமதியாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட சுங்க விசாரணையின் பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் அது தொடர்பான சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செப்டெம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாடு தற்போது எதிர்நோக்கி வரும் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் விரிவான மூலோபாய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும், கடன் மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதில் தனது முதன்மை கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்ட சஞ்சய் காந்தி என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலைக் குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதனை யடுத்து அப்பகுதியை சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவரது வீட்டில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் சுமார் 300 கிலோ அளவிலான கடல் அட்டைகள் பதப்படுத்தப் பட்ட நிலையில் இருந்தது பறிமுதல் செய்யப் பட்டது.
இதனை யடுத்து சஞ்சய் காந்தியை கைது செய்த போலீசார் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். இது குறித்து வனத்துறை தரப்பில் கூறியதாவது : ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கடல் அட்டைகள் மற்றும் போதை பொருட்களை கடத்துவது அதிகரித்துள்ளது. இந்திய அரசால் அட்டவணை ஒன்றில் வகைப் படுத்தப் பட்டுள்ள கடல் அட்டைகளை கடத்துவது தடை செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் அதிக பணத்திற்கு ஆசைப் பட்டு கடல் அட்டைகளை கடல் மார்க்கமாக இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். கடல் அட்டைகள் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ள ஒன்றாகும். இக்குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் நேற்று (21) அழைப்பு விடுத்திருந்த கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கொலையாளிகள் தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும், இவ்வாறான நடவடிக்கைகளில் எவருக்கும் தேவையற்ற செல்வாக்கு செலுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபருக்கு டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் குறிப்பாக அந்த இரண்டு மாகாணங்களிலும் பணிபுரியும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளின் திறமையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தகைய அதிகாரிகளை உடனடியாக நீக்கி உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என பணித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை முன்வைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமூல வரைவில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், குழுக் கூட்டத்தின் போது அந்த விடயங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதுள்ள நிறுவனத்தில் தீர்மானங்களை எடுத்து முதுகெலும்புடன் வேலை செய்யும் அதிகாரிகள் அதிகம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் மிகவும் முக்கியமானது என்றும், இதற்கு தனது கட்சியின் முழு ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை ஆதரித்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெண்களிடமிருந்து பெண்களுக்கும் ஆண்களிடமிருந்து ஆண்களுக்கும் ஓரினச்சேர்க்கை வன்முறைகள் பதிவாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, இது ஓரினச்சேர்க்கை விவகாரம் அல்ல. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
“குறிப்பிட்ட உயர்கல்வி நிலைய அதிகாரி ஒருவருடன் அந்த நிலையத்தில் உள்ள மற்றொரு அதிகாரியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நம் நாட்டின் விவாகரத்துச் சட்டத்தின்படி, இரண்டு பெண்கள் அப்படி இருந்ததால், விவாகரத்து பெறுவதற்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என அமைச்சர் கூறினார்.