நெடுந்தீவு படுகொலைச் சம்பவத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 100 வயது பெண்ணும் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
ஏப்ரல் 22 அன்று நெடுந்தீவில் ஒரு வீட்டில் வசித்த இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 100 வயதுடைய பெண் தாக்குதல் இடம்பெற்று ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் இந்த கொடூரமான குற்றத்தை செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் இருந்து 3 தங்கச் சங்கிலிகள், 2 ஜோடி தங்க வளையல்கள், 8 மோதிரங்கள், 1 ஜோடி காதணிகள், 1 தங்கப் பதக்கம், 2 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் மே 4 முதல் மே 6 வரை மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட மற்றும் அவரது மனைவிக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு தணிக்கை ஆணையம் தடை விதித்துள்ளது.
அதன்படி, அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது.
இதற்குக் காரணம், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தனது பதவிக்காலத்தில் செய்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகும்.
ஆயுர்வேத வைத்தியரான இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் களுத்துறை வடக்கில் வீடொன்றின் பின்னால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு கலிடோ வீதியில் வசிக்கும் விக்கிரமாரச்சிகே பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் வீட்டின் பின்புறம் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மற்றும் பல விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
களுத்துறை வடக்கு நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக மற்றும் குற்றப் பிரிவு நிலைய கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் இந்திரஜித் ஆகியோரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
2020-இல் 16 நிலநடுக்கங்களும் 2021-இல் 18 நிலநடுக்கங்களும் 2022-இல் 5 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
மக்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கமளிப்பதற்காக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம், வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஏனைய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
தற்போதைய அரசாங்கத்தை இறுதி நாள் வரை கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 126க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பொஹொட்டுவாவுக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அத்தியாவசியமானது என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி ஒரு வருடத்திற்குள் சவால்களை சமாளித்தார். 126க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசாங்கத்தை வழிநடத்த ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு உதவுகின்றோம். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்புகிறோம். சிலர் இந்த ஆற்றலை உடைக்க முயற்சி செய்கிறார்கள். சமீபகாலமாக திரு.மகிந்த பிரதமராக முயற்சிப்பதாக ஒரு கதை வந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டேன். தினேஷை பிரதமராக நியமித்தோம். எனவே தினேஷை ஏன் மாற்றுகிறோம் என்று மஹிந்த என்னிடம் கூறினார்.
“இப்போது சஜித் பிரேமதாச பிரதமராக வருவார் என்பது சமீபத்திய செய்தி, இது எங்களை உடைக்க முயற்சிக்கிறது. கடைசி நாள் வரை இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல அதிகபட்ச ஆதரவை வழங்குவோம். தவறு செய்து கட்சிக்கு வந்தவர்கள் இன்று வெளியே வந்து எங்களை விமர்சிக்கின்றனர். ஆனால் கட்சி தொடங்கியவர்கள் இன்றும் எங்களுடன் இருக்கிறார்கள்” என்றார்.
“கிராமத்தைக் கட்டியெழுப்ப விரும்பாதவர்கள்தான் இந்தப் போராட்டம் நடத்தினார்கள். 88/89 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனை மிஹின்லங்காவில் வைப்பதற்காக மகிந்தவுடன் ஒப்பந்தம் போட்ட ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று என்ன சொல்கிறார்? இந்தப் போராட்டத்தினால் கம்பஹா மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. அது என்னை வீழ்த்திவிடும். நான் கவலைப்படவில்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் கம்பஹாவில் பொஹொட்டுவவை வெற்றிபெறச் செய்வதற்கு நான் தலைமைத்துவத்தை வழங்குவேன். என்றும் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று (25) மாலை தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்மிமன பொலிஸார் தெரிவித்தனர்.
அக்மிமன பின்னதுவ புஹுலஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிக்க சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பவில்லை. இடியுடன் கூடிய மழை பெய்து வந்ததால், கணவன், தேயிலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது, விழுந்து கிடந்துள்ளார். பின் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்படி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
'இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலப் பயணம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் விளக்கமளித்தார்.
தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியினால் இந்திய ரூபா பெயரிடப்பட்ட நாணய அலகாக மாற்றப்படுவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல், வாங்கல்கள் மாத்திரமன்றி இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கும் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள தமது நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் மிருகக்காட்சிசாலையில் கண்காட்சிக்காக மாத்திரம் இலங்கையில் இருந்து குரங்குகளை கோருவதாக சீனாவின் ஷிஜியன் வூயு விலங்கு வளர்ப்பு நிறுவனம் விவசாய அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
தனது நிறுவனம் சீனாவில் பிரபல மிருகக்காட்சிசாலை நடத்துவதாகவும் இலங்கையில் உள்ள குரங்குகளில் சிலவற்றை கொடுத்தால் அவற்றை தனது மிருகக்காட்சிசாலையில் காட்சிப்படுத்தலாம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கினால் குரங்குகளை பிடித்து அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தனது நிறுவனம் பல்வேறு நாடுகளில் இருந்து வன விலங்குகளை பெற்று தனது உயிரியல் பூங்காக்களில் கண்காட்சிக்கு பயன்படுத்தியுள்ளதாக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், குறித்த நிறுவனம் ஒரே தடவையில் ஆயிரம் குரங்குகளை சீனாவிற்கு கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு வருடத்திற்குள் இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை அதன் மிருகக்காட்சிசாலைகளுக்கு அழைத்துச் செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வெளியே கொண்டு செல்வதற்கு முன்னர் குரங்குகளைப் பிடிப்பது, தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தால் சீன அரசாங்கத்தின் வனவிலங்கு நிறுவனத்தின் அனுமதிக்கு விண்ணப்பிப்பதாகவும் சீன நிறுவனம் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிரப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த முழுமையான கடையடைப்பிற்கு 07 தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், மக்கள் வீதியில் இறங்கி போராடுவதும் அரசுக்கு எதிரான சதி முயற்சியாக கருதப்பட்டு கைது செய்யப்படலாமென குறித்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, வடக்கு கிழக்கு மாகாணங்களின் 08 மாவட்டங்களிலும் இன்று(25) முழுமையான கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உத்தேச பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை எனவும் சந்தைகள் மூடப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்.தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய நகரங்கள் முற்றாக முடங்கின.
யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு சட்டத்தரணிகள் வருகை தராமையால் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததாக செய்தியாளர் கூறினார்.
யாழ்.வலிகாமம் பகுதியிலும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பிற்கேற்ப முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (25) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில், தனியார் பஸ் சேவைகளும் இடம்பெறவில்லை.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு குறைவாக காணப்பட்டதால், பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டதாக செய்தியாளர் கூறினார்.
அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்கிய போதும் சில உத்தியோகத்தர்கள், போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக கடமைக்கு சமூகமளிக்கவில்லை.
கிளிநொச்சியில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர பொதுச்சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
வவுனியாவின் பல பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைவடைந்ததாக செய்தியாளர்கள் கூறினர்.
சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், விவசாயிகள் தமது உற்பத்திகளை வீதியில் வைத்து விற்பனை செய்வதை காணக்கூடியதாகவிருந்ததென செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான நெடுங்கேணி, செட்டிக்குளம், கனகராயன்குளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன.
மன்னாரில் ஹர்த்தாலுக்கு ஆதரவாக அநேகமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
தனியார் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளதுடன், பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளது.
அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதாக செய்தியாளர் கூறினார்.
வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலை முன்னிட்டு திருகோணமலையிலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.
பிரதேச செயலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேவையை பெறுவதற்கு மக்கள் வருகை தரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பிலும் இன்று(25) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு - செங்கலடி பகுதியிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.
மட்டக்களப்பு - சித்தாண்டி, கிரான், வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களும் இன்று (25) காலை முதல் மூடப்பட்டன.
அரச வங்கிகள் திறக்கப்பட்ட போதிலும், குறித்த பகுதிகளிலுள்ள தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டதாக செய்தியாளர் கூறினார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.