இலங்கையில் இருந்து பறக்கவிடப்பட்ட புறா ஒன்று தமிழக மீனவர்களின் படகில் தஞ்சமடைந்தமை தொடர்பாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த புறாவின் காலில் சீன எழுத்துகளுடன் கூடிய வளையமொன்று இருந்ததாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்ட மீனவர் ஒருவரது படகு பாம்பனில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் பாக்கு நீரிணையில் இருந்தபோது, கடந்த 15 ஆம் திகதி இந்த புறா அதில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, புறாவை மீட்ட மீனவர்கள் அதனை இராமேஸ்வரத்தில் புறாக்களை வளர்க்கும் மீனவர் ஒருவருக்கு வழங்கியுள்ளனர்.
இந்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரது பெயர், தொலைபேசி இலக்கமும் மற்றுமொரு காலில் சீன எழுத்துகள் பொறித்த ஸ்டிக்கரும் எண்களும் காணப்படுவதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புறாவின் காலில் சீன எழுத்துடனான ஸ்டிக்கர் இருந்ததால், பாக்கு நீரிணை பகுதியில் இந்திய கடற்படை ரோந்து கப்பலின் நடமாட்டம், கடல் பாதுகாப்பு குறித்து உளவு பார்க்க சிறிய ரக கேமராவை புறாவின் காலில் கட்டி அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்றைய தினம்(20) பதிவாகியுள்ளது.
இது நிங்கலூ சூரிய கிரகணம் (Ningaloo Solar Eclipse) அல்லது ஹைபிரிட் சூரிய கிரகணம் (Hybrid Solar Eclipse) என வானியல் அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு 'சூரிய கிரகணம்' என அழைக்கப்படுகின்றது.
சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது 'முழு சூரிய கிரகணம்' எனவும் ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது 'பகுதி சூரிய கிரகணம்' எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'ஹைபிரிட் சூரிய கிரகணம்' உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன் முழு கிரகணமாக மாறுமென கூறப்படுகிறது.
சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது, இந்த அரிய வகை கிரகணத்தின் போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என அழைக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் பூரணமாக தெரியக்கூடிய 'ஹைபிரிட் சூரிய கிரகணத்திற்கு' அவுஸ்திரேலியாவின் 'நிங்கலூ' கடற்கரையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஹைபிரிட் சூரிய கிரகணமானது, இன்று(20) காலை 7.04 முதல் நண்பகல் 12.29 வரை நிகழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தென்படாத 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
முட்டையின் எடையின் அடிப்படையில் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை கிலோ ஒன்றுக்கு 880 ரூபாவும் பழுப்பு முட்டை கிலோ ஒன்றுக்கு 920 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலையாக விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், பழுப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும், பழுப்பு முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் காணப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதம் வழங்குவதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் அதிகாரத்தை பாடசாலை அதிபருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சின் செயலாளர் பல விவாதங்களை தவிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், மற்றுமொரு மேலதிக செயலாளர் அவரை புறக்கணித்து இழுத்தடிக்கும் நடைமுறையை பின்பற்றுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தேசிய பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர் அரிதாகவே பங்கேற்கும் கலந்துரையாடலில் கூட வாய்திறக்காமல் தரையையே உற்று நோக்குவதாகவும் அமைச்சர் கூறினார்.
கல்வி அமைச்சின் கல்விச் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ஒருவரின் ஆதரவின்றி கல்வி அமைச்சு 8 மாதங்களாக பல்வேறு சிரமங்களுக்குள்ளான நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தத்தை புறக்கணித்து தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கின்றன.
அனைத்து அரசுப் பாடசாலைகளின் முதல் தவணை 2025ஆம் ஆண்டு முதல் ஜனவரியில் தொடங்க உள்ள நிலையில், உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்து முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் கூறினார்.
கூடுதல் செயலாளர் நீண்ட காலமாக அமைச்சில் அமர்ந்து அமைச்சரை புறக்கணித்து வருவதால், குறித்த மேலதிக செயலாளரை பதவியில் இருந்து நீக்கி, குறித்த மேலதிக செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கல்வி அமைச்சின் செயற்பாடுகளுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய விடயங்களில் நாம் ஒன்றிணைந்து செயற்படும் வேளையில் அதிகாரிகள் இவ்வாறு செயற்படும் நிலை காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியதன் பின்னர் கல்வி அமைச்சு விரும்பிய இலக்குகளை நோக்கி நகர்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த அமைச்சினை யாராவது பொறுப்பேற்க விரும்பினால், பொறுப்பேற்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (20) கடும் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அப்பகுதி மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், வயோதிபர்கள், சிறு குழந்தைகள், வெளியூர் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வெப்பமான காலநிலை தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி - ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவிய போதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியாக தமது நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி அக்குரணையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அக்குரணை நகரின் பாதுகாப்பு நேற்றிரவு முதல் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 அவசர இலக்கத்திற்கு நேற்றிரவு அக்குரணை நகரில் சில நாசகார நடவடிக்கை இடம்பெறும் என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதன் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.
தேவைப்பட்டால் அப்பகுதிக்கு மேலதிக இராணுவக் குழுக்களை அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் மறு அறிவித்தல் வரை அப்பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.