web log free
December 10, 2025
kumar

kumar

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் IMF நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையுடன் இணக்கம் காணப்பட்டுள்ள 48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் நேற்றிரவு(12) நிறைவடைந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் தவணை கொடுப்பனவாக இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கடன் வசதி வழங்கப்படுகிறது. 

இந்த கடன் வசதியின் முதலாவது தவணை கொடுப்பனவாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. 

இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதால், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து, நிவாரண பொருளாதார வலயத்திற்குள் உள்நுழைவதற்கான இயலுமை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது X பதிவில் தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரியை 18% ஆக உயர்த்தியதை ஏற்று கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் (11) இரவு அலரி மாளிகையில் விருந்து நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் நடத்திய விருந்தில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் பெருமளவான அமைச்சர்கள் கலந்துகொண்டதாக அவர் நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சீரழிக்கும் வற் வரி அதிகரிப்பு நிறைவேற்றப்பட்டமை அங்கு கொண்டாடப்பட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வற் அதிகரிக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரும் கூட விருந்தில் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

மொட்டுவிகல் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து தற்போது சுயேட்சையாக செயற்படும் நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை கட்சித் தலைவர்கள் எவரும் பங்கேற்பார்களா இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை என நெலும் மாவத்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்போதைய அரசியல் நிலவரப்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதற்கான ஆயத்தம் நடந்து வருகிறது. 

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனையவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சுமார் 50 கைதிகள் நேற்று (11) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளனர்.

எரிபொருளுக்கான VAT வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படும் என தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

புதிய வரிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 59 ரூபாவினாலும் அதிகரிக்குமென அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோல் 400 ரூபாவிற்கும் அதிகமாகவும், டீசல் ஒரு லீற்றர் கிட்டத்தட்ட 400 ரூபாவிற்கும் விலை நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலையுடன் நான்கு விதமான வரிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும், ஒரு லீற்றர் எரிபொருளுக்கான வரிகள் 125 ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எரிபொருள் கட்டணத்துடன் நீர் மற்றும் மின்சார கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (12) அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவிக்கின்றன.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அதன் அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்துக்கான குறைந்தபட்ச கொடுப்பனவான 20,000 ரூபாவை கோரி இந்த தொழில் நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவிக்கின்றது.

மேலும், டிசம்பர் 13ம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் சுகயீன விடுப்பு அறிக்கையை முடித்துக் கொள்ள மாட்டோம் என தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

பெறுமதி சேர் வரி சட்டமூலம், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) மாலை 4.50க்கு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு 57 வாக்குகள் மேலதிகமாக அளிக்கப்பட்டன.

பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் குழு நிலையில் திருத்தங்களுடனான சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகள் பெறப்பட்டது.  

அதன்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 

ரணில் சஜித் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொய்யான செய்திகளை பரப்பும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து ரணில் சஜித் இணையவுள்ளதாக விளம்பரம் செய்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறானதொரு இணைவு ஒருபோதும் ஏற்படாது என பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்துவதாக  தெரிவித்தார்.

இவ்வாறான பிரசார நிறுவனங்களை ஊடக நிறுவனங்கள் என அழைக்க கூட தாம் ஆசைப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (11) மீண்டும் விவாதிக்கப்படவுள்ள வற் வரி சட்டமூலத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்க தீர்மானித்தமை அக்கட்சியின் அமைச்சர் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களுக்கு சிக்கலாகியுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அரசாங்கம் கொண்டு வரும் சட்டமூலத்தை எதிர்க்க முடியாது எனவும் கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்பதை அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டமூலத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் உணவின் விலை தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

அதாவது மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர். 

முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd