வெப்பமான காலநிலை காரணமாக மன உளைச்சல் உள்ளிட்ட மனநோய்கள் அதிகரிக்கலாம் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ள மனநல மருத்துவர் ரூமி ரூபன், இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கின்றார்.
மேலும், மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவாக இருக்கும் என்றும், அதனால் அவர்கள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார்.
அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்தனைத்திறன் குறைவடையக்கூடும் எனவும் இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலை மே இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சில நாட்களாக நிலவி வரும் வெப்பமான காலநிலையால் ஹூமாவே தீவின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் பலமான தலைவர் ஒருவருடன் இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் ஒருவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது விடயம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு நேற்று (21) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் தெரிவித்தது.
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் மாலத்தீவு நாட்டவர் எனவும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, பிரதான சந்தேகநபர் தொடர்பில் இத்தகைய உண்மைகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், முகமது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா ஹக் என்பவருடனேயே இவ்வாறு தொடர்பு பேணியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம், புஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் விசாரணைக்காக விடுவிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் விடுவிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சிசுக்களை விற்பனை செய்யும் மோசடியை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் நடத்தி வந்த மலேசிய தம்பதியரை கைது செய்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.
அறுபதாயிரம் முதல் எண்பதாயிரம் டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன. மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள் 30,000 முதல் 50,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, நான்காயிரம் இலங்கை சிசுக்கள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் மேலும் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது.
இதனிடையே மலேசியா மெயில் நாளிதழ் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட தம்பதிகள் இலங்கைக் குழந்தைகளுக்கான மலேசிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டமையினால், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளை (22) கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று ஆரம்பமானது.
இதன்போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் விசேட நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி இன்று (21) காலை 8.45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் தொடக்கம் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரை மக்கள் மதில் ஒன்றை அமைக்க கத்தோலிக்க திருச்சபை இன்று திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 8 மணி முதல் கொழும்பு - நீர்கொழும்பு நெடுஞ்சாலையில் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையில் இந்த மக்கள் மதில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இருந்து பறக்கவிடப்பட்ட புறா ஒன்று தமிழக மீனவர்களின் படகில் தஞ்சமடைந்தமை தொடர்பாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த புறாவின் காலில் சீன எழுத்துகளுடன் கூடிய வளையமொன்று இருந்ததாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்ட மீனவர் ஒருவரது படகு பாம்பனில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் பாக்கு நீரிணையில் இருந்தபோது, கடந்த 15 ஆம் திகதி இந்த புறா அதில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, புறாவை மீட்ட மீனவர்கள் அதனை இராமேஸ்வரத்தில் புறாக்களை வளர்க்கும் மீனவர் ஒருவருக்கு வழங்கியுள்ளனர்.
இந்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரது பெயர், தொலைபேசி இலக்கமும் மற்றுமொரு காலில் சீன எழுத்துகள் பொறித்த ஸ்டிக்கரும் எண்களும் காணப்படுவதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புறாவின் காலில் சீன எழுத்துடனான ஸ்டிக்கர் இருந்ததால், பாக்கு நீரிணை பகுதியில் இந்திய கடற்படை ரோந்து கப்பலின் நடமாட்டம், கடல் பாதுகாப்பு குறித்து உளவு பார்க்க சிறிய ரக கேமராவை புறாவின் காலில் கட்டி அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்றைய தினம்(20) பதிவாகியுள்ளது.
இது நிங்கலூ சூரிய கிரகணம் (Ningaloo Solar Eclipse) அல்லது ஹைபிரிட் சூரிய கிரகணம் (Hybrid Solar Eclipse) என வானியல் அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு 'சூரிய கிரகணம்' என அழைக்கப்படுகின்றது.
சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது 'முழு சூரிய கிரகணம்' எனவும் ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது 'பகுதி சூரிய கிரகணம்' எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'ஹைபிரிட் சூரிய கிரகணம்' உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன் முழு கிரகணமாக மாறுமென கூறப்படுகிறது.
சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது, இந்த அரிய வகை கிரகணத்தின் போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என அழைக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் பூரணமாக தெரியக்கூடிய 'ஹைபிரிட் சூரிய கிரகணத்திற்கு' அவுஸ்திரேலியாவின் 'நிங்கலூ' கடற்கரையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஹைபிரிட் சூரிய கிரகணமானது, இன்று(20) காலை 7.04 முதல் நண்பகல் 12.29 வரை நிகழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தென்படாத 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
முட்டையின் எடையின் அடிப்படையில் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை கிலோ ஒன்றுக்கு 880 ரூபாவும் பழுப்பு முட்டை கிலோ ஒன்றுக்கு 920 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலையாக விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், பழுப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும், பழுப்பு முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் காணப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதம் வழங்குவதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் அதிகாரத்தை பாடசாலை அதிபருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.