web log free
May 26, 2024
kumar

kumar

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஆஷு மாரசிங்க ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றியவர். 

வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும், அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் என பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் கல்வி மற்றும் பொது பாதுகாப்பு நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் சேனக கமகே தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுகளின் தரம் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் தரப்படுத்தப்பட்ட ஹெல்மெட்களே சந்தையில் கிடைக்கும் என்றார்.

போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் கருவிகள் ஏற்கனவே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சேனக கமகே குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு வீதி விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 08 ஆக உள்ளது. அவர்களில் 04 அல்லது 05 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என பொலிஸ் பரிசோதகர் சேனக கமகே மேலும் தெரிவித்தார்.

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ஷிலானி பெரேரா  உத்தரவிட்டுள்ளார்.

பொரளை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்ட நீதவான், பொரளை பொலிஸாரால் நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏற்று விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எனவே மேலதிக விசாரணைகளை அந்த திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் அடங்கிய கோப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

அரசுக்கு சொந்தமான வணிக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வட்டி விகிதங்கள் 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வட்டி அதிகரிப்பு டிசம்பர் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தேசிய சேமிப்பு வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வட்டி உயர்வு நிலையான வட்டி விகிதத்தில் எடுக்கப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும். 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (22) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஸ்வதகேயாவ, பமுனுகம மற்றும் தல்டியாவத்த ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

22.12.2022 மாலை 06.00 மணி முதல் 23.12.2022 நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு மின்வெட்டை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வரும் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களில் மின்வெட்டு இருக்காது. இதேவேளை, 2023 டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ஜனவரி மாதத்தில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பொலிஸ் நிலைய மலசலகூடத்தில் கஞ்சா புகைத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரியின் சேவைகள் உடனடியாக அதிகாரிகளால் இடைநீக்கம் செய்யப்பட்டன.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் ஆவார்
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (19) கழிவறைக்குள் ‘கஞ்சா’ புகைத்த போது கைது செய்யப்பட்டதாகவும், அவரது பையை சோதனையிட்ட போது சிறிய கஞ்சா பொதியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 08 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும் மற்றும் ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனம் இன்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 5 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 185 ரூபா)

⭕ ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை 07 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 378 ரூபா)

⭕ 425 கிராம் உள்நாட்டு டின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 480 ரூபா)

⭕ ஒரு கிலோ கிராம் தாய்லாந்து நெத்தலியின் விலை 50 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 1,100 ரூபா)

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதோச நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விலைகளின் கீழ் குறித்த பொருட்களை இன்று(21) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என லங்கா சதொச அறிவித்துள்ளது.

பாதாள உலக நபரான ‘கஞ்சிபானி இம்ரானை’ பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.