web log free
January 13, 2025
kumar

kumar

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

'இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலப் பயணம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் விளக்கமளித்தார். 

தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. 

இலங்கை மத்திய வங்கியினால் இந்திய ரூபா பெயரிடப்பட்ட நாணய அலகாக மாற்றப்படுவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல், வாங்கல்கள் மாத்திரமன்றி இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கும் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள தமது நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் மிருகக்காட்சிசாலையில் கண்காட்சிக்காக மாத்திரம் இலங்கையில் இருந்து  குரங்குகளை கோருவதாக சீனாவின் ஷிஜியன் வூயு விலங்கு வளர்ப்பு நிறுவனம் விவசாய அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

தனது நிறுவனம் சீனாவில் பிரபல மிருகக்காட்சிசாலை நடத்துவதாகவும் இலங்கையில் உள்ள குரங்குகளில் சிலவற்றை கொடுத்தால் அவற்றை தனது மிருகக்காட்சிசாலையில் காட்சிப்படுத்தலாம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கினால் குரங்குகளை பிடித்து அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது நிறுவனம் பல்வேறு நாடுகளில் இருந்து வன விலங்குகளை பெற்று தனது உயிரியல் பூங்காக்களில் கண்காட்சிக்கு பயன்படுத்தியுள்ளதாக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், குறித்த நிறுவனம் ஒரே தடவையில் ஆயிரம் குரங்குகளை சீனாவிற்கு கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு வருடத்திற்குள் இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை அதன் மிருகக்காட்சிசாலைகளுக்கு அழைத்துச் செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வெளியே கொண்டு செல்வதற்கு முன்னர் குரங்குகளைப் பிடிப்பது, தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தால் சீன அரசாங்கத்தின் வனவிலங்கு நிறுவனத்தின் அனுமதிக்கு விண்ணப்பிப்பதாகவும் சீன நிறுவனம் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிரப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த முழுமையான கடையடைப்பிற்கு 07 தமிழ் ​தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், மக்கள் வீதியில் இறங்கி போராடுவதும் அரசுக்கு எதிரான சதி முயற்சியாக கருதப்பட்டு கைது செய்யப்படலாமென குறித்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன் வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, வடக்கு கிழக்கு மாகாணங்களின் 08 மாவட்டங்களிலும் இன்று(25) முழுமையான கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உத்தேச பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதாக  செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை எனவும் சந்தைகள் மூடப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்.தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய நகரங்கள் முற்றாக முடங்கின.

யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு சட்டத்தரணிகள் வருகை தராமையால் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததாக  செய்தியாளர் கூறினார்.

யாழ்.வலிகாமம் பகுதியிலும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பிற்கேற்ப முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (25) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில், தனியார் பஸ் சேவைகளும் இடம்பெறவில்லை.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு குறைவாக காணப்பட்டதால், பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டதாக  செய்தியாளர் கூறினார்.

அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்கிய போதும் சில உத்தியோகத்தர்கள், போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

கிளிநொச்சியில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர பொதுச்சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

வவுனியாவின் பல பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைவடைந்ததாக  செய்தியாளர்கள் கூறினர்.

சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், விவசாயிகள் தமது உற்பத்திகளை வீதியில் வைத்து விற்பனை செய்வதை காணக்கூடியதாகவிருந்ததென  செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான நெடுங்கேணி, செட்டிக்குளம், கனகராயன்குளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன.

மன்னாரில் ஹர்த்தாலுக்கு ஆதரவாக அநேகமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.   

தனியார் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளதுடன், பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளது.

அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதாக  செய்தியாளர் கூறினார்.

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலை முன்னிட்டு திருகோணமலையிலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

பிரதேச செயலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேவையை பெறுவதற்கு மக்கள் வருகை தரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பிலும் இன்று(25) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

மட்டக்களப்பு - சித்தாண்டி, கிரான், வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களும் இன்று (25) காலை முதல் மூடப்பட்டன.

அரச வங்கிகள் திறக்கப்பட்ட போதிலும், குறித்த பகுதிகளிலுள்ள தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டதாக  செய்தியாளர் கூறினார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தெருநாய்கள் சுற்றித் திரிவதை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிள் கண்டுள்ளனர். 

அந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்துவதுடன் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கிறது.

இது குறித்து அதன் பணியாளர்கள் குழுவிடம் கேட்டபோது, ​​இந்த நாய்கள் விமான நிலைய முனைய கட்டிடங்களின் நுழைவு வாயில்களில் தொங்கிக்கொண்டு விமான நிலைய வளாகத்தில் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர்.

இந்த நாய்கள் எப்படியாவது விமான நிலைய ஓடுபாதை அல்லது விமானக் கட்டடத்தில் நுழைந்தால், கடுமையான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

கடந்த வருடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெருநாய்களை சுடுவதற்கு விசேட அதிகாரிகள் (டாக் ஷூட்டர்) நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 1000 மீ. மீ. 50க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் கடத்தும் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இது இடம்பெற்றதாக மின்சக்தி அமைச்சின் அதிகாரியொருவரிடம் கேட்ட போது தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக இருக்கலாம் என சிரேஷ்ட விரிவுரையாளரும் உளவியலாளருமான டொக்டர் சத்துரி சுரவீர எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், 100,000 நபர்களுக்கு 17 தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக  (100,000:17) கூறினார். 

"துரதிர்ஷ்டவசமாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான தரவு எதுவும் பெறப்படவில்லை. இதுவரை நாங்கள் இந்த ஆண்டு நான்கு மாதங்கள் மட்டுமே செலவிட்டுள்ளோம், ஆனால் கடந்த நான்கு மாதங்களுக்குள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற தகவலைப் பெறுகிறோம்.

"இன்னும், ஆண்டுதோறும் 3,000 தற்கொலை வழக்குகள் பதிவாகின்றன, கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது சம்பவங்கள் தினசரி பதிவாகின்றன. தற்கொலை வழக்குகளில் படிப்படியாகக் குறைந்துள்ளது, ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் இப்போது சிறிது அதிகரித்துள்ளது."

எனவே, தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்வதையும், சட்டமா அதிபராக அவரது செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதையும் தடுத்து, பயங்கரவாத தடுப்பு பணியகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்காரணமாக வேலை செய்யும் இடங்களில் போதுமான அளவு நீர் அருந்துவதும், பொதுமக்கள் முடியுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பதும் சிறந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியோர்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தொடர்ந்தும், வீட்டிலேயே இருக்குமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd