web log free
April 25, 2024
kumar

kumar

அதிகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண சேவை கட்டணத்தை 3,500 ரூபாவில் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதேபோல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 9,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் சாதாரண சேவைக் கட்டணம் 2,500 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாகும் அதிகரிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபைக்கு, கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபை வெளியிட்டுள்ள நிதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் 2021ஆம் ஆண்டு 2,145 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அநீதி இழைக்கப்பட்ட புலம்பெயர்ந்த மலையக தமிழர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர் நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அம்மக்களுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இப்பிரச்சினைக் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தற்காலிகமாக அம்மக்கள் அக்குடியிருப்புகளில் இருப்பதற்கும்,தமிழக அரசு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இது தொர்பாக தமிழக அரசால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, TENTEA தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு தமிழக அரசின் நிதிஒதுக்கீட்டில் 650 வீடுகள் இலவசமாக அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என அறிவித்தார். 

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதன்படி சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, பூஜ்ய பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரே இவ்வாறு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பு டொரிங்டன் பிளேஸில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அண்மைய கலந்துரையாடல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் திஸாநாயக்க, கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமைத்துவம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எதிர்காலத்தில் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

1994ஆம் ஆண்டு முதல் கட்சியை ஆட்சி செய்த தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை எந்த காலத்திலும் மாற்றவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் கட்சியின் அரசியலமைப்பு கூட மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறான நெருக்கடிகள் வந்தாலும் கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கக் கூடாது, அதனைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவசர அவசரமாக அமைச்சரவையில் அதிகளவானவர்களை நியமிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் கடுமையான நெருக்கடி நிலை தொடர்ச்சியாக எழுந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மொட்டுவில் இருந்து பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த நியமனங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படாததால், கூடிய விரைவில் அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்குமாறு மொட்டுவின் பலமானவர்கள் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பில் மொட்டு அமைச்சர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், கட்சித் தலைவர்களின் அறிவித்தலுக்கு அமைய சாகர காரியவசம் எம்.பி இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டுவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பலர் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தேசிய மட்டத்தில் அவருக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடு பூராகவும் ஜே.வி.பியின் தேர்தல் தொகுதிகளை நடத்தும் வேலைத்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜே.வி.பியின் மத்திய குழுவில் பேசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மத்திய குழுவில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட மாத்தளை சுஜாதா மகளிர் கல்லூரி மாணவிகள் 42 பேர் நேற்று (15) காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட சிறுமிகளை வரவேற்கும் நிகழ்வின் போது இந்த சிறுமிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

விழாவின் போது மயங்கி விழுந்து சிறுமிகளும் தங்களுக்கு வயிற்றில் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பால் மா இறக்குமதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையால் 4 இலட்சம் கிலோகிராம் பால் மா அடங்கிய 17 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக தேங்கிக் கிடப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த 17 பால் மா கொள்கலன்களுக்காக 40 இலட்சம் தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் இதன் காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க நேரிடலாம் எனவும் விஜேசூரிய தெரிவித்தார்.

கப்பலில் பால் ஏற்றப்படும் போது ஒரு சட்டமும், நடுக்கடலில் திரும்பும் போது மற்றுமொரு சட்டமும், கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியதும் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால் மாவை விநியோகித்த நிறுவனங்கள் வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவிற்கு கொண்டு வரப்பட்ட பால் மாவை மீண்டும் ஏற்றுமதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கலன்களை விடுவிப்பதற்கு கைத்தொழில் அமைச்சின் அங்கீகாரம் இருந்த போதிலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் பால் மா கொள்கலன்களை சிறையில் வைத்திருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்  உபுல்மலி பிரேமதிலக்க, தமது திணைக்களத்தில் வினைத்திறனற்ற சூழ்நிலை இல்லை எனவும், கட்டுப்பாட்டாளர் என்ற வகையில் தாம் எவ்வித ஆவணங்களையும் மறைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பால் மா பிரச்சினை என்னவென்று தனக்கு சரியாகத் தெரியாது எனவும், பொதுச் சட்டத்திற்கு எதிராக ஏதேனும் இறக்குமதி செய்யப்பட்டால், அது எக்காரணம் கொண்டும் வெளியிடப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் வேரூன்றியிருக்கும் பாரியளவிலான ஊழலைத் தடுப்பதற்கான விரிவான நடவடிக்கையை ஆரம்பிக்க நியாயமான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கான திட்டங்கள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான முன்வரிசைக் குழுவொன்று ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க இந்த குழுவின் தலைவராக உள்ளார்.

முதற்கட்டமாக, அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த, ஊழல் தடுப்புச் சட்டத்தில் புதிய முன்மொழிவுகளை அரசாங்கம் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படும் இரண்டு நிறுவனங்களை குறிவைத்து செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற பத்து பாரிய ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் டிசம்பர் மாதத்தின் முதல் சில நாட்களில் நாட்டுக்கு வெளிப்படுத்த கரு ஜயசூரிய எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.