நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது.
2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவின் பதிவு செய்யப்படாத வாகனம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் வீதியோர மரத்தில் மோதியதில் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து இடம்பெற்ற போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தை செலுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் முன்னர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், விபத்தின் போது வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது.
நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு முதல் இதற்கான செயற்பாடுகளை கொரோனா மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இந்த நிலையில், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை ஏப்ரல் மாதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும், மே - ஜூன் மாதமளவில் முழுமையான கள நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதள் பின்னர் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
இலங்கையில் தற்கொலைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்த தவறான தரவுகளை திருத்துமாறு அந்த அமைப்புக்கு அறிவித்துள்ளதாக மனநல சுகாதார பணிப்பாளர் டொக்டர் ரொஹான் ரத்நாயக்க நேற்று (16) தெரிவித்தார்.
உலகில் தற்கொலை செய்து கொள்வதில் இலங்கை 30வது இடத்தில் இருந்த போதிலும், முதல் மூன்று நாடுகளில் இலங்கையையும் சேர்த்து உலக சுகாதார ஸ்தாபனம் தவறான தரவுகளை தயாரித்துள்ளதாக பணிப்பாளர் குற்றம் சாட்டினார்.
அவரைப் பொறுத்தவரை, சீக்கிரம் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், ஆனால் உலக நாடுகளில் இலங்கையின் நிலைப்பாடு வித்தியாசமாக இருந்தாலும், தற்கொலை செய்து கொள்ளும் போக்கு குறையவில்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரொஹான் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தற்கொலைகள் பதிவாகி வருவதாகத் தெரிவித்த பணிப்பாளர், 2022ஆம் ஆண்டில் 2833 ஆண்களும் 574 பெண்களும் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்.
அந்த வருடத்தில் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்பான தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் கம்பஹா மாவட்டத்தில் தற்கொலைகளில் அசாதாரண நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
66 சதவீத தற்கொலைகள் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டதாகக் கூறிய அவர், 18 சதவீத தற்கொலைகள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.
நிதிப் பிரச்சினைகள், மனநோய், மதுப் பாவனை, உறவு முறிவு, குடும்ப நெருக்கடி, தாக்குதல், ஆண்மைக்குறைவு, தீராத வலி மற்றும் நோயினால், பெரும்பாலும் முதியவர்கள், யுவதிகள், கைதிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் பூச்சிக்கொல்லிகளை உபயோகித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். மருந்துகளை உட்கொண்டு பல்வேறு வழிகளில் தற்கொலை செய்து கொண்டார்.
2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில், 100,000 மக்கள் தொகைக்கு 15.6 சதவிகிதம் தற்கொலைகள் பதிவாகும் என்றும், தற்கொலை முயற்சிகள் 20 சதவிகிதம் பதிவாகும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு தற்கொலைக்கு முயன்ற 90,000 பேர் கடைசி நிமிடத்தில் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டதாகவும் இயக்குனர் கூறினார்.
உலகில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றார்.
ரொஹான் ரத்நாயக்க மேலும் குறிப்பிடுகையில், சுகாதார அமைச்சு 15 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொள்பவர்களை இனங்கண்டு, பூச்சிக்கொல்லிகளை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து அவர்களுக்குக் கற்பித்தல் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது.
வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ரவிந்து சங்க டி சில்வா என்ற 'கழுதை மூஞ்சன்' என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளோம்.
வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
அதனை நிதியமைச்சே இறுதி செய்ய வேண்டும். எனவே குறித்த செயற்பாடுகள் நிதியமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் எதிர்காலத்தில் நிதியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் இறுதித் தீர்மானம் வரும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும். களுத்துறை பிரதேச சபைக்கானபுதிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் பொதுச் செயலாளர் திலக் வராகொட மற்றும் அதன் களுத்துறைக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர் செனல் வெல்கம ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் பலரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.
பிரதிவாதியான தேர்தல் ஆணையம் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள்ளும், மனுதாரர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு எதிர் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த மனு மே 12ஆம் திகதி வாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரேசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.
மனுதாரர்கள் சார்பாக அனுராத வேரகொடவின் அறிவுறுத்தலின் பேரில் ஆஷிக் ஹாசிம் உடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியா ஆஜரானார். தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே ஆஜரானார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி, ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.02 ரூபாவாகவும் விற்பனை விலை 346.33 ரூபாவாகவும் உள்ளது.
சில வர்த்தக வங்கிகளில் ஒரு டொலர் 335 ரூபாவாகவும் விற்பனை விலை 350 ரூபாவாகவும் உள்ளது.
அரசாங்கத்தின் வரி கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படட பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறைவு செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட மின்சார சபை ஊழியர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பெட்ரோலியம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவையாளர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் நேற்றைய(15) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றிருந்தன.
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால், தாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், தமது கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ள காரணத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினை இன்று(16) காலை 8.00 மணிக்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து நேற்று(15) முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை இன்று(16) காலை 6.30 உடன் தற்காலிகமாக நிறைவுக்கு கொண்டு வந்தாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்று(16) காலை 7 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுக சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று(15) நள்ளிரவு முதல் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இன்று(16) காலை 8 மணி முதல் வங்கி ஊழியர்கள் வழமை போன்று தமது கடமைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்களின் சங்கம் கூறியுள்ளது.
தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று(15) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
ரயில் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமும் நேற்று(15) நள்ளிரவுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக லொகோமொடிவ் ரயில் பொறியியலாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதேவேளை, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று(16) பிற்பகல் கூடுகிறது.