web log free
September 14, 2024
kumar

kumar

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த உத்தரவை இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் சயனைட் உடலுக்குள் கலந்ததால் ஏற்பட்டுள்ளது என கொழும்பு, புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (08.02.2023) தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டர்,கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழக்கவில்லை என்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான உண்மைகளை, கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் நேற்று சமர்பித்துள்ளனர்.

வெளிவந்த புதிய தகவல்கள்

இதனிடையே ஷாப்டரின் ஐபோன், எக்ஸ் எஸ் வகை தொலைபேசி மற்றும் ஐபேட் ஆகியவற்றின் தரவுகளை ஆய்வு செய்ததில் பல முக்கிய உண்மைகள் தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஷாப்டர் தனது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருக்காக தயாரிக்கப்பட்ட பல ஆவணங்களை சம்பந்தப்பட்ட தொலைபேசி மற்றும் ஐபேடில் கண்டுபிடித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ஷாப்டரின் ஐ-பேடில் ஆப்பிள் நோட்டில், தரவு பட்டியல் என்ற கட்டுரை இருந்ததாகவும் அதில் KCM மற்றும் ZIP TIE எனப்படும் வார்த்தைகளும் மற்றும் பல பொருட்களின் பட்டியலும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயனைட் என்பது KCM என்ற குறுகிய பெயரிலும், ZIP TIE என்பது எதையாவது கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டேப் என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், THE LIST என்ற மற்றொரு பட்டியல் இருந்ததாகவும், அதில் 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டியலில் ஐந்து பேர்

குறித்த பட்டியலில் முத்துக்குமாரண, ஜகத் செனவிரத்ன, ஜயரத்ன, அன்டன் ஹேமந்த மற்றும் எலியன் குணவர்தன ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

அந்த நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் முகவரிகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட ஐந்து பெயர்களில் கடைசி நான்கு பெயர்களில் 'அழிக்கும் நோக்கம் அடங்கிய வாக்கியம்' இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரையன் தாமஸின் புகைப்படங்கள் அடங்கிய PDF கோப்பும் iPadல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜோசபின் தாமஸ் மற்றும் கிறிஸ்டியன் தாமஸ் ஆகியோரின் பெயர்களும் அதில் உள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

'MOST IMPORTANT WHO IS BEHIND B.T. GET MY MONEY BACK' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, தினேஷ் ஷாப்டர் தனது இருப்பிடத்தை தனது செயலாளருக்கு அனுப்பி வைத்து, பொரளை பொது மயானம் என குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

தொலைபேசி அழைப்பு விபரங்கள்

இதற்கிடையில், பிரையன் தாமஸின் தொலைப்பேசியும் சோதனை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, தினேஷ் ஷாப்டர் உயிருடன் இருந்த கடைசி நாளான டிசம்பர் 25, 2019 முதல் டிசம்பர் 15, 2022 வரை, தினேஷ் ஷாப்டருக்கும், பிரையன் தாமஸுக்கும் இடையே அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கிடையில், ஷாப்டர் இறந்த நாளில், பிற்பகல் 2:48:50 மணிக்கு, பிரையன் தாமஸ், ஷாப்டரைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவருக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியுள்ளார்.

மரணத்திற்கான காரணம்

ஷாப்டர் பிரையன் தோமஸை பொரளை மயானத்திற்கு அழைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரையன் தாமஸுக்கு ஷாப்டர் அனுப்பிய சில செய்திகள் நீக்கப்பட்டிருப்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

பின்னர் தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

அதில் அவர் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழக்கவில்லை என்றும், சயனைட் உடலுக்குள் கலந்ததால் மரணம் ஏற்பட்டதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ சாட்சியங்கள் முரண்பாடானவை என ஷாப்டர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரே மருத்துவர் இரண்டு தடவைகள் மரணத்திற்கு இரண்டு காரணங்களை கூறியதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.

சமகி ஜன பலவேகயா (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை உரையை புறக்கணித்தன.

ஜனாதிபதி உரையை ஆரம்பிக்கும் போது மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர்.

இலங்கையின் அரசியல் கட்சிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து அவை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சிப் பதிவு, வெளிப்படையான செயல்பாடு, உறுப்பினர் உரிமை, நிதி மற்றும் வருமானத்தைப் பெறுதல், தேர்தல் பிரச்சாரச் செலவுகள், ஊடகங்களைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்களை ஆராயும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது செயற்படும் அரசியல் கட்சிகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.அரசியல் கட்சிகளை விட, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணிகளே தற்போதைய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

இதில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் காசுக்கு விற்கப்பட்டுள்ளன. பேட்டையில் நடைபாதையில் இருப்பது போல், கட்சி மற்றும் சின்னம் விற்கப்படுகிறது. சில விற்கப்படுகின்றன. தரப்பினரின் உரிமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்போது பிக்குகள் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகாசங்கத்தினர் இன்று (08) கோட்டை, பெரகும்பா பிரிவெனாவிற்கு அருகில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்திய போதும், பிக்குகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

23வது திருத்த எதிர்ப்புக்கு பின் தேரர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிக்கு எதிராக மகா சங்கரத்தினரால் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை  பிக்குகள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர, பரகும்பா பிரிவேனுக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி தற்போது பாராளுமன்ற வளாகத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய பதில் வழங்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றினால் வாக்களிக்கப் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகளுக்கு அமைவாக திறைசேரி செயலாளரிடம் அடிப்படைத் தொகையாக 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு வாரங்களாக அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இதனைத் தெரிவித்தார். 

பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் மரணமடைந்த கோடீஸ்வர வர்த்தகர்  பொல்லால் தலையில் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் வர்த்தகருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் போது தொழிலதிபர் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த தொழிலதிபர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர் எனவும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடவென அழைக்கப்பட்ட நபர் கோரிய ஒரு லட்சம் ரூபா பணத்தை வழங்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் சென்று முடிந்துள்ளது. 

துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

துருக்கி – சிரியா எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 1800ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 7000திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.