கலவர பூமியாக மாறிய கேகாலை ரம்புக்கன பொலீஸ் பிரதேசத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கேகாலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிமா நிறுவனத்தின் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் விற்பனை முகவர்களுக்கு தேவையான கோதுமை மா தொகையை கொள்வனவு செய்யும் ஒரு கிலோ கிராமுக்கு மேலதிகமாக 40 ரூபாயை வைப்புச் செய்யுமாறு நிறுவனம் விற்பனை முகவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விலை அதிகரிப்புடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் சில்லறை விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கும் என விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 450 கிராம் பாண் ஒன்றின் விலை மேலும் 20 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் ஏனைய கோதுமை மா சிற்றுண்டிகள் 10 ரூபாவால் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 450 கிராம் பாண் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் அதன் விலை 130 ரூபாக அதிகரிக்கும். கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால், வெதுப்பக உணவு தயாரிப்புகளுக்கான ஏனைய மூலப் பொருட்களின் விலைகளும் 70 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் வெதுப்பக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரம்புக்கன பகுதியில் மக்கள் வீதிக்கு இறங்கி வாகனங்களை மறித்து டயர்களை எரித்து ரயில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் சில படங்கள் வருமாறு,
எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வருமாறு,
கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இலங்கை Caa2 மட்டத்திலிருந்து Ca தரத்திற்கு தாழ்த்தப்பட்டுள்ளது.
வௌிநாட்டு கடனை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு Moody’s நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இன்று(19) மற்றும் நாளைய(20) தினங்களில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கும் மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் பின்வருமாறு....
92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 329 ரூபாய்.
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிகள் மறிக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்:
காக்காபள்ளிய, கட்டுநாயக்க, ரம்புக்கனை, காலி, கேகாலை, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, கம்பளை, கண்டி, மத்துகம, அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தண்டவாளங்களும் மறிக்கப்பட்டுள்ளமையால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்து எரிக்கப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.