web log free
December 21, 2024
kumar

kumar

சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.

இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (07) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

தற்போது அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டம் சீர்குலைந்தால் 2022 பெப்ரவரி மாத நிலமையைவிட மிகவும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை பின்வருமாறு:-

"இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் 2022 மார்ச் நடுப்பகுதியில் தீர்மானித்தது. அதன் பிறகு அந்நியச் செலாவணி நெருக்கடி மோசமடைந்தபோது, ஏப்ரல் 2022 நடுப்பகுதியில், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை ஒரு வங்குரோத்து பொருளாதாரமாக அன்று தொடக்கம் செயற்பட்டது. அதன் பாதகமான விளைவுகளை நீங்கள் அனைவரும் அனுபவித்திருக்கிறீர்கள். 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்த நாடு எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, மருந்துகளை வாங்குவதில் உள்ள சிரமங்கள், பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி மற்றும் வறுமை அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளைச் சந்தித்துள்ளது. இலங்கையில் இவ்வாறான ஒரு அவல நிலை நவீன வரலாற்றில் இருந்ததில்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.

ஜூன் 2022 முதல் நிலவி வந்த பொருளாதாரப் பிரச்சினைகள் படிப்படியாக ஓரளவுக்குத் தீர்க்கப்படும் போக்கை காண்பித்தது. உரங்கள் வழங்கியதால், கடந்த வரும் சிறு மற்றும் பெரும் போகங்களில் சிறந்த அறுவடை கிடைத்தது. விவசாய பொருட்களின் ஏற்றுமதியும் வழமை நிலைக்கு திரும்பியது.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்க்கும் வகையில், ஸ்திரப்படுத்தல் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கு பொருத்தமான திட்டத்தை அரசு செயற்படுத்தியது. அவற்றில் சிலவற்றை இந்த உயரிய சபையில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

எரிவாயு மற்றும் பெற்றோல் என்பன வழமை போன்று கிடைப்பதை உறுதி செய்வது, பாடசாலைகள் மற்றும் பரீட்சைகளை உரிய முறையில் நடத்தவது, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது, உரங்கள் வழங்குவது, சமுர்த்தி பயனாளர்களுக்கு மேலதிக நிதி வழங்குவது மற்றும் 2019 இல் அமுல்படுத்தப்பட்ட வரிக் கொள்கை மீள செயற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நேரிட்டது. 2019 இன் பிற்பகுதியில் அவசரகால அமுல்படுத்தப்பட்ட வரிக் குறைப்புகளுக்குப் பிறகு, அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆகக் குறைந்தது. அதை சீர்செய்ய புதிய வரிக் கொள்கைகளை முன்னெடுக்க நேரிட்டது.

அதேபோல், மத்திய வங்கியின் நிதிக் கொள்கைகளின் கீழ் வட்டி விகிதங்களை உயர்த்த நேரிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துவதே எம்மிடமிருந்த சாதகமான நடவடிக்கையாகும்.

கடந்த ஆண்டு செப்டெம்பரில் சராசரி பணவீக்கம் 70% வரை உயர்ந்தது. உணவுப் பணவீக்கம் 90 சதவீதத்தைத் தாண்டியது. ஆனால், தற்போது பணவீக்க வேகம் 50 வீதம் வரை குறைந்துள்ளது. அத்தோடு உணவுப் பணவீக்கமும் 54 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், பணப் பரிமாற்ற விதிகளை கடுமையாக்கவும், இறக்குமதியை கட்டுப்படுத்தவும் நேரிட்டது.

எங்களால் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாது என அறிவித்தவுடன், வெளிநாடுகளும் நிதி நிறுவனங்களும் இலங்கையுடனான நிதிக் கொடுக்கல் வாங்கல்களைக் கட்டுப்படுத்தின. உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கூட புதிதாக நிதி வழங்குவதை நிறுத்தின. வெளிநாட்டு உதவியில் செயற்படுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் நிறுத்த நேரிட்டது. கடன்பத்திரங்களை கூட திறக்க முடியவில்லை. இலங்கைக்கு கடன் வழங்கக் கூடாது என்ற தர நிலைக்கு, கடன் தர நிர்ணய நிறுவனங்கள் எமது நாட்டைத் தரமிறக்கின.

இந்நிலையில் எமக்கு

· ஏற்றுமதி

· வெளிநாட்டில் பணிபுரிவதற்கு தொழிலாளர் இடம்பெயர்தல்

· சுற்றுலாத் துறை மூலம் அந்நியச் செலாவணி கிடைத்தன.

நாடு மற்றும் சமூகத்தில் நிலவிய சாதகமற்ற சூழ்நிலையினால், 2022 ஆம் ஆண்டு முழுவதும் சுற்றுலாத்துறை வெற்றிபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு நிலைமையில் இருந்து எழுந்து நிற்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. அந்நியச் செலாவணி அனுப்புவது சாதாரண நிலைமைகளில் இருந்த மட்டத்தை விட 1/3 ஆகக் குறைந்தது. இது மேலும் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகின்றது. ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க உதவும் உள்ளீடுகளை இறக்குமதி செய்யப் போதுமான அந்நியச் செலாவணி நம்மிடம் இன்னும் இல்லை.

எமது நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள நெருக்கடி, குறிப்பாக அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து 2021 முதல் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து எச்சரித்தது. 2022 நடுப்பகுதியில் இருந்து IMF உடன் தொடர்ச்சியாக பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தப் பிரதிநிதிகள் இடைக்கிடையே இலங்கைக்கு வந்து, கொடுப்பனவு நிலுவை நெருக்கடி, நிதி நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து எங்களுடன் ஆழமாக கலந்துரையாடினர். மேலும், பல தசாப்தங்களாக தாமதமாகி வரும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை தொடர்ந்தும் ஒத்திவைக்க முடியாது என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.

2022 செப்டெம்பர் முதலாம் திகதியில் IMF உடன் அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை எட்டினோம். எவ்வாறாயினும், நாடு கடன் நிலைத்தன்மையை அடையும் வரை இந்த ஒப்பந்தத்தை IMF பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்க முடியாது என்று IMF தெரிவித்துள்ளது. எனவே, கடனை நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அரசு இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து பேச்சுகளை நடத்தியது.

இதற்காக, Lasads மற்றும் Clifford Chance ஆகிய சர்வதேச நிபுணத்துவ நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றோம். இது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான பேச்சுகளாகும்.

இதன்படி, இலங்கைக்கு கடன் வழங்கிய பரிஸ் கழகத்துடனும், பரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத இந்தியா மற்றும் சீனாவுடனும் நிதியுதவி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டது.  

2023 ஜனவரி 16 ஆம் திகதி அந்த உறுதிமொழியை இந்தியா வழங்கியது. சீனா அதை ஜனவரி 18 அன்று வழங்கியது. 2023.01.25 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைக்கு நிதி உத்தரவாதத்தை வழங்க பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டது. அதன் பிறகு, மார்ச் 2ஆம் திகதி IMFஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் IMF கடன் உதவித் திட்டம் பற்றி கலந்துரையோடினேன்.

IMF உடனான பேச்சின் போது, அதன் உடன்பாட்டைப் பெறுவதற்கு பல பணிகளை முன்கூட்டியே செய்ய வேண்டியிருந்தது. மின்சார விலையை மறுசீரமைத்தல், பெற்றோலிய விலைகளை மறுசீரமைத்தல், மத்திய வங்கியின் சுயாதீனத்தை உறுதி செய்தல், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துதல், பொது நிறுவனங்களை மறுசீரமைத்தல், சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துதல், அரச வருமானத்தை அதிகரிக்கப் பணியாற்றுதல் மற்றும் பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல், பெற்றோலிய மற்றும் மின்சாரத் துறைகளில் போட்டித்தன்மையை விரிவுபடுத்துதல் போன்ற பல விடயங்களை முன்கூட்டியே செய்ய வேண்டியிருந்தது. இலங்கை முன்கூட்டியே செய்திருக்க வேண்டிய அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

மேலும், இந்த நாட்டு மக்கள் படும் இன்னல்களை நான் அறிவேன். அதற்காக அரசு என்ற வகையில் மன்னிப்புக் கோருகின்றோம். நேற்றிரவு சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உத்தரவாதக் கடிதத்தைப் பெற்றோம். அதன்படி அன்றிரவே நானும் மத்திய வங்கி ஆளுநரும் இணக்கப்பாட்டுக் கடிதத்தில் கையொப்பமிட்டு சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பி வைத்தோம். இப்போது நமது கடமைகள் நிறைவடைந்துவிட்டன.

இந்த மாத இறுதிக்குள், நான்காவது வாரமளவில் , IMF தனது கடமையைச் செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன். அதன்பிறகு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து முதலாம் கட்ட நிதி கிடைக்கும்.

IMF உடனான இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் செய்து கொண்டதைப் போலல்லாமல், இந்த முறை உடன்பட்ட விடயங்களை தவறாமல் செய்யப்பட வேண்டும். இல்லையேல் IMF இலங்கையுடன் இணைந்து செயற்படாது. அந்தச் சூழ்நிலையில், பலதரப்பு மற்றும் இருதரப்பு நிதி நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட முடியாது.

அதன்படி, வெளிநாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் தடைப்படும். ஒரு விடயத்தை நாம் வலியுறுத்த வேண்டும். தற்போது நாம் வெளிநாட்டு கடனை செலுத்தவில்லை. (பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் செலுத்தப்படுகிறது) IMF உடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் முறிந்தால், வெளிநாடுகள் மற்றும் தனியார் வங்கிகளில் (SB) வாங்கிய கடனை செலுத்த நேரிடும். 2029 வரை ஆண்டுதோறும் சுமார் 6 முதல் 7 வரையான பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள் செலுத்தப்பட வேண்டும். இந்தக் கடனை அடைக்க நம்மிடம் அந்நியச் செலாவணி இல்லை.

எனவே, IMF தலையிட்டு வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் நிலைத்தன்மை உரையாடலைத் தொடர வேண்டும். இன்று அதற்கு தற்போது மாற்று வழி இல்லை. எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம், நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான விசேட முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பல கடினமான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தோம். பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக இன்னல்கள் ஏற்படும். இத்தகைய கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த 7 - 8 மாதங்களாக செலவழித்து, அதை ஒரு சாதகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இதிலிருந்து முன்னேற பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. இதை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு செல்வாக்குச் செலுத்தும் குழுக்கள், அரசியல் கட்சிகள், தொண்டர் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்றவை இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

வரிச்சுமை அதிகமாக உள்ளதாக தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த நிலைமை ஒரு குறுகிய காலத்திற்கு பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தத் திட்டம் சீர்குலைந்தால், 2022 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருந்த நிலையை விட மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படலாம். அப்போது சம்பளம், ஓய்வூதியம், வேலை என்பன பறிபோகும் தொழிற்சாலைகள் மூடப்படும், பாடசாலைகள் தினமும் மூடப்படும் என்று பலரும் நினைத்தார்கள். அவற்றை நாம் ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால், சமூகத்தில் செல்வாக்கு மிக்க குழுக்கள் நாம் முன்வைத்த வேலைத்திட்டத்தை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாசமாக்கினால், அதிலிருந்து உருவாகும் சமூக மாற்றம், மிகவும் ஆபத்தானதாக இருக்கும். இது நம் சமூகத்தில் முன்னெப்போதும் இல்லாத சோகமான காலத்துக்கு வழிவகுக்கும்.

கருத்துக்களை வெளியிடும் உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதனை அமைதியாகச் செய்யுங்கள். கூட்டங்கள் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இந்தப் போராட்டத்தின் மூலம் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால், அதற்கு எதிராக இந்த அரசு கடுமையாகச் செயற்படும் என்று கூற விரும்புகின்றேன்.

நான் ஒன்று சொல்ல வேண்டும், இப்போது டொலர் விலை குறைந்து வருகிறது. ஜூலை 9ஆம் திகதி இந்த நாடு வீழ்ந்திருந்தால் இன்று இந்த நிலை இருந்திருக்காது. அப்போது யாரின் உதவியும் இருக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுத்த முப்படை மற்றும் பொலிஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் எடுத்த அந்த நடவடிக்கையால்தான் இன்று நமக்கு எரிபொருளும் மின்சாரமும் கிடைத்துள்ளது. எனவே, அந்த சக்திகளுக்கு இந்த நிலைமையை தகர்க்க அனுமதிக்க மாட்டோம்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான பயணத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சியை நான் கேட்டுக்கொள்கின்றேன். இதனை நிறைவேற்றிய பின்னர் ஜனாதிபதித் தேர்தலா, பொதுத் தேர்தலா எது தேவை என்பதை தீர்மானிக்க முடியும். அதுவரை நீங்கள் காத்திருக்கத் தயாரா இல்லையா என்று கேட்கின்றேன். உங்களுக்கு இதை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும்.

குறிப்பாக ஜூன் நடுப்பகுதிக்குள் நாட்டின் வருமான நிலைமையை குறித்து கருத்தில்கொள்ள வேண்டும். அதிலிருந்து முடிவுகளை எடுக்கலாம். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பித்து முன்மொழிவொன்றை கொண்டு வருவேன். அதை சபை ஏற்பதா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்றேல் எங்களுக்கு மாற்று வழியைக் தாருங்கள்.

அதன் பிறகு எதிர்கால பயணம் மற்றும் திட்டங்கள் தொடர்பில் நாம் புதிய வரைபு ஒன்றை சமர்ப்பிக்க இருக்கின்றோம். அதனை தேசிய சபைக்கும் வழங்குவோம். நாடாளுமன்றத்தில் ஆராய்ந்து உடன்பாடு எட்டப்பட்ட பிறகு நீண்ட கால மற்றும் நடுத்தர கால திட்டத்தை முன்வைப்பேன்.

தற்போது, நாடாளுமன்றத்தின் தேசிய சபைக் குழுக்களிடமிருந்து பல அறிக்கைகள் கிடைத்துள்ளன. அதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஆனால் 8 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் இப்பணியை எங்களால் முடிக்க முடிந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவோம்" - என்றார்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இம்மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக எழுந்துள்ள எதிர்பாராத தவிர்க்க முடியாத காரணங்களினால் வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் சட்டத்தின்படி, ஏப்ரல் 25-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வௌியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா தனது உத்தரவாதத்தை வழங்க தாமதித்ததன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் தாமதமானது.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரு பாரிய வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட 7 பேர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் மடகாஸ்கர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் பெண் ஒருவரும் உள்ளதாகவும் ஏனையவர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் பொழுதுபோக்கிற்காக அண்டனானரிவோ விமான நிலையத்திற்கு வந்தபோது மடகாஸ்கரின் குடிவரவு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர். 

இந்தியப் பெருங்கடலில் நிக்கோபார் தீவுகளை சூழவுள்ள பகுதியில் இன்று (06) அதிகாலை 5.07 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உடமைகளுக்கோ உயிர் சேதங்களுக்கோ இதுவரை எந்த தகவலும் இல்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கும் நிக்கோபார் தீவுகளுக்கும் இடையிலான தூரம் சுமார் 1436 கி.மீ., இந்த நிலநடுக்கத்தால் இலங்கை பாதிக்கப்படவில்லை.

ஆசியாவிலேயே இலங்கை இரண்டாவது அதிகூடிய மின்சார விலையைக் கொண்டிருப்பதாகவும் மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கு இந்நாட்டு ஆட்சியாளர்களிடம் முறையான தீர்வுகள் இல்லை என்றும் எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய குற்றஞ்சாட்டுகிறார்.

ஒரு நாடு என்ற வகையில் நெருக்கடியிலிருந்து மீளத் தேவையான வெற்றிகரமான நடவடிக்கைகள் எதுவும் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வரலாற்றில் இதற்கு முன்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது அரசியல் அதிகாரிகள் மக்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியதாகவும், ஆனால் இம்முறை அவ்வாறான குறிப்புகளோ விளக்கங்களோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

500 மெகாவாட் மின்சாரம் எரிபொருளால் எடுக்கப்படும் எனவும், அந்தத் தொகை சம்பூரில் இருந்து வர வேண்டும் எனவும் திட்டம் இருந்ததாகவும் ஆனால் அது பலனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொறியியல் நிறுவகத்தின் வடமேற்குக் கிளை மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இணைந்தே இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளன.

அந்த கடிதத்தின் பிரகாரம், எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குழந்தைகள் மத்தியில் ஒரு வகை வைரஸ் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தொண்டை வலி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளை இதன் மூலம் காணலாம் என்றார்.

இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் 12,496 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 9,435 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் துறையின் தரவுகளின்படி, இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.

சுற்றுப்புற சூழலை கவனித்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு பரவுவதை குறைக்க முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்துள்ளதால், அவர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்களின் அபிப்பிராயத்திற்கு அமைய நியமிக்கப்படும் புதிய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தை நடத்த முயற்சிப்பதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் ஆதரவை இலங்கை பெறாது என்றும் அவர் கூறுகிறார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd