மட்டக்களப்பு, பட்டிப்பளை தாண்டாமலைக் காட்டில் உள்ள பாறைக் குகை ஒன்றில் வசித்து வந்தபோது கண்டுபிடிக்கப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் எஸ். நகுலேஸ்வரன் கூறுகிறார்.
நான்கு வருடங்களுக்கும் மேலாக அந்தக் குகையில் வசித்து வந்த அவர், பெரும்பாலும் வனப் பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் டேவிட் என்று அழைக்கப்பட்டவர்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர் எனவும், குறித்த நபர் தற்போது மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், அவர் வீட்டில் இருந்து காணாமல் போனதை அடுத்து, உறவினர்கள் அவரைத் தேடினர், ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாததால், அவரைத் தேடுவதைக் கைவிட்டனர்.
காட்டுக்குள் சென்ற ஒருவர் இவரைப் பார்த்து தகவல் தெரிவித்ததையடுத்து அம்பியூலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் குழுவினர் அவரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேக மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற விவகாரக் குழுவில் திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் பரிந்துரைத்தார். பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் ஏனைய சிரேஷ்டர்களும் அதற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.
பிரேரணையின் பூர்வாங்க வரைவை நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்த சாகர காரியவசம், முன்மொழிவை பரிசீலித்து அதில் தமது கட்சியின் கருத்துக்களை உள்ளடக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், மொட்டு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பிரேரணையாக, திட்டமிட்டபடி வாக்கெடுப்பை நடத்துவதற்கான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டை காணாமல் போனமை தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்படி கிரெடிட் கார்டில் சுமார் 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிற்கு பொலிஸாரால் நேற்று அறிவிக்கப்பட்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி கோட்டேயிலுள்ள வீடொன்றில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேளையில் தனது கடன் அட்டை காணாமல் போனதாக ரோஹித ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.
விசாரணை நோக்கங்களுக்காக வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை அறிக்கையை வழங்குமாறு சம்பத் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன்.
எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை என்னிடம் தாராளமாக எடுத்துக்கூறலாம். என்னால் முடிந்தவற்றை செய்து தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக உள்ளேன் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் ஊடாகவே பாராளுமன்றம் பிரவேசித்தார். ஆரம்பத்தில் அவர் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.
இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் விசேட காணோளி மூலமாக விரிவாக விளக்கியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றது முதல் இன்று வரை எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது, மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமையாகும்.
2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தபோது, எனது அமைச்சின் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்துக்காக 680.79 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது. உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 396.48 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
வாழ்வாதார அபிவிருத்திகளுக்காக 68.83 மில்லியன் ரூபாவில் செலவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு 2.08 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்துடன், இந்திய வீடமைப்பு திட்டத்துக்காக 2020 ஆம் ஆண்டில் 0.88 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
அந்தவகையில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் மேற்படி திட்டங்களுக்காக 1,236.18 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றும் வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்துவதற்காகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காகவும் தனியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன.
2021 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் அமைச்சின் ஊடாக வருகின்ற வீடமைப்பு திட்டத்துக்காக 314.37 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது. மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டங்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவில்லை.
எனவே, வீடமைப்பு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 385.24 ரூபா ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
அதேபோல 2021 இல் இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகளை நிர்மாணிக்க 1084.11 ரூபா செலவளிக்கப்பட்டது. கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் என்பதால் இக்கால கட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. இதனால் இந்திய வீடமைப்பு திட்டமும் சற்று தாமதமானது.
2021 ஆம் ஆண்டில் 93 வீதிகள் அமைக்கப்பட்டன. பொது வேலைத்திட்டங்களும் (அபிவிருத்தி, உட்கட்டமைப்பு) முன்னெடுக்கப்பட்டன. இவ்விரு திட்டங்களுக்காகவும் 177.13 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல புதிதாக 25 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக 42.70 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. தகரம் மாற்றும் 34 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்காக 4.70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. வடிகாலமைப்பு சம்பந்தமாக 220 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்காக 21.40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
ஆரம்ப பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சம்பந்தமான 12 வேலைத்திட்டங்கள் 15.77 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டன. நீர்வளங்கள் திட்டத்தின்கீழ் 6 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக 4.93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். இந்திய வீடமைப்பு திட்டத்தையும் அமுல்படுத்த உத்தேசித்திருந்தோம். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள், எம்மை அரசிலிருந்து வெளியேற வைத்தன. ஏப்ரல் 05 ஆம் திகதி பதவி விலகல் கடிதத்தை கையளித்தேன்.
அதன்பின்னர் ஜனாதிபதியும் பதவி விலக நேரிட்டது. பொருளாதார நெருக்கடியும் உக்கிரம் அடைந்தது. இதனால் எம்மால் எதிர்பார்த்தளவு வேலைத்திட்டங்களை 2022 ஆம் முன்னெடுக்க முடியாமல்போனது. எனினும், ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று காலப்பகுதிக்குள் அமைச்சின் ஊடாக இடம்பெற்ற வீடமைப்பு திட்டத்துக்காக 164.69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் 154. 03 மில்லியன் ரூபா செலவளித்திருந்தோம். உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 138.13 மில்லியன் ரூபா செலவளித்தோம்.
இவ்வாறு கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். என்மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தனர். எனவே, அவர்களுக்கு உண்மையுள்ளவராக சேவை செய்துள்ளேன் என நம்புகின்றேன். இவற்றை விளம்பரப்படுத்தாதவே நாம் செய்த தவறு, அதனால்தான் விமர்சனங்கள் எழுகின்றன.
தற்போது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக செயற்படுகின்றேன். எனவே, மக்களுக்கு அதிகளவான சேவைகளை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாகும். மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கும். அவர்கள் எந்த பகுதிகளில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள், பேஸ் புக் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக எனக்கு தகவல் தாருங்கள். என்னால் முடிந்தவற்றை மக்களுக்கு நிச்சயம் செய்வேன்.
இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். டில்லியில் நடைபெற்ற பேச்சில் சாதகமான பதில் கிடைத்துள்ளது. மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றேன்.சிறு தாமதம் ஏற்படலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்றார்.
நுவரெலியா, பிதுருதலாகல சரணாலயத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் நேற்று காலை பிதுருதலாகல காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்று வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 72 வயதுடையவர் எனவும், சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது.
அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பதவி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தயங்க மாட்டோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார, கிட்டத்தட்ட 3.5 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) காரணம் என்று கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு நிர்ணயித்த அளவுகோல்களை நிறைவேற்றியதன் பின்னர் வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் தற்போது இலங்கையின் எதிரியாக பார்க்கப்படுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி இவ்வாறு தொடர்ந்தால் அவரை பதவி நீக்கம் செய்ய தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) திகதி மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது..
இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 6 வாகனங்களை சீர் செய்ய நிதிப் பற்றாக்குறை காரணமாக அவற்றை ஏலம் விடுவதற்கு கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி 2020ஆம் ஆண்டு முதல் Land Kusher வகை V8 (V8), Land Rover, Micro, Tata ஆகிய வாகனங்கள் அமைச்சு வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகனங்கள் கடந்த 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், இந்த வாகனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய அதிக அளவில் பணம் செலவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வாகனங்களை கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருத்தினால் ஏனைய வாகனங்களை திருத்துவதற்கு பணம் இருக்காது என அமைச்சு கூறுகிறது.
இதன் காரணமாக டெண்டர் நடைமுறையை பின்பற்றி அந்த வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள மாவு நிறுவனங்கள் மாவின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ளன.
இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் ஒரு கிலோ சீனியின் விலையை 15 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளனர்.