புத்தளம் - தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தில்லையடி பாடசாலையொன்றில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் நேற்று முன்தினம் (23) நடைபெற்றது. இதன்போது, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டது.
சில மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் யோசணைக்கு ஆதரவு தெரிவித்த வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (25) கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான வாக்கெடுப்பு நேற்று(24) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இது கட்சியின் தீர்மானத்திற்கு எதிரானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவை புதிய நியமனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது கவுரவ பதவியாக வழங்கப்பட்டு மற்றையது ஊதியம் வழங்கப்படாமல் போக்குவரத்து வசதி மட்டும் செய்து தரப்படுகிறது.
தான் மேயராக பதவி வகித்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ கார் மற்றும் சாரதியை ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைத்து அதனை தனது போக்குவரத்து வசதிகளுக்கு பயன்படுத்துமாறும் முன்னாள் மேயர் ஜனாதிபதி அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, கார் மற்றும் அதன் முன்னாள் சாரதியை ஜனாதிபதி செயலகத்தில் இணைக்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று(25) முற்பகல் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நீதிமன்ற விசேட வைத்தியர்கள் குழுவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவரது உடல் இன்று(25) தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொரளை மயானத்திற்கு பொரளை பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அரசாங்கம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று (24) இணைந்துகொண்டார்.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இந்த அரசாங்கம் முடிவுக்கு வரும் எனவும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனக ரத்நாயக்கவிடம் கை ஓங்கி அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க காத்திருப்பவர்களும் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிக்கு செல்ல விரும்புவதாகவும், அரசாங்கத்தினால் அவர்கள் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பிரதி வெள்ளிக்கிழமைகளின் காலை வேளையை டெங்கு ஒழிப்பு நேரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் அரச, தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகள், வீடுகள் அனைத்திலும் சுற்றாடலை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் S. ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அனைத்து நிறுவனங்களையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ், முப்படையினர் மற்றும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வௌ்ளிக்கிழமைகளில் காலையில் இரண்டு மணித்தியாலத்தையாவது சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளுக்காக ஒதுக்கிக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் S. ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன.
தேயிலை மலையில் புலியின் தாக்குதலுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளி ஒருவர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்ஓயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.
பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவரை, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி இன்று (24) தாக்கியுள்ளது.
புலியை காப்புக்காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நல்லதன்னிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்கள் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய்கள் தோட்டத் தொழிலாளர்களுடன் தேயிலைத் தோட்டத்திற்கு வருவதுடன், தேயிலைத் தோட்டத்திற்கு நாய்களை வேட்டையாட வரும் புலிகள் வேட்டையாடுவதற்கு இடையூறு விளைவிப்பவர்களைத் தாக்கி காயப்படுத்துவதாக நல்லதண்ணியா வனவிலங்கு அலுவலகம் தெரிவிக்கிறது.
3 கிலோ 397 கிராம் தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் போன்களை மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ரூ.7.5 மில்லியன் தண்ட பணம் விதிக்கப்பட்டதுடன் தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுச் செயலாளர் தன்னை தாக்கியதாக ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்தது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தாம் தாக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.