web log free
May 26, 2024
kumar

kumar

கிளிநொச்சி, கோண்டாவில் பகுதியில் உள்ள நீர் கால்வாயில் கூரிய ஆயுதத்தால் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் ஊற்றுப்புலம் ஏரியின் நீர் வயல்களுக்குள் செல்லும் கால்வாயில் சடலம் ஒன்று காணப்பட்ட விவசாயி ஒருவர் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை பரிசோதித்த போது உடலில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.

ஒரு கும்பல் அல்லது நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தாக்குதலை நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பி. சத்தியராஜ் என்ற நபரே கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் கண்டுள்ளதாகவும்,  மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அந்த நோயாளி தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் இவர் எனவும், குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். 

பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

இந்த பிரேரணையை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 500 குழந்தைகளுக்கு ஒரு குவளை பால் இலவசமாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் தொடர்பான குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எனினும், வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சிட்னி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு, குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதிமன்றில் நிரூபிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வன்புணர்வு குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணக்கம் தெரிவிக்காமையால் 25,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நடிகை நயன்தாரா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வெளிநாட்டிற்கு விக்னேஷ் சிவன் உடன் சென்று கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் வாடகை தாய் மூலம் இந்த தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பிறந்தநாள் வெளிநாட்டில் கொண்டாடப்படும் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவின் 38வது பிறந்த நாள் நவம்பர் 28ஆம் தேதி வர இருக்கும் நிலையில் இந்த ஆண்டு நயன்தாரா தனது பிறந்தநாளுக்கு எந்த வெளிநாடும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. திருமணமான பின்னரும் குழந்தை பெற்ற பின்னரும் வரும் முதல் பிறந்தநாள் என்றாலும் இந்த பிறந்த நாளை அவர் தனது குழந்தைகளுடன் வீட்டிலேயே கொண்டாட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிறந்தநாள் தினத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து ஒரு விருந்து வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அட்லீ இயக்கி வரும் ’ஜவான்’ படத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள உள்ளார். அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரு சில வாரங்களில் விக்னேஷ் சிவன் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது முன்னோடியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆளுநர் என்பது மாகாண சபைகள் மீது நிறைவேற்று அதிகாரங்களை செலுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பதவியாகும். மாகாண சபையினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் சம்பந்தப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும்.

இந்த நாட்களில் மாகாண சபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத நிலையில், ஆளுநர்கள் அவர்களின் விவகாரங்களில் முழு அதிகாரத்தையும் செலுத்துகின்றனர்.

அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச ரி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ரி20 உலகக் கிண்ண தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ரி20 பந்துவீச்சாளர்களில் அவர் முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.

இதுவரை 52 சர்வதேச டிரி20 போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில் விடுவித்தமை மக்களை ஏமாற்றும் நாடகம் எனவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாது அரசாங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையவே செயற்படுவதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் சட்டத்தை அமுல்படுத்தாமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்களின் சுயமரியாதை மற்றும் சுதந்திரத்திற்காக தலையிட்டு நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்த தலைவர்களை ஊக்குவித்து நாட்டில் நீதி மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முனைப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கர்தினால் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையிலான சாட்சியங்களை பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்திருப்பது மற்றும் உண்மையை மறைக்க அரசாங்க அதிகாரிகள் முயற்சிப்பது இந்த நயவஞ்சக முயற்சியின் மற்றொரு படியாகும் என்றும் அவர் கூறுகிறார்.

எனவே, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்களை பொதுமக்களுக்கு வெளியிடுமாறும், இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கருத்து, பேச்சு மற்றும் அமைதியான போராட்டச் சுதந்திரத்தை அரசாங்கம் மீறுவதாக கர்தினால் குற்றம்சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி மற்றும் பல்கலைக்கழக பிக்குகள் பேரவையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்மா ஆகியோர் 75 நாட்களாக குற்றஞ்சாட்டப்படாமல் அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கர்தினால் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.  

இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் எதிர்வரும் காலங்களில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர்களும் புதிய அரசியல் பிரசாரத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் காலங்களில் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இவரைத் தவிர மேலும் மூன்று கேபினட் அமைச்சர்களும் இந்த அரசியல் இயக்கத்தில் இணையவுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் ஆகியோரால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் நியாயமான சமூகத்திற்கான தேசிய பிரச்சாரத்துடன் இணைந்து இந்த அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் தமது தேசிய பிரச்சாரம் தொடர்பாக அண்மையில் உரை நிகழ்த்தியிருந்தனர்.

ஆரம்பிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் இயக்கம் அரசியல் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்ட தேசிய கொள்கையுடன் உருவாக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக சிவில் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பங்கேற்பாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது.