web log free
December 21, 2024
kumar

kumar

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்துள்ளதால், அவர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்களின் அபிப்பிராயத்திற்கு அமைய நியமிக்கப்படும் புதிய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தை நடத்த முயற்சிப்பதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் ஆதரவை இலங்கை பெறாது என்றும் அவர் கூறுகிறார்.

பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை சந்தேக நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய அதிபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருடத்தின் மத்தியில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தயாராக இருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அது பொய்யானது என பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரின் தலையீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார். 

தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு செய்திருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் படி, மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆகவே, சட்டத்திற்கு இணங்க தேர்தலை நடத்துவதாக இருந்தால், மார்ச் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, நாடாளுமன்றத்தின் உணவுச் செலவு சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உணவுக்கான மாதாந்தச் செலவு சுமார் தொண்ணூறு இலட்சம் ரூபாவாக இருந்தாலும் அது தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் உணவுக்காக செலவிடப்படும் பணத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் அதன் ஊழியர்களுக்கான உணவுக்காக செலவிடப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் நாட்களில் மட்டுமே உணவை எடுத்துக்கொள்கிறார்கள், அதாவது ஒரு மாதத்திற்கு எட்டு நாட்கள். சில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருந்து உணவு எடுத்து செல்வதில்லை.

ஆனால் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் அரசு வேலை நாட்களில் சலுகை விலையில் உணவு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கையில் நிலநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் இணைத்து இந்தத் திட்டத்தைத் தயாரித்து வருவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் கூறுகிறது.

மொனராகலை புத்தல பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சிறிய நில அதிர்வுகள் காரணமாக அப்பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித்பிரேம குறிப்பிட்டார்.

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தடம் புரண்ட ரயில் பெட்டியை அகற்றும் பணி தற்போது இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது. 

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ லங்கா தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக சந்தையில் எரிவாயு வில பணவீக்கத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை அதிகரிக்க முடிவு செய்தது.

எவ்வாறாயினும், எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவு நாளை அறிவிக்கப்படும்.

பொதுத் தேர்தலால் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் வீதியில் இறங்கிப் போராடுவதால் அது சாத்தியமாகாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

கடந்த ஜூலை மாதத்தில் பாராளுமன்றத்தை பாதுகாத்தமைக்காக முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். 

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள நாடுகளில் அராஜகம் தலைதூக்கும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்றம் இல்லாவிட்டால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போகும் என சுட்டிக்காட்டினார். 

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பலன்கள் விரைவில் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

திருகோணமலை விமானப்படைத் தளத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை மார்ச் 9 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நேற்று அறிவிப்பதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு அமைய, நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி, தேர்தலுக்கு பொருத்தமான திகதியை அறிவிக்க தீர்மானித்ததாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 9 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd