பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூலகாரணத்தை வெளிக்கொணர, இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்றும் போலீசார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பலவீனமடையவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.
அதற்கமைய இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் 1.30 வரையான ஒன்றரை மணித்தியாலங்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலம் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடியின மக்களுக்கு முறையான அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக அவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னில இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
மக்களின் தனித்துவமான பொருளாதார, சமூக, கலாசார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை சட்ட தரப்பினர் கிரிமினல் குற்றங்களாக அறிமுகப்படுத்தியதால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முறைப்பாட்டில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், சுற்றாடல் அமைச்சு, பொலிஸ் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகார சபை, காணி அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் என்பன பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த புகாரில், பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களிலும், அவர்கள் மற்றும் அவர்களது பூர்வீக நிலங்களிலும் நிம்மதியாக வாழ உரிமை கோரியுள்ளனர்.
பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னிலட்டோ தலைமையிலான குழுவினர் கடந்த 18ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.
தம்பனை, பொல்லேபெத்த, ஹென்னானிகல, வாகரை, கரகச்சேனை, தோக்கூர், கட்டப்பறிச்சான் ஆகிய பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிவாசி தலைவர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்தனர்.
நுவரெலியா - நானுஓயா ஊடாக தலவாக்கலை பகுதியை நோக்கிச் செல்லும் இரதல்ல பிரதான குறுக்கு வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி பாரிய விபத்து சம்பவித்துள்ளது.
இதில் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (20) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்து சம்பவத்தில் வேன் ஒன்றி்ல் பயணித்தவர்களி்ல் ஆறு பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பஸ்ஸில் பயணித்த 42 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக தேர்தல் தினத்தன்றும் வாக்கு எண்ணிக்கைக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியும் என்றாலும், அந்த இயந்திரங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலைமை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக மின்சார சபை ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 எம்.பி.க்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த அமைச்சுப் பிரமாணத்தில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், விளையாட்டு, போக்குவரத்து, தொழில், மின்சாரம், ஊடகம், முதலீட்டு ஊக்குவிப்பு, உள்நாட்டலுவல்கள் ஆகிய அமைச்சுப் பதவிகள் மாறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தற்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்கள் மாற்றங்கள் மற்றும் இராஜினாமாவுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலத்தின் ஊடாக உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா என்பதை இன்னும் அறிவிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் குறித்த சட்டமூலம் அமுலுக்கு வரும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
ஆணைக்குழுவிடம் உரிய சட்டமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் முடிவெடுக்க முடியும் என்றார்.
இதேவேளை, இந்த சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏறக்குறைய ஒரு மாத காலம் எடுக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.
ஆனால், இந்த மசோதாவின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், தேர்தல் 6 மாதங்கள் கூட தாமதமாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டிருப்பதற்கு இந்தியாவின் உதவியே மிக முக்கிய காரணம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஜெய்சங்கரும், அலி சப்ரியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அலி சப்ரி, ''நாங்கள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் ஓரளவு மீண்டுள்ளோம். இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அரசின் உதவிதான். இது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல.
அத்தியாவசியப் பொருட்கள், மனிதாபிமான உதவிகள் என 4 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது. இந்த உதவிதான் இலங்கை ஓரளவு மீள மிக முக்கிய காரணம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய அரசுக்கு, இந்திய மக்களுக்கு இலங்கை அதிபர் சார்பிலும் இலங்கை மக்கள் சார்பிலும் ஆழமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோல், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் அளிக்க இந்தியா அளித்த உத்தரவாதமே காரணம். இந்தியாதான் முதன்முதலாக இலங்கைக்கு உத்தரவாதம் அளித்தது. அதற்காகவும் நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய ஜெய்சங்கர், ''பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை வெளிவர எவ்வாறு உதவ முடியுமோ அதை இந்தியா உடனடியாகச் செய்தது. இலங்கைக்கு உதவும் மற்ற நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக காத்திருக்காமல் இந்தியா உதவியது. இலங்கைக்கு கடன் அளிக்கும் விவகாரத்தில், சர்வதேச அமைப்புகள் தயக்கமின்றி கடனுதவி அளித்து இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது'' என தெரிவித்தார்.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21) பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன்படி நாளை (21) காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கொழும்பு, தெஹிவளை, கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.