ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக தான் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக அவர் நேற்று கொழும்பில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் இன்று காலை இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் ஒன்றில் டுபாய் சென்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பசில் ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளியான இலங்கை பத்திரிகையாளர் பேரவையின் தலைவர் மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.
நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.
இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர்.
போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு நேற்று (15) இரவு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்து ஆதரவு தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 18-ம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ள நிலையில் நாட்டில் அரசியல் ஸ்திர தன்மையை காண்பிக்கும் வகையில் இந்த அமைச்சரவை நியமனம் இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் பலர் முன்வரவில்லை. அதனால் முன்னாள் அமைச்சர்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறப்பாக செயற்பட்ட ராஜாங்க அமைச்சர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் புதிய அமைச்சரவையில் பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ச மற்றும் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் இடம்பெறமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கடன் வரியின் கீழ் 37,500 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றி வரும் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது சுமார் 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்.
நேற்று வந்த 41,000 மெட்ரிக் தொன் டீசல் தற்போது இறக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏழு மூளை கொண்டவர் என அழைக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று பகல் 1 மணி தொடக்கம் மோட்டார் சைக்கிளுக்கு 1000 ரூபாவிற்கும் முச்சக்கர வண்டிக்கு 1500 ரூபாவிற்கும் கார் ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
பஸ், லொறி, வர்த்தக தேவை வாகனங்களுக்கு கட்டுப்பாடு கிடையாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தை நடத்தி வருபவர்கள், போராட்டம் நடத்தப்படும் இடத்தில் உள்ள குப்பைகளை பைகளில் சேகரித்து வெளியில் கொண்டு செல்ல தயாராக வைத்துள்ளளனர்.
குப்பைகள் கறுப்பு பைகளில் பொதி செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த பொதிகளுக்கு சிகப்பு நிற சால்வையை அணிவித்து, காலிமுகத் திடலில் வரிசையாக காட்சிக்கு வைத்துள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர ஏனையோர் குரக்கன் சால்வையை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவியில் இருந்து விலக கோரி நடத்தப்படும் இந்த போராட்டம் இன்று 7வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெறுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கனவே குப்பைகள் சேகரிக்கும் வாளிகளில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில அரசியல்வாதிகளின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தனர்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக பிரசாத் காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு வந்து சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ளார்.
24 மணித்தியாலங்களாக உண்ணாவிரதம் இருந்து இந்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியே தாம் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.