web log free
February 11, 2025
kumar

kumar

ஏ. டி. எம். சாவடிகளில் தங்கி, பல்வேறு குழப்பங்களை தோற்றுவித்து அவர்களின் ஏ. டி.எம் அட்டையை மோசடியான முறையில் திருடி ஐம்பது இலட்சம் (50) ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கடுவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேக நபரிடம் இருந்து வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமான 8 வங்கி அட்டைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர் கடுவெல அரச வங்கிக்கு அருகில் தங்கியிருந்து சுமார் 40 முறை மக்களை ஏமாற்றி இருபது இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாலம்பே மற்றும் பியகம பிரதேசங்களில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கி ஏ.டி.எம் மையங்களிலும் சந்தேக நபர் தங்கி பணத்தை ஏமாற்றியதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

 

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று 6 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் ஹரிஷ் ரஹூப் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நஷீம் ஷா, சதாப் கான் மற்றும் இப்திகர் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகபட்சமாக 55 ஓட்டங்களையும் இப்திகர் அஹமட் 32 ஓடட்ங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுக்களையும் மற்றும் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6 முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகவும், இரண்டாம் தடவையாகவும் மூன்றாம் தடவையாகவும் தோற்றும் மாணவர்கள் தமக்கு நாள் தோறும் இது குறித்து கோரிக்கைகளை விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவிட் காரணமாக மாணவர்களினால் நீண்ட காலம் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் 2022ம் ஆண்டு பரீட்சை நடாத்துவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

இரண்டாம்,மூன்றாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு அவர் கோரியுள்ளார். 

பாராளுமன்றத்தை கூட்டி தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் 6 மாத கால அவகாசம் அவர்களுக்கு தருவதாகவும் இல்லை என்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று நாட்டு மக்களின் முடிவை கேட்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

"நான் பாராளுமன்றத்தை ஒருமுறை கூட்டி தேர்தல் சீர்திருத்தங்களை அனுமதிப்பேன். அதற்காக அவர்களுக்கு 06 மாத கால அவகாசம் தருகிறேன். இல்லை என்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று நாட்டு மக்களின் முடிவை கேட்பேன்."

இலங்கையில் வருடம் தோறும் சுமார் 3 ஆயிரத்து 200 பேர் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைமை காணப்படுவதாக தேசிய மனநல சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் தற்கொலை செய்துக்கொள்வதை தடுக்கும் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதுடன் செயல் மூலம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது என்ற தலைப்பில் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை தொனிப்பொருளின் கீழ் இந்த தினம் அனுஷ்டிக்கப்படும். தற்கொலைக்கு பதிலாக மாற்று வழி இருக்கின்றது என்பதை நினைவூட்டுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகில் வருடந்தோறும் சுமார் 7 லட்சத்து 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். மேலும் பலர் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

உலகில் தற்கொலை செய்துக்கொள்வோரின் அதிகமான சதவீதம் ஆசிய பிராந்தியத்திலேயே பதிவாகி வருவதாக தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் அரோஷ விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரச கூட்டுத்தாபனங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் தேவையை பூர்த்தி செய்யும் பொது நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களினால் ஏற்படும் பாரிய நட்டத்தை அரசாங்கத்தால் இனி தாங்க முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களின் ஊழியர்களுக்கு 111 வாகனங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழக் கூட முடியாத நிலையில் முப்பத்தேழு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் நாட்டின் செலவினம் மேலும் அதிகரிக்கும் என்றார்.

ஒரு இராஜாங்க அமைச்சருக்கு 5 பேர் கொண்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அவர்களில் மூவருக்கு அரசு மூன்று வாகனங்களை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய சிறுவனை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் மாஞ்சோலைசேனை பகுதி சிறுவனை முன்னிலைப்படுத்திய போதே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தந்தை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், கிண்ணியா பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி மாணிக்க ராசா நளினி உட்பட அவரது குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது.

குறித்த சிறுமி சட்ட வைத்திய நிபுணர் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அல்லது மூடவும், அதேபோன்ற நிறுவனங்களை இணைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அரசின் தொடர் செலவுகளை குறைக்கவும், தேவையற்ற செலவுகளை குறைக்கவும் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வுகளைப் பெற்று நேரடியான மற்றும் விரைவான பதில்களைப் பெறக்கூடிய முதலீடுகள் வடிவில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த ஆண்டுக்கான குறைந்தபட்ச செலவில் நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணத்திற்கு விண்ணப்பிக்குமாறு நிதி அமைச்சகம் ஏற்கனவே அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு நிலக்கரியை வழங்குவது தற்போது சாத்தியமில்லை என குறைந்த விலைக்கு வழங்கிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரை இந்த தீர்மானத்தை மேற்கொள்வதாக இலங்கையில் உள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் தேவையான நிலக்கரி கையிருப்பு நாட்டிற்கு கிடைக்காவிட்டால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அப்போது ஏழு அல்லது எட்டு மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்ய வேண்டியிருக்கும் என்று ஆணைக்குழு கூறுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd