இன்று (20) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதுடன் அவர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் 'கொழும்பு நகர மையத்திற்கு' அழைத்து வரப்பட்டுள்ளார்.
இவர் நடித்த ‘தி கேம்’ படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கைக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியின் பின்னரே அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்காக தற்போது தேசியப்பட்டியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பெரும்பாலும் தம்மிக்க பெரேரா பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின் சிறிது காலத்தில் அவர் பிரதமராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தற்போது தாய்லாந்தில் இருக்கும் அவர் அடுத்த சில நாட்களில் இலங்கை வர உள்ளார்.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை (20) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9.00 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் அதேவேளை கொழும்பு 4 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இருக்கும்.
அதனால் நுகர்வோர் போதுமான தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் தலைமறைவாக உள்ள பிரித்தானிய இளம் பிரஜையை உடனடியாக கைது செய்து மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு குடிவரவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவியுடன் அவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ள கெல்லி ஃபேசர், தனது மீதான விசா மீறல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டவர் மற்றும் அவருக்கு இந்த நாட்டில் இருந்து உதவி செய்யும் உயர் அதிகாரிகள் பற்றிய மறைக்கப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் வெளிநாடு செல்வதற்கான விமான டிக்கெட்டை பெறும் வரை மிரிஹான குடிவரவு முகாமில் தடுத்து வைக்குமாறும், கறுப்புப் பட்டியலில் சேர்த்து நாடு கடத்தப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு வரவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சி.என்.என். ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி, மாலைதீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும், பின்னர் தாய்லாந்துக்கும் பயணமானார்.
முன்னாள் ஜனாதிபதியின் விஜயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித பங்கும் இல்லை எனவும், இலங்கை பிரஜை என்ற வகையில் விரும்பியவாறு பயணிக்க முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் சி.என்.என்.க்கு மேலும் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்கு ஒத்துழைப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஹட்டன் நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கடனட்டை காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறிய தரப்பினரிடம் சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் 50,000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் வசிக்கும் இவர் மீது லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், சார்ஜன் 20,000 ரூபாயை பெறும்போது கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர்.
இது ஜூலை 9ஆம் திகதி கலவரக்காரர்களால் ரணிலின் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து இதுவரை சிரச அலைவரிசையின் தலைவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடகவியலாளர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட ரட்டா என்ற ரதிது சேனாரத்னவின் வங்கிக் கணக்கில் 5 மில்லியன் ரூபாவை வரவு வைத்த நபரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அவர் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொகை தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டமை தொடர்பில் ரதிது சேனாரத்ன பொலிஸாரிடமும் வங்கியிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.