தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்ததன் பின்னர் முதல் வார இறுதியில் (சனிக்கிழமை) மாத்திரம் 31 லட்சத்துக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
டிக்கெட், உணவு மற்றும் பானங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் வருமானம் கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தாமரை கோபுரத்தின் அதிசயத்தை காண நேற்று (17ம் திகதி) சுமார் ஐம்பது வெளிநாட்டவர்கள் உட்பட 7300 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து செயல் அலுவலர் மேலும் கூறியதாவது: கடந்த 15ம் திகதி முதல், பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்ட மூன்று நாட்களாக கிடைத்த வருவாய், 70 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளதாகவும், இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதாகவும் தெரிவித்தார்.
போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவிலான தனிநபர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை தேடிக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்பவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒரு வெளிநாட்டு வேலையின் நோக்கத்திற்காக கடவுச்சீட்டு அல்லது தேவையான நிதியை வழங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட அமைப்பு மற்றும் அதன் உரிமத்தின் சட்டபூர்வமான தன்மையை தீர்மானிக்க உறுதிப்படுத்தல்களைப் பெற வேண்டும் என கூறினார்.
மோசடி செய்பவர்களின் தகவல்களைப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தம்மை விடுதலை செய்யுமாறு மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் இன் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று (17) முற்பகல் தான் மெகசின் சிறைச்சாலைக்கு சென்று, கைதிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி மாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 500,000 டொலர்கள் (சுமார் 180 மில்லியன் ரூபா) காசோலையை நேற்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது.
ஆசிய கிரிக்கட் கிண்ணம், ஆசிய வலைப்பந்து கிண்ணம் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை கௌரவிக்கும் முகமாக கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் புற்று நோயாளர்கள் மருந்துப் பற்றாக்குறையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு தெரியப்படுத்தியது.
இதனைக் கருத்திற் கொண்ட ஜனாதிபதி, பிரச்சினையை துரிதமாக ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.
இதன்படி, மஹரகம வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சின் அறிக்கைகளின்படி, பணப் பற்றாக்குறையே மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் ஷானுக கருணாரத்ன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி பெரேராவுடன் ஆலோசனை நடத்தி, பண உதவியை ஒருங்கிணைத்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முயற்சிகளுக்கு உடனடியாக பதிலளித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக அதற்கு ஒத்துழைக்க முன்வந்தது. வாக்குறுதியளித்தபடி, அவர்கள் ஆசியக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்த நன்கொடையைக் கையளித்தனர்.
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட எம்.பிக்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக அறியமுடிகிறது.
அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்து கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற போதே, இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.
அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாகவும், இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட லசந்த அழகியவன்ன கட்சியின் பொருளாளராகவும் செயற்படுகின்றனர்.
அத்துடன், கட்சி உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் பிரதிச் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பதுடன், அவர்கள் தமது பதவிகளில் நீக்கப்படுவார்கள் என தெரியவருகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (17) ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படும் ஜனாதிபதி, திங்கட்கிழமை (19) லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவுள்ளார்.
இங்கிலாந்தின் மிக நீண்ட காலம் மன்னராக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் 96 வயதில் பால்மோரலில் இறந்தார்.
கடந்த வாரம் (08) தனது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கோடை காலத்தின் பெரும்பகுதியை கழித்த அவர் நிம்மதியாக இறந்தார்.
மறைந்த ராணியின் நினைவாக அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை துக்க தினமாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமாக) ஒரு ஐந்தாண்டு காலப்பகுதியில் உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தரர்.
கஞ்சா என்பது எமது வரலாற்றுடன் இணைந்த ஒன்று எனவும் அதனை நாம் நல்ல மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை ஏற்றுமதி செய்வதன் ஊடாக நிறைய அந்நிய செலாவணி சம்பாதிக்க முடியும், ஆனால் தெருக்களில் கஞ்சா புகைக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், வரலாற்றின் மன்னர்கள் கூட கஞ்சா பயன்படுத்தியதாகவும், ராவணன் காலத்திலிருந்தே கஞ்சா பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
நாடும் அரசாங்கமும் வங்குரோத்து நிலையிலுள்ள இவ்வேளையில் அரச அதிகாரம் இன்றி, ´மூச்சு´ த்திட்டத்தினையும், ´பிரபஞ்சம்´ தகவல் தொழிநுட்பத் திட்டத்தினையும் நிறைவேற்றுவது குடிமக்கள் என்ற வகையில் இது சமூகக் கடமையும் பொறுப்புமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (15) அம்பாறையில் தெரிவித்தார்.
74 ஆண்டுகால அரசியல் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் விரக்தி நியாயமானதுதான் என்றாலும், தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்காமல், மக்களை வாழவைக்கவும், எதிர்கால சந்ததியினரின் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கைளை முடிந்தவரை எடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் குடிமக்களை வாழ வைப்பது தன் மீது சுமத்தப்பட்ட சமூகக் கடமை எனவும், நாடு நெருக்கடியான சூழலை எதிர்நோக்கி வரும் இந்நேரத்தில் அமைச்சுகளைப் பெற்று, மக்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிப்பதை விடுத்து, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு வழங்க முடியுமான உயர்ந்த பட்ச உதவிகளை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் வைத்தியசாலைக்கட்டமைப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் இத்தருணத்தில், ´மூச்சு´ வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் உயிரைக் காக்க எதிர்க்கட்சியாக தானும் தனது பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் எப்போதும் முன் நிற்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த போது நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு கேட்ட சந்தர்ப்பத்தில் பதவிகளை எடுக்காமல் சுகாதாரம், கல்வித்துறைகளை கட்டியெழுப்ப உதவுவதாக தான் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறைக்கு மூச்சுத் திட்டமும், கல்வித் துறைக்கு பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டமும் தொடங்கப்பட்டு, இதனூடாக எதிர்க்கட்சி என்ற ரீதியிலும் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை சுகாதாரத் துறைக்கு பயன்படுத்துவதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக, குறைந்த செலவில் அதிக வேலைகளைச் செய்து தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதையே இந்நேரத்தில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் ´மூச்சு´ வேலைத்திட்டத்தின் 52 ஆவது கட்டமாக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு 35 இலட்சம் ரூபா (ரூ.3,500,000) பெறுமதியான Dialysis இயந்திரமொன்றை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் நேற்று(15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 51 கட்டங்களில், 1562 இலட்சம் (ரூ.56,216,900) மதிப்பிலான மருத்துவமனை உபகரணங்களை ´மூச்சு´திட்டத்தின் மூலம் வழங்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்துள்ளது.
சர்வதேச அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவரின் அண்மைய இலங்கை பயணத்தின் அடிப்படையில், ஐந்தாண்டு காலத்துக்கு இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க தூதுவர் அறிவித்துள்ளார்.
இந்த நிதியானது இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்காக, கடந்த வாரம் சமந்தா பவர் அறிவித்த புதிய மனிதாபிமான மற்றும் உர உதவியான 60 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.