web log free
June 13, 2024
kumar

kumar

எதிர்வரும் 5ஆம் திகதியுடன் மின்வெட்டு நிறுத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
 
மார்ச் மாத இறுதிக்குள் போக்குவரத்து நெருக்கடி நீங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
ரயில் மற்றும் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நீக்கி போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் அல்லது ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்குவதா என்பது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் இருந்த பாரிய மரமொன்றை வெட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 06 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஜீ.ஜீ. பிரதீப ஜெயசிங்க முன்னிலையில் நேற்று(28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 02 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணை மற்றும் 15,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்வதற்கு சந்தேகநபர்களுக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாட்சியாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் விடுக்கக்கூடாது என சந்தேகநபர்களுக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, நுவரெலியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

நவகிரகங்கள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நம் ஜாதகத்தில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் கிரக நிலைகளால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாத ராசி பலன்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்: கடமையில் கண்ணியம் தவறாத மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத வகையில் பல திருப்பங்கள் நிகழும். இதுதான் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே நீங்கள் கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும். தொழில் ரீதியான போட்டிகள் குறையும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த கடமைகள் நிறைவேறும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்: எவரையும் அவரிடத்தில் இருந்து யோசிக்கும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ரொம்பவே அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சில விஷயங்கள் ஒருவழியாக முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும் எனினும் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த நெருக்கம் குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலையிலிருந்து தொழில் சூடுபிடிக்கும் துவங்கும். வியாபாரிகள் நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். -

மிதுனம்: எதற்கும் கலங்காத மிதுன ராசியில் பிறந்த நீங்கள் இந்த மாதம் அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் காணும். உத்யோகத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு வேலை செய்வது நல்லது. வியாபார தந்திரங்களை கையாளுவது உத்தமம். சுபகாரியத் தடைகள் விலகி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம் ஏற்றம் காணும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் அகலும். ஞாயிறு தோறும் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

கடகம்: சொன்னதை செய்து காட்டும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டு என்பதால் கவனம் தேவை. சுப காரியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் நீடிக்காமல் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு சிக்கல் நீங்கும். சுயதொழில் புரிபவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகஸ்தர்கள் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ராகு கால துர்க்கை பூஜை தடைகளை அகற்றும்.

சிம்மம்: யாரையும் ஏமாற்ற நினைக்காத சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூல பலன் தரும் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை ஊதி பெரிதாக்காமல் ஆற போடுவது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். சுய தொழில் புரிபவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கருத்துக்களுக்கு ஒத்து போவது நல்லது. பொருளாதாரம் படிப்படியாக முன்னேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தேவையற்ற கடன்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தை கவனியுங்கள். சனிக்கிழமையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். -

கன்னி: கவலையை மறந்து சிரித்துக் கொண்டிருக்கும் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உற்சாகத்துடன் செயல்பட கூடிய மாதமாக அமைய இருக்கிறது. இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மரியாதை உயரும். எதை செய்வதாக இருந்தாலும் குலதெய்வ ஆசி பெறுவது நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் ஏற்றம் காணும் என்பதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகள் வந்து நீங்கும். சனிக்கிழமையில் தயிர் சாதம் தானம் செய்யுங்கள்.

துலாம்: நேர்மையின் சிகரமாக விளங்கும் துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் மனதை மேலும் வலிமைப்படுத்த கூடிய வகையிலான அமைப்பு என்பதால் கவலை கொள்ள தேவை இல்லை. சுயகட்டுப்பாடு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சந்தேகங்களை களைவீர்கள். புதிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் பன்மடங்கு பெருக இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு கடமையில் அக்கறை அதிகரிக்கும். மறைமுக போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். தேவையில்லாத பகையை வளர்த்துக் கொள்வது தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் ஏற்றம் அடையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாயில் முருகனுக்கு தீபம் ஏற்றுங்கள்.

விருச்சிகம்: கலைத் திறன் மிகுந்த விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத வகையில் உங்களுக்கு சில விசித்திரமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்க இருக்கிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். வியாபார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணியிட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

தனுசு: இனிமையான பேச்சாற்றல் கொண்டுள்ள தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எண்ணற்ற நற்பலன்கள் காணப் பெறுகின்றன. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வரும். பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுயதொழில் புரிபவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பு அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரம் ஏற்றம் அடையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் குறையும். கந்தனுக்கு கவசம் பாடுங்கள்.

மகரம்: எவரையும் எளிதில் எடைபோடும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. உங்கள் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை அமைதியான நிலையில் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். பிரிந்து சென்ற சில உறவுகள் மீண்டும் உங்களை வந்து சேர்வதற்கு யோகம் உண்டு. சுப காரியத்தில் இருந்து வந்த குறுக்கீடுகள் விலகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த நீண்டநாள் பாதிப்புகள் நீங்கும். திங்கட்கிழமையில் புளி சாதம் தானம் செய்யுங்கள்.

கும்பம்: பொறுப்புகளை வரமென ஏற்கும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் விடுதலைக்கான மாதமாக அமைய இருக்கிறது. உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமையை கையாளுவதன் மூலம் அதிர்ஷ்டம் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் பொழுது பேச்சில் இனிமை தேவை. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனக் கவலைகள் அகலும். ஆரோக்கியம் வலுப்பெறும். வியாழக்கிழமையில் குரு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

மீனம்: மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சாதுரியமாக செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை, சச்சரவுகள் குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் போட்ட பணம் இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாகும் வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வீண் பழிகள் வந்து சேரலாம். பொருளாதார ரீதியான விஷயங்களில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகளை திறம்பட சமாளிப்பீர்கள். குறை தீர்க்கும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

 மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

சிவராத்திரி தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும் ஆன்மிக பலம், ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்டுவரும் சவால்களை வெல்வதற்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாக பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிவனுக்கு உகந்த நன்னாள் எடுத்துரைக்கும் நம்பிக்கை, உலக வாழ் மக்கள் அனைவரும் புத்தெழுச்சி பெறுவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, உண்மைத்தன்மை, தியாக மனப்பான்மை மற்றும் மன்னிப்பு வழங்கல் போன்ற உண்மைக் குணங்களுடன் வாழ்வதற்கான வழியமைக்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மகா சிவராத்திரி தின ஆன்மிக செய்தியானது, ஒவ்வொருவரிடையேயான ஒற்றுமையை

மேலும் பலப்படுத்தும். ஆன்மிக சிந்தனை, உத்வேகம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் சிவனிரவு, அனைவரதும் நோக்கங்களை அடைய வழிவகுக்கும் நன்னாளாக அமைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு இனத்தவர்களும் மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலம், உங்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை தாயின் மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் சுபீட்சம் மிக்கதும் அபிலாஷைகள் அனைத்தும் கைகூடும் எதிர்காலம் அமைய இந்த சிவராத்திரி தினம் மிகவும் முக்கியமானது என்பது தமது நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

துன்பங்கள் என்ற இருள் நீங்கி இன்ப ஒளி எங்கும் பரவ வேண்டித்துதிக்கும் பக்தி மிகுந்த இந்த நாளில், அனைவருக்கும் சௌபாக்கியமே கிடைக்க இறையருளை மனதார வேண்டித்துதிப்போம் எனவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தூய்மையான, உறுதியான குறிக்கோளுடன் உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான இந்து பக்தர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கும் ஆணவம் மற்றும் தற்பெருமையை இல்லாதொழிக்க உறுதுணையாக அமையும் ஞான ஔி பரவக்கூடிய தினமாகவும் உலக வாழ் இந்து மக்களுக்கு அமைதியையும் கருணையையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர வழிவகை செய்யும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாகவும் இந்த தினம் மலர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக் குழுவினர் புறப்படவிருந்த பேருந்தில் இருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி டெஸ்ட் தொடருக்காக பயணிக்கவிருந்த பேருந்தில் இருந்து குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அணியினர் பேருந்தில் ஏறுவதற்கு முன் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
 
 
 

திஸ்ஸமகாராம பகுதியில் இருந்து கண்டி வழியாக மஸ்கெலியாவிற்கு சுற்றுலா சென்ற பயணிகள் இன்று தாம் பயணித்த வாகனத்திற்கு டீசல் இன்றி பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

கண்டியில் இருந்து மஸ்கெலியா செல்லும் வழியில் ஹட்டன் எரிபொருள் நிலையத்தில் 20 லீட்டர் டீசலேனும் தருமாறும் அது தங்களுக்கு வீடு செல்ல உதவும் என்றும் கேட்டுள்ளனர்.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசல் கையிருப்பில் இருப்பதால் வழங்க முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கூறியுள்ளார்.

இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

உடனே தலையிட்ட ஹட்டன் பொலிஸார் அமைதி ஏற்படுத்த முயன்றதுடன் தனியார் பஸ் சாரதி ஒருவர் 20 லீட்டர் டீசல் வழங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சென்றனர்.

 

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 5300-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷிய ராணுவத்தின் 191 பீரங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர 816 கவச வாகனங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும், ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், உக்ரைனில் உள்ள ரஷிய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியதுடன், ‘உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு எதிரான போரில் சண்டையிட விரும்பினால் ராணுவ அனுபவம் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

பண்டார நாயக்க குடும்பம் அரசியலுக்கு வரும்போதும் மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் அரசியலுக்கு வரும்; போதும் சந்தோசப்படும் சிலர் தொண்டமான் குடும்பம் அரசிலுக்கு வரும் போது மாத்திரம் குடும்ப அரசியல் வேண்டாம் என்கின்றனர்.

பெருந்தோட்டத்துறையில் எல்லோருக்கும் ஒரு ஆசையிருக்கிறது. இது சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும் இருந்தது ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் இருந்தது. ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு பின் நினைத்தார்கள் இதனுடன் எல்லாம் முடிந்து விட்டது ஆகவே பெருந்தோட்ட காணிகளை நாம் எப்படி வேண்டும் என்றாலும் கையாளலாம் என்று.

ஆனால் தொண்டமான் ஐயாவை விட ஒரு படி மேலே சென்று செயற்படும் அளவுக்குதான் ஜீவன் தொண்டமான் இன்று இருக்கிறார்.

எனவே, இதனை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் குடும்ப அரசியல் வேண்டாம் என தெரிவிப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் குறுக்கு வீதி சுமார் 295 லட்சம் ரூபா செலவில் மத்திய மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டில் காபட் இட்டு புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் பிரிவுகளுக்கு மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெரசிட்டமோல் மருந்து உற்பத்தியை துரிதப்படுத்துமாறு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பரவிவரும் நோய்கள் காரணமாக பெரசிட்டமோல் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பெரசிட்டமோல் மருந்தை மொத்தமாக கொள்வனவு செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில நாட்களில் 12 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் முறையான திட்டமொன்று மேற்கொள்ளாமையே மின்வெட்டுக்குக் காரணம் எனவும் இதனால் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் செல்லாததற்கு ஒரு காரணம் நாட்டின் அரசாங்க செலவீனத்தில் அறுபத்து நான்கு வீதம் ராஜபக்ச அமைச்சுக்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டமையே எனவும் அவர் கூறினார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்ப்பினால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான நிறுவனங்களுக்கு செல்லாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.