நாட்டை விட்டு வெளியேற தயாராகி வரும் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பிடிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் சரக்கு வீதிக்கு அருகில் வாகன சாரதிகளை பரிசோதிப்பதற்காக மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினரும் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இரத்மலானை விமான நிலையத்தின் நுழைவாயில்களிலும் மக்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரபுக்களின் ஆஸ்தான சோதிடரான ஞானக்கா எனப்படும் பெண்ணின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் உணவகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக தீ வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அங்கு ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று அரச தரப்பினர் பலரது வீடுகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்துடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
நிட்டம்புவ பகுதியில் மூவரும், வீரக்கெட்டிய பகுதியில் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது மொத்தமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையில் காயமடைந்த 218 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம பயணித்த வாகனம் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எம்பிக்கு சிறிய காயங்கள் மட்டுமே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இன்று மாலை 7 மணி முதல் நாளை (10) காலை 07 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாள் காலை 07 மணி வரை ஊரடங்கு உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில் மற்றும் பொது இடத்தில் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
வன்முறையை தூண்டி விட்ட மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் நடந்த வன்முறைக்கு முழுக் காரணம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பல பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படும் நிலையில் தற்போது காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இன்று காலை அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பொது மக்களை தாக்கியிருந்தனர்.
இதனையடுத்து ஆவேசமடைந்த அரசாங்க எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக நாட்டின் பல பகுதிகளில் அரசியல்வாதிகளின் இல்லங்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.
அத்துடன் தற்போது அலரி மாளிகைக்குள்ளும் இவர்கள் நுழைய முயற்சித்த நிலையில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே கடும் கோபத்திலிருக்கும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட உரை...
அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை. அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே. ஜனாதிபதிக்கு எவ்வித தடையின்றி முடிவெடுக்க முடியும்.
பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இப்போது என்ன செய்வது என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.
உங்களுடன் ஒரு முடிவுக்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் தாய்நாடு, இரண்டாவது தாய்நாடு, மூன்றாவது தாய்நாடு. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
உடன் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு பிரதமர் பதவி விலகுவதே சிறந்த தீர்வாக அமையும் என அமைச்சரவைப் பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமைச்சரவை எனது பதவியை இராஜினாமா செய்யுமாறும், புதிய அமைச்சரவையை நியமிக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமரின் பதவி விலகல் அமைச்சரவையை கலைக்கும் செயலாகவே கருதப்படுவதாகவும், பிரதமர் பதவி விலகுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இன்று தனது முடிவை அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.