போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் தான் விலக தீர்மானித்துள்ளதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பெரும்பான்மையான இலங்கை மக்களினதும் மதத் தலைவர்களினதும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தனது பங்களிப்பை செலுத்த உள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களின் போராட்டத்திற்கு பணிந்து பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும், பிரதமரும் பதவி விலக வேண்டும் எனவும், அதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அனைத்துக் கட்சிகளையும் அழைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை நீதிக்காக போராடும் மக்களே ஆக்கிரமித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என்பதே தமது ஒரே கோரிக்கை எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அந்த பதவியை வகிக்க ஆணை இல்லாததால் அதனை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்வதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாகும் என அவர் குறிப்பிடுகின்றார்
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
- பிரதமர் அலுவலகம்
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட வரும் போது, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு சூப்பர் கார் வரிசையின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
பல முக்கியஸ்தர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் செவி சாய்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு செல்லவிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் யோர்க் வீதி, சத்தம் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக பல்கலைக்கழக மாணவர் பேரவை தெரிவித்துள்ளது.
இன்றிற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கோரி ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.