பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களில் கடமையாற்றிய செயலாளர்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதியினால் நேற்று முதல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், கே.எம். நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஊரடங்கு சட்டம் நாளை காலை 07 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனித்து செயல்பட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடு தற்போது உள்ள நிலைமையில் அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் அவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் தரப்பிற்கு ஆதரவு வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சஜித் பிரேமதாஸவை பிரதமர் பதவியை ஏற்று ஆட்சி அமைக்குமாறு ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தி வருகின்றார்.
எனினும் சஜித் பிரேமதாச அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால் தனித்து செயல்பட ஹரின் முடிவு செய்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது உள்ளிட்ட அதிகபட்ச சட்டப்பூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுக்கடங்காத கும்பல் அல்லது வன்முறைக் குழுக்களால் வாகன சோதனைகள் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்திர தன்மையை உருவாக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பொறுப்பேற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க இன்னும் ஓரிரு தினங்களில் பிரதமராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்திரி அணியும் விமல், சம்பிக்க அணியும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் சஜித் அணியின் ஒரு பிரிவு ரணிலுடன் இணையும் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு கோரிக்கையை முன்வைத்த போதும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு பிரதமர் பதவியை பொறுப்பேற்க முடியாது என சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இதனால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்தை கைவிட்டு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தற்போது விசேட சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி இன்று இரவு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்று தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளை தீர்க்கும் முகமாக அவருடைய உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் விசேட அறிவிப்பில் தகவல் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இரவு 9 மணிக்கு ஜனாதிபதி விசேட உரை இடம்பெறவுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 135 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இலங்கையில் வன்முறை வெடித்துள்ளதால் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஹம்பந்தோட்டை சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை (மே 9) முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது
" அமைதியின்மை தொடங்கியவுடன், எரிபொருள் பவுசர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை நாங்கள் உடனடியாக நிறுத்தினோம். எந்தவொரு எரிபொருள் பவுசரையும் மக்கள் தாக்கினால், சாத்தியமான தீ பரவி குறிப்பிட்ட பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்" எனவும் தெரிவித்தது
எரிபொருள் பவுசர்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபை (SLTB), புகையிரத திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதுகாக்கப்பட்ட ஆயுதப்படைகளுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.