web log free
December 22, 2024
kumar

kumar

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இன்று(28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

அவரது வருகைக்காகவும் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி இதன்போது இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நாளை 29ம் திகதி ஏழரை மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குழு A முதல் L வரை - 7 மணி 30 நிமிடங்கள், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணி நேரம்.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி 30 நிமிடங்கள். குழு P முதல் W வரை - 7 மணி 15 நிமிடங்கள்,

காலை 8.30 முதல் மாலை 6.30 வரை ஐந்து மணி நேரம். மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணி 15 நிமிடங்கள்.   

எதிர்காலத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் அரசியல் மாற்றமொன்றை மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அரசியல் மாற்றமொன்றை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலேயே இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

நாட்டிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 130 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால்(INTERPOL) சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர்களது சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கடந்த வருடத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 95,000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது 1,630 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

வைத்தியசாலை அமைப்பிற்கு முன்னுரிமை வழங்கி தொடர்ச்சியாக வைத்தியசாலைகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மேற்கொண்ட கலந்துரையாடலில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார்.

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமன்புர பிரதேசத்தில் கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்
 
சீனக்குடா இரகசியப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து  (26) காலை குறித்த வீட்டை சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த கட்டுதுவக்கு ஒன்றும் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா போலீசார் தெரிவித்தனர்
 
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து 33 வயதுடைய பெண்ணொருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண் வழங்கிய வாக்குமூலத்திற்க்கு அமைய கைப்பற்றப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் தனது தந்தையுடையது எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
மேலும் குறித்த பெண்ணின் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும் வேலை நிமிர்த்தம் கொழும்புக்குச் சென்று இருந்ததாகவும் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்
 
இவ்வாறிருக்கையில் குறித்த பெண்ணின் தந்தையை சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீன போலீசார் தெரிவித்தனர்
 
மேலும் தம்வசம் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண்ணை  நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கொழும்பு – நீர்க்கொழும்பு பிரதான வீதியை ( கபுவத்தை பிரதேசத்தில்) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

இதன் காரணமாக நீர்க்கொழும்பு நோக்கிய வீதி முழுவதுமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

ஓமானின் கடனுதவியுடன் 3500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் நேற்றிரவு (26) இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு இறக்கும் பணி நேற்று (27) பிற்பகல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படும் கெரவலப்பிட்டிய லிட்ரோ கேஸ் நிலையம் இன்று வழமை போன்று இயங்குவதாகவும், 100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அரச வளங்கள் அழிக்கப்படுவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, நாடு தேசிய வளங்களை இழந்து சர்வதேச சமூகத்திடம் பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

களனி பல்கலைக்கழகத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், எண்ணெய்த் தாங்கிகள், கரையோரங்கள், தோட்டங்கள் உள்ளிட்ட அரச வளங்கள் வெளிநாடுகளுக்குச் சொந்தமாக இருந்தால் நாடு இருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பருப்பு, எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் பெற இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து தலா 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பங்களாதேஷிடம் இருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்ற அரசாங்கம், கடனைத் தீர்ப்பதற்கு மேலதிக அவகாசம் கோரியதுடன், சிமெந்து மற்றும் இரும்பு பெறுவதற்கு பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பால்மா மற்றும் கோதுமைமா இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியுள்ள அரசாங்கம், உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவதற்கு ரஷ்யாவிடமிருந்தும் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றதாக சுட்டிக்காட்டினார்.

நாட்டை மேம்படுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டத்துக்கு முன்னுதாரணமாக செயற்படுவதற்கு தேசிய மக்கள் தயாராகவுள்ளதாகவும் 

தமது சொந்த நலன்களுக்காக வளங்களையோ நிதியையோ சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.  

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் அனுமதிகள் இரத்து செய்யப்படும் அதேவேளை அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.

இன்றைய தினமும் (28) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 08 மனி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd