web log free
September 16, 2024
kumar

kumar

மரபணு சோதனை அறிக்கைகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு போதியளவு இரசாயனங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

மரபணு பரிசோதனைகளை நடாத்துவதற்காக மாதாந்தம் சுமார் 200 அறிக்கைகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயன வகைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படுபவை எனவும் இவற்றை பெற்றுக்கொள்ள அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இரசாயன வகைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கால தாமத நிலையினால் வழக்கு விசாரணை அறிக்கைகளை வெளியிட முடியாதுள்ளது என அரசாங்க இரசாயன பகுப்பாய்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

''இந்திய, இலங்கை பிரதமர்கள் நட்பு ரீதியாக சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என, இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழாவை காண சொக்கநாதபுரத்தில் உள்ள அவரது பண்ணைக்கு செந்தில் தொண்டமான் சென்றிருந்தார்.

அவரை நாகபட்டினம் அக்கரைபட்டி சண்முகம், ராமேஸ்வரம் தேவதாஸ் தலைமையில் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர்.

அக்கரைபட்டி மீனவர்களின் 3 விசைப்படகை இலங்கை அரசு கைப்பற்றியது. இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரையும், 56 விசைப்படகுகளையும் மீட்பதோடு கைதான ராமேஸ்வரம் வேர்கோடு மீனவர் ராஜகுரு 48, பாஸ்கரனையும் 37, விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் செந்தில் தொண்டமான் கூறியதாவது:

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்தியா, இலங்கை பிரதமர்கள் மற்றும் இலங்கை யாழ்ப்பாண மீனவ அமைப்பும், தமிழக மீனவ அமைப்பும் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காணலாம். மீனவர் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்கு மத்திய, மாநில அரசு முயற்சித்து வருகிறது , என்றார்.

இன்றைய நாள் எப்படி

வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022
மாசி 5
மாசி மகம்.
நல்ல நேரம் பகல்: 10:30AM - 11:30AM
மாலை: 5:00PM - 6:00PM
இராகுகாலம் பகல்: 1:30PM - 3:00PM
இரவு: 10:30PM - 12:00AM
குளிகை பகல் 9:00AM 10:30AM
இரவு 1:30AM 3:00AM
எமகண்டம் காலை: 6:00AM - 7:30AM
இரவு: 10:30PM - 12:00AM
திதி பிரதமை, இரவு 11:08PM
நட்சத்திரம் மகம், மாலை 4:37PM
சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்.
பரிகாரம் - தைலம்
சூலம் - தெற்கு


ராசி பலன் வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022

மேஷம்
குழந்தைகளால் தொல்லை உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களைக் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்குத் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது.

ரிஷபம்
வழக்குகளை இன்று தள்ளிப் போடுவது நல்லது. மதிப்பு மிக்க பொருட்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். அன்னையின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை.

மிதுனம்
தொழில் தொடர்பான தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். உடன்பிறப்புக்களின் உதவி மனத் தெம்பைத் தரும்.

கன்னி
அதிக குடும்பச் செலவுகள் காரணமாகக் கையிருப்புக் குறையும். உங்கள் உண்மையான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். நண்பர்களிடம் பகமை பாராட்டாது இருப்பது நல்லது.

மகரம்
வீட்டில் ஒற்றுமை இன்மையால் ஒருவிதக் குழப்பம் நிலவும். இஷ்டத்துக்கு மாறாகவே எல்லாம் நடக்கும். சிலருக்குக் கோர்ட் படி ஏறவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

கடகம்
உறவுகளிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் வீட்டில் நிம்மதி நிலவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும். தொழிலில் அதிக முதலீடு செய்வதைத் தவிருங்கள்.

சிம்மம்
பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வர். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்.

துலாம்
பலவழிகளிலும் இலாபம் பெருகும். சுகம், சந்தோஷம், பயணத்தில் உல்லாசம் ஆகியவை ஏற்படும். தனவரவு கூடும். வியாபாரிகளுக்குத் தொழில் விருத்தி ஏற்படும்.

மீனம்
பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பர். பிரிந்திருந்த உறவுகள் பேரன்பால் ஒன்று சேரும். எல்லாவகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு
புனித யாத்திரைகளை மன மகிழ்ச்சியுடன் சென்று வருவீர்கள். .பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்
தனலாபம் பெருகும். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவர பரிசுத் திட்டங்களை அறிவிப்பர்.

கும்பம்
தம்பதிகளின் ஒற்றுமையால், குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பதவி உயர்வால் வாகனயோகம் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்.

 

எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இயல்பாகவே ஒமிக்ரோன் பிறழ்விற்கான பல அறிகுறிகள் தென்படாது என்பதை சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர், நோய் அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது PCR பரிசோதனைகளை மேற்கொள்ளாத குறிப்பிட்ட சதவீத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருப்பதால் மேலும் தொற்று பரவலாம் எனவும் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது அமைச்சின் உடமைகளை சுத்தம் செய்து வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது அமைச்சின் தனிப்பட்ட அலுவலர்களையும் அவர் நீக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் பிரபல இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவே இவ்வாறு வீடு செல்ல தயாராகி வருவதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் பதவியில் பணியாற்றுமாறு அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாலும், சில அமைச்சு அதிகாரிகளின் பணிகளில் அவருக்கு ஆதரவு கிடைக்காததாலும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லான்சா நெடுஞ்சாலைகள் துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதன் அமைச்சரவை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளார். இருவரும் கத்தோலிக்கர்கள்.

எவ்வாறாயினும், ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க தவறியமை குறித்து இராஜாங்க அமைச்சர் லான்சா பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

குறிப்பாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் நுழைவாயிலின் திறப்பு விழாவை இராஜாங்க அமைச்சர் லான்சா புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதை ஒரு இராஜாங்க அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது ஜனக வக்கும்புர இராஜாங்க அமைச்சரே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது கிடைத்த 69 இலட்சம் வாக்குகளையும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் தலைவிதியையும் அவர் கணித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் மொட்டு அணிக்கு 79 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் பிரகாரம், இரண்டரை வருடங்களுக்குள் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் அல்லது ஒரு வருட கால நீடிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதை இராஜாங்க அமைச்சரின் கருத்து உறுதிப்படுத்துகிறது.

 

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்படத்தையும் (ஏகே 61) வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் அஜித்தின் புதிய லுக்கை போனிக்கபூர் வெளியிட்டுள்ளார்.

காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வித்தியாசமான லுக்குடன் அஜித் இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது.

அந்த கெட்டப்பில் தான் அஜித் புதிய படத்தில் தோன்ற உள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது டார்க் ஷேட் புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக போட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும் வத்திக்கானும் ஆராய்ந்து வருவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் ஆனால் தற்போதைக்கு அது குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக கத்தோலிக்க திருச்சபை சர்வதேச உதவியை நாடுவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக செஹான் சானக கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்தினால் அது கிட்டத்தட்ட ஒரு கடத்தல் என தெரிவித்துள்ளார்.

கைது செய்வதற்கு என நாகரீகமான வழிமுறைகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (15) முதல் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளாந்தம் மின்வெட்டு ஏற்படலாம் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை சேமிப்பதற்காகவும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த தீர்மானத்திற்கான மின்வெட்டு அட்டவணை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி பிற்பகல் இலங்கை மின்சார சபை மற்றும் லெகோ நிறுவனங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவுகளுக்கு அமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இவ்வாறான மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மின்வெட்டுக்கு அனுமதி கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மூன்று மாத காலத்திற்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் சல்காதுப்பிட்டியவில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அரிசி விநியோகித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப் பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் 40 அடி அரிசிக் கொள்கலன்கள் நான்கு கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்ததாக அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.