web log free
December 21, 2024
kumar

kumar

இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து அவர்கள் விசைப்படகைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இது குறித்துப் பல முறை அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை அரசுடைமையாக்கப்பட்டு அவற்றை இலங்கை அரசு ஏலம் விட்டு வருகிறது.

நேற்று முன் தினம் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வ்ந்ததாக கூறி தங்கச்சி மடத்தை சேர்ந்த ரமேஷ் என்பவின் விசைப்படகைப் பறிமுதல் செய்தனர்

அந்த படகில் இருந்த ரமேஷ் (40),ரோடிக்(18), அஜித்(19), கொலம்பஸ்(52), இமான்(22), லின்சன்(23), பவுத்தி(19), இஸ்ரேல் (20) ஆகிய 8 மீனவர்களைக் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 26 நாட்களில் தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 80 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமை பிரதிநிதிகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கை தொடர்பிலான விசாரணைகளை இனியும் தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற, அத்துமீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக ஐ.நா-வின் விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மக்கள் பேரணியையும் கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட மேலும் வல விடயங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் ஏசியன் மிரருக்கு தெரிவித்தனர்.

பல நாட்களுக்குப் பின்னர் இன்று (27) பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவை விநியோகிக்க முடியாதுள்ளதாக எரிவாயு நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவைக்கு ஏற்ற எரிவாயுவை நிறுவனம் வழங்குவதில்லை என்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

ரஷிய ராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

இதேபோல் ரஷிய பாதுகாப்புத்துறை கூறியிருக்கும் தகவலில், 223 பீரங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்கள், 28 போர் விமானங்கள், 39 ராக்கெட் லாஞ்சர்கள், 86 சிறிய ரக பீரங்கி மற்றும் மோர்ட்டார்கள், 143 சிறப்பு ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாக கூறி உள்ளது.

 

நாளை தினம் (28) மின் விநியோகம் எவ்வாறு துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

அதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய மண்டலங்களில் நாளை ஐந்து மணி நேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு நான்கு மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நுவரெலியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தம்பதியர் இன்று (27) காலை நுவரெலியா களுகேலே பகுதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஏசியன் மிரருக்கு தெரிவித்தார்.

குருநாகல் கொகரெல்ல நெகன்ன பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.ஏ.கே ஹேரத் (59) மற்றும் எம்.ஏ.எம்.என் மொலகொட (58) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் கொகரெல்ல பிரதேசத்தில் இருந்து நுவரெலியா களுகேலே பிரதேசத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு குடும்ப உறுப்பினர்களுடன் வந்தடைந்த தம்பதியினர் உறங்கச் சென்றுள்ளனர்.

தம்பதியினர் இன்று (27) காலை எழுந்திருக்கவில்லை என குடும்பத்தினர் தாம் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பார்பிக்யூ அடுப்பிலிருந்து வெளியேறிய விஷ புகை காரணமாக இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி என தெரியவந்துள்ளது.

நுவரெலியா நீதவானின் மரண விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது மீனவர்களை, எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 23 நாட்களில் 72 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 21பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் தமிழக மீனவர்களிடமிருந்து பல காலக்கட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும், மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைக்கப்படாமல், நாட்டுடைமையாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இப்படி தமிழக மீனவர்களுக்கு இலங்கை, தொடர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. 

பெரும்பாலான கைது நடவடிக்கைகள் இந்திய கடல் எல்லையில் நடந்துள்ளன. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் தான் கைது, படகு பறிமுதல் நடக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இரணைதீவுஅருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகை கைப்பற்றிய இலங்கை கடற்படை அவர்களை தற்போது அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையே விடுவிக்காத நிலையில், தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்து அட்டூழியத்தில் ஈட்டுள்ளனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால் எதிர்காலத்தில் நாடு முழுவதும் போர்மலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மலர்சாலை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது போதுமான அளவு போர்மலின் மட்டுமே இருப்பதாகவும், இதனால் மலர்சாலை தொழில் எதிர்காலத்தில் சிக்கலுக்கு உள்ளாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போர்மலின் இறக்குமதி செய்யப்படுகிறது. எரிபொருட்களுக்கு ​டொலர் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் போர்மலின் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.

உடல்களை எம்பாமிங் செய்வதற்கு மாற்று வழி இல்லை என்பதால் ஒரு மாதத்திற்குள் போர்மலின் இறக்குமதி செய்ய முடியாவிட்டால், உடலை எம்பாமிங் செய்யாமல் 24 மணி நேரத்தில் இறுதிச் சடங்கை முடிப்பதைத் தவிர உடலைப் பாதுகாக்க வழியில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார்.

இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வாழ்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் எல்.ஐ.ஓ.சியின் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவிவரும் நிலையில் பாலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்கள் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 3 நாட்கள் ஆகிறது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்து கதறி அழுதது. இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா கூட அந்நாட்டுக்கு பெரிதாக உதவவில்லை.

இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுக் கொண்டே செல்லும் நிலைதான் தற்போது வரையில் உள்ளது.

ஒன்றுபட்டிருந்த சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து சென்ற பிறகு அந்நாட்டுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்து வந்த மனக்கசப்புகளே தற்போது மோதலாக மாறி இருக்கின்றன.

இதனால் உக்ரைனில் போர் உக்கிரமாக உள்ளது. ரஷிய படைகளின் முன்னால் உக்ரைன் படையால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் உக்ரைனை ரஷியா முழுமையாக கைப்பற்றும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த போருக்கு முக்கிய காரணமாக கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கருங்கடல் துறைமுகமும் அமைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வரலாற்று பின்னணியில் ரஷியாவின் பாதுகாப்பும் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ரஷியா உக்ரைன் மீது மிகவும் உக்கிரமாக போர் தொடுத்துள்ளது.

பறந்து விரிந்த கடல் பரப்பில் செவஸ்டபுல் துறைமுகத்துக்கு ரஷியா ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறது? அதன் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.

ரஷியாவின் நிலப்பரப்பு என்பது மிகவும் பெரியதாகும். 17 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அந்நாட்டின் நிலப்பரப்பு பறந்து விரிந்து கிடக்கிறது. 36 ஆயிரம் கிலோ மீட்டர் கடலோரத்தையும் அந்த நாடு பெற்றிருக்கிறது.

இப்படி ரஷிய கடல் பரப்பு மிக நீளமாக இருந்த போதிலும் அதனை ரஷியாவால் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது. ரஷியாவின் கடல் பரப்பு நீளம் வடதுருவம் வரை பரவி இருப்பதால் ஆண்டு முழுவதும் கடல் உரைந்தே காணப்படுகிறது.

இதனால் இந்த கடல் பரப்புகள் ரஷியாவின் வணிக பயன்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன் அற்றே உள்ளது.

கடல் வணிகத்துக்கும் தெற்கு பகுதிகளுக்கும் பண்டமாற்று தொடர்புகளுக்கும் உக்ரைனில் உள்ள செபஸ்டபுல் துறைமுகமே முழுமையாக கைகொடுத்து வருகிறது.

உருக்குலைந்த ரஷியாவின் வீழ்ச்சிக்கு பிறகு அருகில் உள்ள உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ரஷியாவுடன் நல்ல தொடர்பில் உள்ளன. ஆனால் ஐரோப்பிய பகுதிகளுக்கு அருகில் உள்ள ருமேனியா, லித்து வேனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய மேலைநாடுகள் மற்றும் நேட்டோவுடன் தொடர்பில் உள்ளன.

இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதி ரஷியாவையும், மேற்கு பகுதி ஐரோப்பா பகுதிகளையும் சார்ந்து செயல்பட்டு வருகிறது.

உக்ரைன் நாடு புவியியல் ரீதியாக தெற்கு பகுதியில் உள்ள கிரீமியாவில் செபஸ்டபுல் துறைமுகத்தை பெற்றுள்ளது. ரஷியா-உக்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த துறைமுகத்தை ரஷியா குத்தகைக்கு எடுத்துள்ளது.

அதே நேரத்தில் உக்ரைனின் இறையாண்மையை எப்போதும் பாதுகாப்போம் என்று ரஷியா உறுதி அளித்து இருந்தது.

இந்த நிலையில்தான் உக்ரைன், ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக காய்களை நகர்த்தியது. அது போன்று நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணையக்கூடாது என்று ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் ரஷியாவின் பேச்சை கேட்காமல் உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் இணைவதில் உறுதியாக இருந்தது. அதற்கான வழிமுறைகளையும் அது கையாண்டது.

இப்படி நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நாடு சேர்ந்து விட்டதால் நேட்டோ படைகள் உக்ரைன் துறைமுகம் பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் ஏற்பட்டது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கடல்வழி வணிகத்துக்கு பெரும் துணையாக இருக்கும் செபஸ்டபுல் துறைமுகத்தை இழக்க நேரிடும் என்கிற கவலை ரஷியாவுக்கு ஏற்பட்டது.

அதே நேரத்தில் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ரஷியா கருதியது. இதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது.

ரஷியாவுடன் உக்ரைன் மோதல் போக்கை கடைபிடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், உக்ரைனின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும் ரஷிய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்போதுதான் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கிரீமியாவை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து செபஸ்டபுல் துறைமுகத்தையும் தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தது.

அப்போதே புதின் உக்ரைனை எச்சரிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அளவுக்கு மீறி ஒரு விசயத்தில் கால்பதித்தால் அது உங்களையே திருப்பி தாக்கும் என்று அவர் எச்சரித்து இருந்தார். அதுதான் இப்போது உக்ரைன் விவகாரத்தில் நடந்துள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட உக்ரைன் ஆதரவு நாட்டினர் தங்கள் எல்லை பகுதிகளுக்குள் வராமல் ரஷியா தங்களை உறுதியாக பாதுகாத்துக் கொள்ளவே போரை நடத்தி வருவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd