உலக சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் Litro உள்நாட்டு LP எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என Litro Gas இன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், மக்கள் நட்பு நிறுவனம் என்ற வகையில், உள்நாட்டு எரிவாயு எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் விலை குறைவாக இருந்தபோது வாங்கப்பட்ட கேஸ் வரவிருக்கிறது, எனவே தற்போது விலை திருத்தம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (01) முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் ஆட்பதிவு , சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் வழங்குனரின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பணியிடத்திலிருந்து விலகி இருப்பவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் அபராதம் அல்லது பிற சட்டத் தடைகளுக்கு உட்படாமல் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது சம்பந்தப்பட்ட விசா ஆவணங்களை சட்டப்பூர்வமாக செயல்படுத்தவோ வாய்ப்புள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பொது மன்னிப்புக் காலத்தின் போது தமது விசாக்களை சட்டப்பூர்வமாக ஏற்பாடு செய்ய அல்லது இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 332 ரூபாவாகும். 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
பொலிஸாரின் ஊடாக கோரப்பட்டால், தேர்தலின் போது ஏற்படும் தேவைக்கு ஏற்ப இராணுவத்தினர் உதவிக்காக அனுப்பப்படுவார்கள் என இராணுவ ஊடகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யவில்லை என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்குவதற்கு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்ததாக இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதற்கு பதிலாக, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களது மாதாந்த சம்பளத்துடன் சத்துணவு தொகையை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இராணுவத்திடம் இருந்து சலுகை விலையில் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்
இராணுவ வீரர்களின் நிதி பலம் மேலும் ஸ்திரமாக இருப்பது மட்டுமன்றி, நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன மிகவும் தீவிரமானதாக இருக்கும் என பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முடிவு சுமார் ஐம்பத்தைந்தாயிரம் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் அனைவருக்கும் வெற்றி என்ற தொனியில் இன்று பிற்பகல் கண்டியில் வெளியிடப்பட்டது.
கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்று, மல்வத்து அஸ்கிரிய பெரியவர்களிடம் கொள்கைப் பிரகடனத்தை கையளித்தார்.
அனைவருக்கும் வெற்றி என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை அறிக்கை நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியதாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை அறிக்கை ஐந்து முக்கிய விடயங்களின் கீழ் 46 பகுதிகளை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் 15 பேர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் 38 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வேட்பாளர்கள் பலர் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர் ஒருவருக்கு தேர்தல் ஆணைக் குழுவால் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளோரில் 15 பேர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளெனத் தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள சுமார் 30 பேர் இதுவரை பிரசார நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. சிலர் கட்சி அலுவலகங்களைக்கூட இன்னும் திறக்கவில்லை.
அத்தோடு, வேறொரு வேட்பாளருக்காக பிரசாரங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தமது கொள்கை விளக்கவுரையை வெளியிடுவதற்கு வழங்கும் இலவச நேரத்தை அவர்களுக்கு வழங்காமல் இருப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொட்டுக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளருமான ஜகத்குமார ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம் மீது சேறு பூச முனைகிறார்கள். அத்துடன் ஜே.வி.பி.யினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் பொது வேட்பாளருக்கு உரிய ஆதரவுதளம் அதிகரித்து வருகின்றது. எமது மக்கள் எமது இலட்சிய பாதையிலே பொது வேட்பாளருக்கு கட்டாயம் வாக்களிப்பார்கள் என கருதுகிறேன்.
மேலும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக எதிராக கூறும் கருத்துக்கள் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். எங்களுடைய கட்சி ஒரு ஜனநாயக ரீதியான கட்சியாகும். ஆகவே அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். எமது கட்சியினை பொறுத்தவரை ஒரு முடிவினை எடுத்துள்ளது.
மேலும் பொதுக்கட்டமைப்பில் பேச்சுவார்த்தைக்கு செல்வது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட நேரம் வரையே கலந்துரையாடல் இடம்பெற்று இருந்தது.
குறிப்பாக தனித்தனியாக செல்வதை விடுத்து சேர்ந்து செல்வது. அத்துடன் அவர்களுடைய கடிதத்தில் என்னென்ன வலியுறுத்தப்பட்டுள்ளதோ அதன் பிரகாரம் ஒரு முடிவினை எடுத்து செல்வது என்பது தொடர்பாகவும் நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்துள்ளோம்.
அனுரகுமாராவின் தேர்தல் விஞ்ஞானத்திலே பாதுகாப்பு படை தொடர்பாகவும் குறிப்பாக மனித உரிமை மீறல்களை செய்தவர்களை காப்பாற்றுவது தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள்தான் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள். என்னைப் பொருத்தவரை எங்கள் மக்கள் அனுரவை பற்றி சிந்திக்கவில்லை என்பதுதான் உண்மை.
அனுர தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது கருத்துக்களை தெரிவித்தாலும் கூட எங்களது அடித்தளத்தை உடைத்து எறிந்தவர்கள் ஜேவிபியினரே. இணைந்த வடக்கு கிழக்கிற்காக எங்களுடைய போராளிகள், இயக்கங்கள் எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்கள். அதனை உடைத்த பெருமை ஜேவிபினருக்கு இருக்கின்றது.
அவர்கள் என்னதான் தேனும், பாலும் ஓடுமென்று கூறினாலும் கூட அவர்களுக்கு தமிழர் பகுதிகளில் வாக்கு போடுவது என்பது கடினமாகத்தான் இருக்கும்.
தமிழ் மக்களும் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளும் ஒர் அணியில் திரள வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருக்கின்றது.
பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் சமூகம் ஒரு குடையின் கீழ் அணி திரண்டு இருக்கின்றது. இதனை செய்தியாக்க வேண்டும் என்பதுதான் நமது சங்கு சின்னத்தின் நோக்கமாக இருக்கின்றது.
எமது மனங்களிலே நீறு பூத்த நெருப்பாக எமது விடுதலை வேட்கை இருக்கின்றது. இந்நிலையில் நமது சங்கு சின்னத்தின் ஊடாக தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கின்றோம் என்ற செய்தியை சொல்ல வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு முடிவெடுத்தால் அதிலிருந்து பின்வாங்காது. ஜனாதிபதியை நாங்கள் மூவரும் சந்தித்தது தொடர்பாக நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் சூழல் ஏற்படுமா என்று பலபேர் எம் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தினர் மக்களுடைய சிந்தனையின் அடிப்படையில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். எந்த நிலையிலும் தென் இலங்கை வேட்பாளர்களுக்கு விரல் நீட்டுகின்ற நிலை ஏற்படாது என்று தெரிவித்தார்.