சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த பணிகள் முடியும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் சபை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடனான தனித்தனி சந்திப்புகளில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் இருக்கும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பொஹொட்டுவ தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியமை தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அவர்கள் அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
அங்கு பசில் ராஜபக்ஷ பதவியேற்காமல் கட்சியின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த சிரேஷ்ட எம்.பி.க்கள் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சுயாதீனமாக ஆதரவு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞானசார தேரர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனையின் பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், இந்த உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தை விட இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் பாதுகாப்பு அற்ற பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மார்ச் மாத நாணயக் கொள்கை விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) முதல் இரண்டு காலாண்டுகளில் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1.6 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு எதிர்வரும் காலாண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2022ல் பதிவான 7.3 சதவீத எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2023 இன் இரண்டாவது ஆறு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட சாதகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கடந்த ஆண்டு (2023) ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக 2.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
இஸ்லாமியத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நீதி நடவடிக்கையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 10 பாதாள உலக குற்றவாளிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த 20 குழுக்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட 446 பாதாள உலக குற்றவாளிகளில் 80 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 80 பாதாள உலகக் குற்றவாளிகளில் 53 சந்தேகநபர்கள் அழைப்பாணையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அலவ்வ - வலகும்புர மாஓயாவில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
14 வயதான நான்கு சிறுவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
நண்பர்கள் ஐவர் மாஓயாவில் குளிப்பதற்காக சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அலவ்வ மற்றும் பொல்கஹவெல பகுதிகளை சேர்ந்த நால்வரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் சென்னையில் நடைபெற்ற 16வது எடிசன் விருது விழாவில், "ஐயோ சாமி" என்ற இலங்கைத் தமிழ்ப் பாடலைப் பாடிய விண்டி குணதிலக, 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடலுக்கான விருதை வென்றுள்ளார்.
விருதினை பெற்றுக் கொண்ட வின்டி குணதிலக்க நேற்று இரவு ஸ்ரீலங்கன் எயார் விமானமான UL 218 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விருது வழங்கும் விழா சர்வதேச திரைப்படங்கள் மற்றும் பாடல்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மார்ச் 24 அன்று இந்தியாவில் சென்னையில் நடைபெற்றது.
இப்பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இப்பாடலுக்கு இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் இவ்விருதுகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.