web log free
May 06, 2025
kumar

kumar

கனேடிய பிரஜைகளுக்கான விசாக்களை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.

விசா வழங்கும் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியதால், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு எவரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிணக்குகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செயற்பாட்டுக் காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக விசா சேவைகளை வழங்கும் BLS-இன் இந்தியாவிற்கான பிரிவு தெரிவித்துள்ளது.

சீக்கிய பிரிவினைவாத தலைவரின் கொலையுடன் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக கனடா அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கனடா செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு நேற்று பயண எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கனடாவிலிருந்து வருவோருக்கு விசா வழங்குவதை இந்திய தூதரகம் இன்று நிறுத்தியிருக்கிறது.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹா்தீப் சிங் நிஜாா் (45) கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசின் தலையீடு உள்ளதாக கனேடிய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கனடா அரசு உத்தரவிட்டது.

இந்திய அரசு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயா் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.

இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளரினால் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று(21) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை(20) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான் கைதான முன்னாள் ஆணையாளர் மற்றும் முன்னாள் கணக்காளரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.அத்துடன் ஏற்கனவே குறித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 மற்றும் 4 ஆம் சந்தேக நபர்களான மாநகர சபை சிற்றூழியர்கள் பல்வேறு நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி அபூபக்கர் றகீப்பிற்கு வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை மாநகர சபையின் நிதி மோசடி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு அண்மைக்காலமாக நால்வர் கைதாகி இருந்தனர்.இதில் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.ஏனைய மூன்று சந்தேக நபர்களும் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து முன்னாள் கணக்காளர் மருதமுனை -5 பகுதியை சேர்ந்த ஏ.எச்.முகமது தஸ்தீக்(வயது-47) கைதானார்.இவ்வாறு திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் கைதான முன்னாள் கணக்காளர் உள்ளிட்ட கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களின் சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளின்போது மேலும் மோசடி முறைகேடுகள் எவையும் மேலும் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த காலங்களில் இவ்வரி மோசடி தொடர்பில் விசாரணைகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த நிதிகையாடல் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் கல்முனை பொலிஸ் நிலையம் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

3 மாத சேவை நீடிப்பில் கடமையாற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் செப்டம்பர் 26ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.

ஆனால் ஜனாதிபதி அவருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய காவல்துறை அதிகாரி நியமனம் தொடர்பான நிச்சயமற்ற நிலையே இதற்குக் காரணம்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரிடையே போட்டி நிலவும் நிலை உருவாகியுள்ளதுடன் இதன் ஊடாக தனித்தனி பொலிஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் தல்துவ பகுதியைச் சேர்ந்த 27, 36 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்தில் அவர்களுடன் இணைந்து கொள்ளவிருந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எவரையும் தன்னுடன் இணைய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சஜபா மொனராகலை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.தர்மசேன, வடிவேல் சுரேஸ் உட்பட பலர் கலந்து கொள்ளவிருந்தனர்.

கட்சியின் அறிவிப்பை மீறி வடிவேல் சுரேஷ் மட்டும் இந்த பணியில் இணைந்தார் என்பதும் சிறப்பு.

மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, பிரேமநாத் சி.தொலவத்த, அம்பாறை மாவட்ட உறுப்பினர் மொஹமட் முஷாரப் ஆகியோரும் மேலதிக பொஹொட்டுவவை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வு மற்றும் ஏனைய விசேட கூட்டங்களில் பங்குபற்றுவதற்காக வெளிநாடு சென்ற ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் நாளை நாடு திரும்ப உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயம் செய்யப்படாத காணிகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வரி மூலம் ஈட்டப்படும் பணத்தை சமுர்த்தி குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

ஜப்பான் கூட பயிரிடப்படாத நிலத்திலிருந்து வரி வசூலிப்பதாக அனுபா பாஸ்குவல் குறிப்பிட்டார்.

பல்வேறு காரணங்களால் அரச மற்றும் தனியார் காணிகளும் விவசாயம் செய்யாமல் விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்யப்படாத காணிகள் காணப்படுவதாகவும் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் 100,000 கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோகன்னபுர சேமிப்பு ஒன்றியம் இந்த கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வணக்கத்துக்குரிய பொல்ஹெங்கொட உபரதன நாயக்க தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவும் இந்த நிகழ்விற்காக வருகை தந்துள்ளனர்.

இந்த வருட இறுதியில் இலங்கை மின்சார சபை மீண்டும் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடம் இரண்டு தடவை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருட இறுதியில் 5000 கோடி ரூபா பாரிய இழப்பை ஈடுகட்ட எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்று தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதால் மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டாலும் எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணத்தை நிச்சயமாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து நேற்றிரவு(17) 10.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்திலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd