பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், அரசியல் என்பது நில உரித்துடையோருக்கும், படித்த மற்றும் செல்வந்த உயர்குடியினருக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், 1956ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாதாரண பொதுமக்களுக்கும் அரசியலில் வாய்ப்பு கிடைத்ததால் பாரிய சமூக மாற்றம் ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அரசியல் என்பது செல்வந்தர்கள், வர்த்தகர்கள், முறையற்ற வகையில் பணம் சம்பாதிப்பவர்கள் மற்றும் செல்வந்த அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.
இதன் காரணமாக, நேர்மையான சமூக சேவகர்கள் அரசியல் துறைக்கு வருவது தடைப்படும் என முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தாமும் மற்றும் ஒரு சிலரும் மாத்திரமே இந்த ஓய்வூதியத்தை சமூக மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குப் பயன்படுத்துவதாகவும், ஆனால் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியத்தை நம்பியே வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதால், அந்த சந்தர்ப்பத்தில் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கரு ஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் மதில் ஒன்று இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவரும் உயிரிழந்தனர்.
வேலைத்தளம் ஒன்றில் மதில் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களே இவ்வாறு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர்.
மதில் சுவருக்கு அடியில் சிக்கியிருந்த மூவரும் நீண்ட நேர மீட்பு பணிகளின் பின்னர் சிகிச்சைக்காக கொன்னகஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் குறித்த மூவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, இந்த சுழற்சி தற்போது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதனால் இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
மேற்படி மாகாணங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமானதுமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த அவர், நெல் அறுவடைச் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் நெல் உலர விடும் விவசாயிகள், எதிர்வரும் மழை நாட்களைகருத்தில் கொண்டு தகுந்த திட்டமிடலுடன் செயல்படுவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நிலவும் குளிரான நிலைக்கு காரணமான குறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27ஆம் திகதிவரை சற்று உயர்வடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அமெரிக்க டொலர் 200 மில்லியன் கடன் உதவியின் கீழ் 4,074 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் அடங்கிய 06 துணைத் திட்டங்களில் ஒன்றாக, ராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் இந்த துணைத் திட்டத்திற்கு, 2020-03-04 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
அந்த திட்டத்தின் ஒப்பந்தக்காரரின் பலவீனமான செயல்திறன் காரணமாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதுடன், திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்காக பொருத்தமான ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் தேசிய போட்டித் டெண்டர் முறையின் கீழ் டெண்டர்கள் அழைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பெறப்பட்ட 06 டெண்டர்களை உயர் மட்ட நிலையான கொள்முதல் குழு (Procurement Committee) பரிசீலித்து வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், ராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
நிட்டம்புவ, பின்னகொல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 61 கி.கி இற்கும் அதிக எடையுடைய ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோணஹேன விசேட அதிரடிப்படை (STF) முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர் தனது முச்சக்கர வண்டியில் 61 கி.கி 838 கிராம் எடையுடைய போதைப்பொருளைக் கடத்திச் சென்ற போதே விசேட அதிரடிப்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் ரூ. 90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டமுச்சக்கர வண்டியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் மூலம், கைது செய்யப்பட்ட நபர் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் “துபாய் வருண்” (Dubai Varun) மற்றும் மொஹமட் சித்திக் (Mohammed Siddiq), அத்துடன் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் “லெனா” (Lena) எனப்படும் திலிந்து சஞ்சீவ போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் – ஐரோப்பாவிற்கும் இடையே நிலவும் இராஜதந்திர நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (21) முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,800 அமெரிக்க டொலர்களைக் கடந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடருமானால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை 5,000 டொலர் எல்லையை எட்டக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை பெற்றுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனமான 'ட்ரிப் அட்வைசர்' (TripAdvisor) வெளியிட்ட அண்மைய அறிக்கைக்கு அமைய இந்த இடங்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களுக்கு மத்தியில் 5 ஆவது இடம் காலி நகருக்குக் கிடைத்துள்ளது.
அந்த அறிக்கையில் 13 ஆவது இடம் எல்ல (Ella) நகருக்கும், 22 ஆவது இடம் தங்காலை நகருக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வறிக்கைக்கு அமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடமாக இந்தோனேசியாவின் பாலி கருதப்படுவதுடன், இரண்டாவது இடம் மொரிஷியஸுக்கும் மூன்றாவது இடம் மாலைதீவுக்கும் கிடைத்துள்ளது.
கடந்த வருடம் உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், வரும் ஜனவரி 23ஆம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம், நேற்று (19) நடைபெற்ற சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம் கூறுகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகள் மூலம், மருத்துவர்களின் மற்றும் முழு சுகாதார சேவையின் உண்மையான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாததால், மருத்துவ சமூகத்தில் கடும் அதிருப்தி உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம், முன்மொழியப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்திருந்ததாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அந்த கலந்துரையாடல்கள் நடைப்பெறாததும், எட்டப்பட்ட உடன்பாடுகள் செயல்படுத்தப்படாததையும் காரணமாகக் கொண்டு, கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை –பொலீஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய
குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலீஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அனுராதபுர புனித நகரத்தின் அரிப்பு பாதை முதல் குறுக்கு தெரு பகுதியில், இலங்கை போலீஸின் இளநிலை போலீஸ் அதிகாரிகளின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்ட “ரஜரட்ட சிசில” இளநிலை பொலீஸ் குடியிருப்பை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது பேசிய பொலீஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய,
“பொலீஸ், சட்டவிரோத வியாபாரிகளும், குற்றவாளிகளும் ஒன்றாக இருக்க முடியாது. பொலீஸ் அதிகாரிகள் அந்த நிலைக்கு செல்ல முயன்றால், அதற்கெதிராக தீர்மானங்களை எடுக்க எந்த விதத்திலும் தயங்கமாட்டோம்” என வலியுறுத்தினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கிய முக்கிய 30 தேர்தல் வாக்குறுதிகளில், 10 வாக்குறுதிகள் கடந்த நவம்பர் மாதம் வரையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் 10 வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்காக, வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘அனுர மீட்டர்’ (Anura Meter) எனும் முன்னேற்ற கண்காணிப்பு கருவியின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் மூலம் இந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பின் கீழ், ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையின் மூலம் வழங்கிய 30 முக்கிய வாக்குறுதிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மீதமுள்ள 10 வாக்குறுதிகளில் 9 வாக்குறுதிகளில் கடந்த நவம்பர் மாதம் வரையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை எனவும், ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளதாகவும் வெரிட்டே ரிசர்ச் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வின் சிறப்பு அம்சமாக, கண்காணிக்கப்பட்ட 30 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகள் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த முழுமையான ஆய்வு ‘திட்வா’ சூறாவளி இலங்கையை தாக்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.