"டித்வா" புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது.
இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நிலவும் மழையுடனான வானிலை இன்று (30) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே அறிவிப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, பின்வரும் பகுதிகளில் உள்ள தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
கடுவெல - மாலபே வீதி
அத்துருகிரிய - மாலபே வீதி
மாலபே முதல் பத்தரமுல்லை வரையிலான வீதிகள்
பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களைச் சேர்ந்த 234,503 குடும்பங்களைச் சேர்ந்த 833,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 34,119 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் தற்போது 919 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவசர மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இந்திய மீட்புக் குழுவினர் இன்று (29) காலை இலங்கைக்கு வந்தனர்.
இந்திய விமானத்தில் வந்த இந்தக் குழுவில், நான்கு பெண்கள் மற்றும் 76 ஆண்கள் உட்பட 80 பணியாளர்களும் அடங்குவதுடன், நான்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் உள்ளன.
வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் பிற வானிலை தொடர்பான அவசரநிலைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு சிறப்பு உபகரணங்களை தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார்.
16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிட்டிருந்த போதும், எம்.கே.சிவஜாலிங்கம் நியமன பட்டியல் ஊடாக களமிறங்கியிருந்ததால் உடனடியாக உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.
ஏற்கனவே தெரிவான சபை உறுப்பினரொருவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டார்.
எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக தெரிவானதும் தற்காலிக காலத்திற்கு செயற்பட்ட தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்றிருந்த போதும், சிவாஜிலிங்கம் நியமனப் பட்டியல் ஊடாகவே அண்மையில் நகர சபை உறுப்பினராகப் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அதன் அளவு 315 மி.மீ என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (27) மு.ப. 8.30 மணி முதல் இன்று (28) அதிகாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் பதிவான மழைவீழ்ச்சி அளவுகளை கருத்திற்கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் பிரதேசத்தில் 305 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், மூன்றாவது அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் உள்ள கண்டியில் பதிவாகியுள்ளது, அதன் அளவு 223.9 மி.மீ ஆக உள்ளது.
இதன்படி, இலங்கையில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 200 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும், திருகோணமலை, பதுளை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்றும், இடைக்கிடையே மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளுக்கு கனமழை தொடர்பான ‘சிவப்பு எச்சரிக்கையை’ (Red Alert) இயற்கை அனர்த்தங்கள் முன் எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம்: 27 நவம்பர் 2025 காலை 8.30
செல்லுபடியாகும் நேரம்: 28 நவம்பர் 2025 இரவு 8.30 வரை
தீவிரமான மழை காரணமாக தற்போது அனைத்து மாவட்டங்களும் அதிக ஆபத்திற்குள் உள்ளன. ஏற்படக்கூடிய அபாயங்கள்:
• திடீர் வெள்ளப்பெருக்கு
• மண்சரிவு
• ஆறுகள் பெருக்கு அடைதல்
• பலத்த காற்று மற்றும் ஆபத்தான காலநிலை
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, உள்ளூர் நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பாக இருக்கவும். எச்சரிக்கையுடன் இருக்கவும்.
இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு அருகில்) மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் ஆழமான தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 200 மி.மீற்றருக்கும் அதிகமான மிக கனமழை பெய்யக்கூடும், வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது (60-70) கி.மீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும்.
கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் விபத்து அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொண்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (26) சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுமார் ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் ( 27) மற்றும் நாளைய தினம் ( 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது. புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.