web log free
November 29, 2023
kumar

kumar

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் அனைத்து அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதியமைச்சர் வழங்கிய தேநீர் விருந்தை சமகி ஜன பலவேக மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன புறக்கணித்துள்ளன.

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை சபை உணவக மண்டபத்தில் அனைவருக்கும் விசேட மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசிய அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் விசேட மதிய உணவை மறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்டமையும் விசேட அம்சமாகும். 

அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பும் மாதாந்திர ஓய்வூதியம் 2,500 ஆகவும் உயர்த்தப்படும் என ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

தீபாவளி பண்டிகை முன்னிட்டு களுத்துறை மாவட்டத்தில் உள்ள றைகம பெருந்தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் இன ரீதியாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இவர்களின் தொடர் அச்சுறுத்தலுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தலையீட்டால் இப்பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வந்ததது. 

இந்நிலையில், பெரும்பான்மை இனத்தவரின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், றைகம தோட்டத்திற்கு இன்று விஜயம் செய்த செந்தில் தொண்டமான், கேக் வெட்டி, பாட்டசு வெடித்து றைகம தோட்ட மக்களுடன் இணைந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார். 

மேலும் அம்மக்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, செந்தில் தொண்டமான் உத்தரவிட்டார்.

தேர்தல் காலத்தில் மாத்திரம் அரசியல் தலைமைகள் தமது தோட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில், தமக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் எங்களுடன் இணைந்து அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று தந்தது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மாத்திரமே என்று அத்தோட்ட மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

நாட்டைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிடுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் ஜனாபதி ரணில் விக்கிரமசிங்கவினால், பாராளுமன்றத்தில் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படும். 

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம், செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 21 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும். 

வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பர் 13ஆம் திகதி புதன்கிழமை வரையிலும் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 19 நாட்கள் தொடர்ச்சியாக விவாதம் நடைபெறும்.

டிசெம்பர் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.   

எதிர்வரும் தினங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (13) பிற்பகல் 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களிலும் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டைச் சூழ மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவுகள் அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்படாவிடின் அதற்கு ஆதரவளிப்பது குறித்து இருமுறை சிந்திக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு முன்னர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் ஜனாதிபதி அதனைச் செய்யத் தவறியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே குறைந்த பட்சம் அந்தந்த அமைச்சர்களின் பிரேரணையாவது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாவிட்டால் கிராமங்களுக்கு சென்று எதிர் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என பசில் ராஜபக்ஷவிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் நெருங்கிய உறவினர் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்காகவோ அல்லது அவரது சொத்தைப் பெறுவதற்காகவோ அவரை கொலை செய்தாரா என்பது தொடர்பில் விசாரணையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. 

அதனால் தினேஷ் ஷாப்டரின் காப்புறுதி உட்பட பல விடயங்களில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குற்றம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கொலையாளிகளை கண்டறிய கொலை மற்றும் கும்பல் கொள்ளை விசாரணைப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணையாளர்கள் விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல கோடி ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, ஷாப்டரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தக் கொலையைச் செய்தாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய அண்மையில் ஷாஃப்டருக்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் குழுவின் உறுப்பினர்கள், இது தொடர்பான அறிக்கை குறித்து கொலை மற்றும் கொள்ளை கும்பல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்கவை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது அவர் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகளின் அறிவிப்பின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

ரொஷான் ரணசிங்க தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், போதைப்பொருளை தனது பயணப் பையில் வைக்க முயற்சித்ததாகவும் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர்கள் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஹிருணிகா பிரேமச்சந்திர நோய்வாய்ப்பட்டிருந்தமையால் நீதிமன்றத்திற்கு வரவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியதால் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய பத்து சந்தேகநபர்களும் திறந்த நீதிமன்றில் முன்னிலையாகினர்.