web log free
June 20, 2026
kumar

kumar

இந்த ஆண்டுக்கான வெசாக் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு நகரில் நடைபெறவுள்ள வெசாக் வலயங்கள், தோரணங்கள் மற்றும் விளக்கு அலங்காரக் கண்காட்சிகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பை மையமாகக் கொண்டு, கொழும்புக் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, குருந்துவத்தை, தெமட்டகொட மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வெசாக் வலயங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதனை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, கொழும்பு நகரை மையமாகக் கொண்ட விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி, ஊவா மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டமை தொடர்பில், அன்றைய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அதன் தலைவர் பாஷ்வர குணரத்ன, முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசந்த அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். 

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் இவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்படுவதாக இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசேட மனு ஒன்றின் ஊடாக கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் அறிவித்ததைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற விருப்பம் இந்த நாட்டின் மக்களுக்கு இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தகைய தேவையோ விருப்பமோ இருப்பது திருடர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த அரசாங்கத்தை பல தசாப்தங்களாக கூட அசைக்க முடியாது என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின் காரணமாக தற்போதைய ஆட்சியும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நாட்டை முன்னேற்றக் கூடிய திறமையான ஒருவரிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“அனுர விரைவில் கோட்டாபயவை சந்திக்கும் நிலை ஏற்படும். நாட்டை நடத்தக்கூடிய ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை” என தெரிவித்துள்ளார்.

‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான இந்த ஆண்டின் மே மாத உதவித்தொகையை இன்று (29) பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 இலட்சம் முதியோர் பயனாளிகளுக்காக மொத்தமாக 3,493,915,000 ரூபாய் தொகையை அரசு விடுவித்துள்ளது.

கட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம் வருமாறு:

முதல் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதியோர் பயனாளிகளுக்காக 3,125,600,000 ரூபாய்.

இரண்டாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதியோர் பயனாளிகளுக்காக 368,315,000 ரூபாய்.

மேலும், அனைத்து பயனாளிகளும் தங்களுக்கு உரிய முதியோர் உதவித்தொகையை இன்று முதல் தங்களின் ‘அஸ்வெசும’ பயனாளர் வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த வாரியம் மேலும் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ், 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

குறித்த மீளாய்வுகளை ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு ​நேற்று (27) கூடிய போதே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் இலங்கைக்கு இம்மாதம் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு ஆதரவாக இந்த நிதி பயன்படுத்தப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தில் உருவாகியுள்ள சில நெருக்கடியான நிலைமைகளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்கி, அவரை மையமாகக் கொண்டு ஒன்றிணைவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அணியின் சிலர் உள்ளிட்ட பல தரப்புகள் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் “மாலிமாவ” அலுவலகம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

தற்போது அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லுவதில் சிரமமான நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கட்சி தாவுதலைத் தடுக்கும் வகையில் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர முயற்சிப்பதும் இந்த உள்கட்சிச் சிக்கலின் விளைவாக இருக்கலாம் என கருத்து வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மாலிமா அரசாங்கத்திலுள்ளவர்களே அல்லாமல், பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏதேனும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டால், தேவையான தலைமைத்துவத்தை வழங்க தயாராக இருக்குமாறு அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சஜித்துடன் இணைந்து பெரும்பான்மை பலத்தை வெளிப்படுத்தி, அவரை பிரதமராக நியமிக்கும் திட்டம் ஒன்று இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலரும் அவருடன் இணையத் தயாராக இருப்பதாகவும் சுஜித் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது என அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

நிலுவையிலுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் தேர்தல்கள் நடத்தப்படும்.

"மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது" என ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் அல்லது பல்வேறு தனிநபர்கள் வெளியிடும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு ஒருபோதும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை.

தேர்தல் நடத்துவது குறித்து அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது. வெவ்வேறு நபர்கள் கூறும் அறிக்கைகள் எங்களுக்கு முக்கியமல்ல.

தேர்தல்களை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் நடத்தப்படும் வேளையில் அதற்கான நிதியைத் திறைசேரி விடுவிக்கும் என்றார்.

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைகளில் இன்று (27) 12 மணி நேர நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (27) மாலை 7.00 மணி முதல் நாளை (28) காலை 7.00 மணி வரை நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய நீர்க்குழாய் மாற்றும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் பதிவாகியதாகக் கூறப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவன ரீதியான மற்றும் சட்ட சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (25) அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழுவுக்கு ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சமன்மலி குணசிங்க மற்றும் சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்ல ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.

ஹேமாலி வீரசேகர, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, சட்டத்தரணிகளான சாகரிகா அத்தவுட, நிலாந்தி கொட்டஹச்சி, நிலுஷா லக்மாலி கமகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, ஹசர லியனகே, ஹிருணி விஜேசிங்க மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் இந்த உபகுழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தின்போது, பொதுமக்களின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ள இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பங்கேற்புடன் 2026 ஜூன் 05ஆம் திகதி விசேட கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின்போது, குறித்த வழக்கின் முன்னேற்றம் குறித்தும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்குப் பொறுப்பான சட்டங்கள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Page 6 of 649
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd