web log free
April 23, 2024
kumar

kumar

எதிர்க்கட்சிகளுக்குள் பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளை இணைத்து அடுத்த மாற்று அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி, சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி வருவதாகவும், தேர்தலில் இணைந்து செயற்படக்கூடிய பொருளாதாரக் கொள்கைக்கு இணங்கும் குழுக்களுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொஹொட்டுவவில் உள்ள ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சமகி ஜன பலவேகவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஏனையவர்கள் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படுவது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் அதே வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தேர்தலை இலக்கு வைத்து ஒரு முன்னணியையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் மற்றுமொரு முன்னணியையும் உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயதான மிரிசேனவில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதித்தபோது பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது.

கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. 

இலங்கை தொடர்பிலான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை பிரதிநிதிகள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் வினவினோம்.

கூட்டத்தொடரில் ஐ.நாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணதிலக்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

முன்வைக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கைக்கு அமைய, இலங்கை சார்பில் பதிலளிக்கப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறினார்.

நாட்டில் தோல் நோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத அழகுசாதன பொருட்களை பயன்படுத்தியதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலங்களில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தோல் நோய் விசேட வைத்திய நிபுணர்களின் நிறுவனத்தின் தலைவர் விசேட வைத்தியர் சிறியானி சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அழகுசாதன பொருட்களை மாத்திரம் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுகள் உடலில் செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை ஏற்படுத்தும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பிலான விசேட வைத்தியர் இந்திரா கஹாவிட்ட குறிப்பிட்டார். 

தொல்பொருள் திணைக்கள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்த கருத்துகளை பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்துகள் தனியார் நிதி மூலம் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணியை குறைப்பதாக தேரர் தெரிவித்துள்ளார். 

மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் போதே அபயதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்குபுர புதன்கிழமை (14) தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 303.19 ரூபாவாகவும், விற்பனை விலை 318.99 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. 

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தை நடத்துவதற்கு இடையூறுகள் ஏற்பட்டால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் அவரது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சி சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு மொட்டு கட்சி தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதும் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் சம்பந்தப்பட்ட சிரேஷ்டர்கள் பங்கேற்கவில்லை.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்காக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை வழிநடத்த தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி  தெரிவித்துள்ளது. 

இதேவேளை மொட்டுக் கட்சிக்குள் ஜனாதிபதிக்கு ஆதரவான அணி மற்றும் எதிரான அணி என இரு பிரிவுகள் இருப்பதால் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளதாகவும் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஜனாதிபதியை காலால் இழுக்க் கூடாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரம் மீளும் என்ற பலமான நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன் உடுகம்பொல ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக சிலர் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படி ஏதும் இல்லை. எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். அந்த பதவிக்கு ஜனாதிபதியை நியமிப்பதற்கு கட்சி என்ற வகையில் நாங்கள் ஆதரவளித்தோம். அவரது அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் பார்த்து அந்த ஆதரவு வழங்கப்பட்டது. மற்றபடி நடக்கப்போவது இல்லை.

நாங்கள் இன்னும் 69 லட்சம் மக்களுக்காக நிற்கிறோம். தற்போதைய சூழ்நிலையால், அமைச்சர்கள் கிடைக்காததால், மூத்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஓராண்டுக்கு முன்பிருந்த நாட்டு நிலவரத்தையும், இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​அன்று நாம் எடுத்த முடிவு சரியானது என உணர்கிறோம். எனவே, இந்தத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும், அதன் காலால் இழுக்கப்படக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன். கட்சி என்ற ரீதியில் அடுத்த தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்று பார்ப்போம். இந்த தருணத்தில் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.

 

ஊவா மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் இடையே சந்திப்பு இடம்பெற்றது.

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையில் சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய துறைகளில் இணைந்து  அபிவிருத்திகளை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவாவை அண்மித்த மாகாணங்களின் எல்லைப் பிரச்சனைகள் குறித்தும்  பேசப்பட்டுள்ளது.

இணைந்து செயற்படுவதற்கான ஆரம்ப படியாக  கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறு ஊவா மாகாண ஆளுனர் முஸம்மில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.